காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவத் துறையில் நவீன வீடியோ எண்டோஸ் கோப்பி நோய்க் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறை மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்பெல்லாம் குரல்வளை சம்பந்தமான நோய்களைக் கண்டறிய நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து தடிமனான இரும்புக் குழாய்களைத் தொண்டை வழியாகச் செலுத்தி அதன் மூலம் குரல் வளையின் அசைவுகளைப் பரிசோதனை செய்து அதில் ஏற்பட்டுள்ள கட்டிகள் நிர்ணயம் செய்யப்பட்டன.
உள்தொண்டை மற்றும் குரல் வளையில் சந்தேகத்துக்கு இடமான கட்டிகள் வளர்ந்திருந்தால் அவற்றிலிருந்து திசு பரிசோதனை மற்றும் சதை துண்டு வெட்டி எடுப்பதற்காக நீளமான கொக்கிகளை இந்த இரும்புக் குழாய் வழியாக உள்ளே செலுத்தி பரிசோதனை துண்டுகள் எடுக்கப்பட்டன.
இந்தப் பழைய முறை வலி மிகுந்ததாகவும், சிக்கலானதாகவும் இருந்தது. ஆனால் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள வீடியோ எண் டோஸ்கோப்பி முறையானது நோயாளிக்கு எவ்விதமான வலியையும் ஏற்படுத்துவதில்லை.
இந்த நவீன வளையும் தன்மை கொண்ட குழாயை நோயாளியின் மூக்கு வழியாக தொண்டையினுள் செலுத்தி குரல் வளையை அந்தக் குழாய்ச் சென்றடைந்ததும், வீடியோ மானிட்டரில் நோயாளியின் குரல் வளையின் அசைவுகளையும், அதைச் சுற்றியுள்ள சளி, சவ்வுகளின் தன்மையையும் நாம் நேரடியாகத் துல்லியமாகக் கணக்கிட முடியும்.
நோயாளியின் தொண்டையிலிருந்து திசு சோதனை துண்டுகளை எடுக்க நினைத்தால் மெல்லிய கொக்கிகளின் மூலமாக எளிதில் வலியின்றி இதன் மூலம் எடுத்துவிட முடியும்.
அதுமட்டுமின்றி, தொண்டையில் சிக்கியிருக்கும் வெளிப் பொருள்களான மீன்முள் மற்றும் நாணயங்கள் போன்றவற்றையும் வீடியோவில் பார்த்துக் கொண்டே இந்தக் கருவி மூலம் வெளியே எடுத்து விட முடியும். பொதுவாக மூக்கு சம்பந்தமான நோய்களான மூக்கு சதை வளர்தல், மூக்கு அடைத்துக் கொள்ளுதல், மூக்கில் ரத்தம் வடிதல், அடினாய்டு கட்டி வளர்ச்சி, மூக்கு பின்பக்க சதை வளர்ச்சிகளைத் துல்லியமாக நிர்ணயம் செய்யவும், திசு பரிசோதனை துண்டுகள் எடுக்கவும் வீடியோ எண்டோஸ் கோப்பி மிகவும் எளிதாக பயன்படுகிறது.
உதாரணமாக குரலில் கரகரப்பு, குரல் வெளிவராமல் அடைத்துக் கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் மற்றும் தொழில் மூலமாக ஆசிரியர்கள், பொருள்களை கூவி விற்பவர்கள், மேடை பேச்சாளர்கள் போன்றவர்களுக்கு எளிதில் ஏற்படும் ஒரு வகை குரல்வளை குரல் நாண கட்டிகள் போன்றவற்றையும் எளிதில் ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை மேற் கொள்ளவும் இந்த எண்டோஸ் கோப்பி உதவியாக உள்ளது.
தொண்டை, குரல்வளை புற்று நோய் கட்டிகள் ஏற்பட்டிருந்தால் அதை ஆரம்ப கட்டத்திலேயே நிர்ணயம் செய்து கொண்டால் எளிதில் குணப்படுத்திவிட முடியும்.