டெங்கு காய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும்.
அறிகுறிகள் என்ன ?
டெங்கு பாதித்தவருக்கு 105 டிகிரி வரை காய்சல். கடுமையான தலைவலி, தலையில் அதிக சூடு, கருப்பு நிறத்தில் வாந்தி, வயிற்றுப் போக்கு, தோலில் தடிப்பு, காய்ச்சல் முற்றிய நிலையில் வலிப்பு, மூட்டுக்களில் வலி, உடல் துளைகளின் வழியாக ரத்தப்போக்கு, சீறுநீர்த் தடை போன்ற பிரச்சனைகள் இருக்கும்.
கடுமையான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு இருப்பதால் உடலின் நீர்ச்சத்து விரைவாக குறைந்து விடும் (De hydration) ஆபத்து உருவாகிறது. அபாய கட்டத்தை நெருங்கும் போது மூக்கு இதர உடல் துளைகள் வழியாக ரத்தக் கசிவு ஏற்படுகிறது. கடுமையான காய்ச்சலின் போது குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படுகிறது. டெங்கு வைரஸ் ரத்தத்தில் அதிவிரைவில் பெருகுகிறது. இந்த வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டுக்களை (Platelets) அழித்து விடுகிறது. இதன் காரணமாக ரத்தம் அதன் தன்மை மாறி துளைகளின் வழியாக வெளியேறுகிறது. மேலும் ரத்தம் உறைகிற தன்மையும் குறைந்து விடுகிறது.
முதல் உதவி :
“பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்சலுக்கு உரிய சிலவகைமருந்துகளைக் கொடுத்து விட்டு நீர்ச்சத்து குறைந்து விடாமலிருக்க பழரசங்கள், துய்மையான குடிநீர், இளநீர் ஆகியவற்றைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். சர்க்கரையும் உப்பும் கலந்த கரைசலையும் கொடுக்கலாம்” என்று மருத்துவர் மனோகரன் தெரிவித்தார். ரத்தத்தின் மூலப் பொருட்களுள் ஒன்றாகிய பிளேட்லெட்ஸ் வெகுவேகமாக குறைவதால் ரத்தத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட பிளேட்லெட்டை தனியே உடலில் ஏற்ற வேண்டும். பிளேட்லெட் கிடைக்காத போது ரத்தத்தையே ஏற்றலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப் பட்டவரின் நோய் எதிர்ப்பாற்றல் குன்றிவிடுவதால் அவருக்கு வேறு வகையான தொற்றோ அல்லது பாதிப்போ ஏற்பட்டால் அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிர்சேதம் ஏற்படலாம் என்றும் தெரிவித்தனர்.
மொத்தத்தில், வீட்டில் கொசுக்கள் அண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.