இளைஞர்களில் யாரிடம் பழகும்போதும் அவர் ஒருதலை காதலோடு தன்னை அணுகும் சூழ்நிலை உருவாகலாம் என்பதை நினைவில் வைத்திருங்கள். அதனால் தொடக்கத்தில் இருந்தே நெருங்காமலும், விலகாமலும் ‘நான் எல்லோரிடமும் இப்படித்தான் நட்போடு பழகுவேன்’ என்பதை சுட்டிக்காட்டிவிடுங்கள்.
தெரிந்த இளைஞராக இருந்தாலும், அறிமுகமற்ற இளைஞராக இருந்தாலும் அவர்களுக்கு ஆபத்து என்றால் உதவுங்கள். உதவிக்கு அவர்கள் நன்றி சொல்வதோடு அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளிவைத்துவிடுங்கள். ‘உதவியதற்கு அவர்மீது கொண்டிருக்கும் காதல் காரணம்’ என்று அவர் கருதிக்கொள்ள வாய்ப்புகொடுத்துவிடாதீர்கள். காதல் பற்றியோ,கல்யாணம் பற்றியோ பேசக்கூடிய சூழ்நிலை ஏற்படும்போது அவைகளை பற்றி பேசாமலே தவிர்க்கவேண்டிய தில்லை.
அத்தகைய பேச்சை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு, ‘இப்போது படிப்பது மட்டுமே நம் வேலை. காதலிப்பதல்ல. படித்து முடித்து வேலை கிடைத்த பின்புதான் காதல், கல்யாணம் பற்றி எல்லாம் சிந்திக்கவேண்டும். எனது கொள்கையும் அதுதான்..’ என்று தெளிவாக கூறிவிடுங்கள். தற்காலிக சுய நலத்திற்காக இளைஞர்களை ஒருபோதும் பயன்படுத்திக்கொள்ளாதீர்கள்.
உங்கள் குடும்ப விஷயங்களிலும், அந்தரங்க விஷயங்களிலும் அவர்களை தலையிட அனுமதிக்கும்போது, நீங்கள் அவரை காதலிப்பதாக அவர் புரிந்துகொள்ளக்கூடும். அதுவே பிற்காலத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும். பரிசுகளுக்கும், பண உதவிகளுக்கும், பொழுதுபோக்குகளுக்கும் ஆண்களை பயன்படுத்திக்கொள்ளாதீர்கள்.
ஒரு பெண் தன்னிடம் மனம் விட்டுபேசினாலே அது காதல்தான் என்று தப்பாக உணர்ந்துகொள்ளும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். காதல் அன்பால் நிறைந்தது. அது ஒருபோதும் யாரையும் அழிக்காது. அதனால் ஒருதலை காதல் என்றாலும், காதல் தோல்வி என்றாலும் விட்டுக்கொடுத்து சென்றுவிடுங்கள். காதலை ஏற்காதவரை அழிக்கவேண்டும். தானும் மடியவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபடுங்கள். நாம் விலங்குகள் அல்ல! அன்பால் உருவான மனிதர்கள்!!