பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான ரெசிபி. அதிலும் செட்டிநாடு ஸ்டைல் பால் பணியாரத்தை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் வயிறு நிறைவதோடு, அவர்கள் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
உங்களுக்கு பால் பணியாரம் செய்யத் தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படித்து வாருங்கள். இங்கு செட்டிநாடு பால் பணியாரத்தின் ஈஸியான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
Chettinad Paal Paniyaram
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
தேங்காய் பால் – 1 கப்
காய்ச்சிய பால் – 1/4 கப்
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் போட்டு 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். மாவானது கெட்டியாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, டிஷ்யூ பேப்பரில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பௌலில் தேங்காய் பால், காய்ச்சிய பால், ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, அதில் பொரித்து வைத்துள்ளதை சேர்த்து 5-10 நிமிடம் ஊற வைத்து பின் பரிமாறினால், சுவையான செட்டிநாடு பால் பணியாரம் ரெடி!!!