கர்ப்பமாயிருக்கும்போது போலிக் அமிலம் உட்கொள்ள வேண்டும் என்பது இப்பொழுது பரவலாகத் தெரிந்த விடயம்தான். கர்ப்பணி நலம்பேணும் கிளினிக்குகளில் இது அனைத்துத் தாய்மார்களுக்கும் வழமையாக வழங்கப்படுகிறது. ஆனால் தற்போதைய ஆய்வுகளின்படி மற்றைய விட்டமின்களும் அவசியம் எம்பது தெரிய வந்துள்ளது.
போலிக் அமிலம் என்பது என்ன?
அது ஒரு வகை விட்டமின் ஆகும். உயிர்ச்சத்து பி9 (போலிக் அமிலம் அல்லது இலைக்காடி) என அழைக்கப்பெறுகின்றது
எத்தகைய பாதிப்பு
இது எமது உடற்கலங்களில் உள்ள நிறமூர்த்தங்களின் (Chromosome) நியுகிலிய அமில உற்பத்திக்கு இவ் விற்றமின் மிக அவசியமானதாகும்.
எனவே கர்ப்பகாலத்தில் தாய்க்கு இது குறைபாடாக இருந்தால் கருவின் நரம்பு மண்டல வளர்ச்சி பாதிப்படையலாம்.
இதனால் மண்டை ஓடு, முள்ளந்தண்டு ஆகியவற்றில் பிறவிக் குறைபாடுகள் ஏற்படும்.
இது பாரிய பிரச்சனை என்பதால்தான் இக் குறைபாட்டைத் தடுப்பதற்கு அனைத்துக் கர்ப்பிணிகளுக்கும் போலிக் அமில மாத்திரைகள் (B9) வழங்கப்படுகிறது.
அத்துடன் அது எமது இரத்தத்தின் செறிவிற்கும் அவசியமானது. அதாவது செங்குருதிக் கலங்கள் எலும்பு மச்சையில் உற்பத்தியாவதற்கு அவசியமானது. அதாவது இரத்தசோகை ஏற்படாமல் தடுக்கத் தேவையாகும்.
போலிக் அமிலம் எனப்படும் B-9 மாத்திரமன்றி மற்றைய விட்டமின்களும் கர்ப்பிணிகளுக்கும், கருத்தரிக்க இருப்போருக்கும் அவசியம் என தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன.
விட்டமின்கள் எனப்படும் உயிர்ச்சத்துக்கள் A B C D E K H என ஏழு வகைகள் இருக்கின்றன
இவற்றில், நீரில் கரையக்கூடிய உயிர்ச்சத்துகளான B யும் C யும் உடலில் சேமித்து வைக்கப்படுவதில்லை. உடல் தனது தேவைக்கு மேலதிகமாகக் இருப்பனவற்றை சிறுநீருடன் வெளியேற்றி விடும். அதனால் இவை இரண்டும் தினமும் தேவைப்படுகின்றது.
கர்ப்ப காலத்தில் கருவின் சமச்சீரான வளர்ச்சிக்கு இவை மிக முக்கியமாகத் தேவைப்படுவதாலும், இவை உடலில் சேமித்து வைக்கப் படாத காரணத்தாலும் இவ் விட்டமின்களை நாள்தோறும் எடுப்பது அதி முக்கியம்.
விட்டமின் B மேலும் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
உயிர்ச்சத்து பி1 – தயமின்
உயிர்ச்சத்து பி2 – இரைபோஃபிளவின்
உயிர்ச்சத்து பி3 – நியாசின் அல்லது நியாசினமைட்
உயிர்ச்சத்து பி5 – பன்டோதீனிக் அமிலம்
உயிர்ச்சத்து பி6 – பிரிடொக்சின், பிரிடொக்சல் அ;;அதுr பிரிடொக்சாமைன்
உயிர்ச்சத்து பி7 – பயோட்டின்
உயிர்ச்சத்து பி9 – போலிக் அமிலம் அல்லது இலைக்காடி
உயிர்ச்சத்து பி12 – பலதரப்பட்ட கோபாலமின்கள்; பொதுவாக உயிர்ச்சத்து மாற்றீடுகளில் சையனோகோபாலமின் எனும் வடிவத்தில்
ஏன் குறைபாடு ஏற்படகிறது
எமது உடலில் போலிக் அமிலக் குறைபாடு ஏற்படுவதற்கு போசணைக் குறைபாடே முக்கிய காரணமாகும். அத்துடன் கர்ப்பமாயிருக்கும் போதும் பாலூட்டும் போதும் போலிக் அமிலத்தின் தேவை அதிகரிக்கிறது. அந்நேரத்தில் அதன் குறைபாடு இருந்தால் கரு பாதிப்படைவதுடன் தாயும் இரத்த சோகைக்கு ஆளாவாள்.
குறைபாடு எற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும்.
இதைத் தடுப்பதற்கு போலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
ஈரல், இறைச்சி, பால், பாற் பொருட்கள். முட்டை, தானியங்கள், கீரைவகைகள் ஆகியவற்றில் அதிகமாக இருப்பதால் அவற்றை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
சாதாரணமாக ஒருவருக்கு தினமும் 400 மைக்ரோ கிராம் போதுமானது. ஆயினும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தினமும் 5 மி.கி போலிக் அமிலம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு கொடுப்பதால் நரம்பு மண்டலப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியம் 72 சதவிகிதத்தால் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
எப்பொழுது எவ்வளவு காலத்திற்கு?
கரு தங்குவதற்கு ஒரு மாதம் முன்னரே ஆரம்பித்து முதல் 12 வாரங்களுக்கு தவறாது உட்கொள்வது மிகவும் அவசியமாகும். ஆயினும் தொடர்ந்து கர்ப்ப காலம் முழுவதும் உட்கொள்வது நல்லது. குழந்தை பிறந்த பின்னரும் தொடர்ந்து 6மாதங்கள் தொடர்ந்தால் இரத்தசோகை ஏற்படாமல் தடுக்க உதவும்.
இங்கு பலரும் மாதவிடாய் நின்று கர்ப்பம் என்பது நிச்சமாகிய பின்னரே உபயோகிக்கத் தொடங்குகிறார்கள். இது நல்ல முறை அல்ல. கரு தங்க முன்னரே உபயோகிக்க ஆரம்பிப்பதே சிறப்பானது.
எந்தப் பெண்ணும் மாதவிடாய் தள்ளிப் போன பின்னரே தான் கர்ப்பமாகியதை உணர்வாள். ஆனால் மாதவிடாய் கடப்பதற்கு பதின்னான்கு தினங்களுக்கு முன்னரே அவளது சூலகத்திலிருந்து முட்டை வெளியாகி அது ஆணின் விந்துடன் கலந்து கரு உற்பத்தியாகிறது.
எனவே மாதவிடாய் தள்ளிப் போகும்வரை காத்திருப்பது உசிதமல்ல. பெண்கள் திருமணமாகி கர்ப்பம் தங்குவதற்குத் தாங்கள் தயாராகும் போதே ஆரம்பிக்க வேண்டும். குறைந்தது ஒருமாதம் முன்னரே ஆரம்பிப்பது சிறப்பானது.