உடலில் இரத்தத்தை சுத்தம் செய்யும் ஒரு முக்கிய உறுப்பு தான் சிறுநீரகம். இந்த சிறுநீரகம் தான் உண்ணும் உணவில் உள்ள கழிவுகளை பிரித்தெடுக்கவும் செய்கிறது. நீங்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மற்றும் இரத்த சுத்திகரிப்புக்காக டையாலிசிஸ் சிகிச்சை எடுத்து வந்தால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில உணவுகள் சிறுநீரகத்தில் கழிவுகளை அதிக அளவில் தேக்கி பின் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும்.
எனவே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் உப்பை குறைப்பதுடன், புரோட்டீன் குறைவாக உள்ள உணவுகள், பொட்டாசியம் குறைவாக உள்ள உணவுகள் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அந்த உணவுப் பொருட்கள் எவையென்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சில உணவுகளை பட்டியலிட்டுள்ளது.
காலிஃப்ளவர்
காலிஃப்ளவர் சிறுநீரக நோயாளிகளுக்கு மட்டுமின்றி, நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளுக்கும் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். ஏனெனில் இதில் பொட்டாசியம் குறைவாக இருப்பதோடு, வைட்டமின் சி, ஃபோலிக் ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை சிறுநீரக நோயாளிகளுக்கு அவசியம் வேண்டிய சத்துக்களாகும். மேலும் இந்த காய்கறியை சிறுநீரக நோயாளிகள் உட்கொண்டு வந்தால், அவை சிறுநீரகத்தில் தங்கும் நச்சுக்களை வெளியேற்றி, சிறுநீரகத்தில் அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கும்.
கேரட்
உயர் இரத்த அழுத்தம் தான் சிறுநீரக நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பிற்கு முக்கிய காரணம். எனவே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கேரட்டை அன்றாடம் உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
ஆப்பிள்
ஆப்பிள் சிறுநீரகங்களுக்கு மட்டும் நல்லதல்ல. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மற்ற உறுப்புக்களையும் பாதுகாக்கும் சக்தி கொண்டது. ஆய்வு ஒன்றின்படி, ஆப்பளில் பெக்டின் என்னும் சிறுநீரக பாதிப்பைக் குறைக்கும் பொருள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே அன்றாடம் ஆப்பிளை உட்கொண்டு வருவது மிகவும் நல்லது.
வெங்காயம்
வெங்காயம் கூட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற உணவுப் பொருளாகும். எப்படியெனில் வெங்காயத்தில் உள்ள புரோஸ்டாகிளான்டின், இரத்தத்தின் பாகுநிலையை குறைத்து, உயர் இரத்த அழுத்ததையும் குறைக்கும். இதனால் சிறுநீரகத்தில் அழுத்தம் ஏற்படாமல் இருக்கும்.
பூண்டு
பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றில் பூண்டின் சாறு, சிறுநீரக குழாய்களில் காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் சக்தி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.