நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் அரிசி அல்லது கோதுமை இவை இரண்டில் எந்த உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது குறித்து கிண்டியில் உள்ள டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
அரிசியை நாம் முற்றிலுமாக தவிர்த்து விட முடியாது. ஏனெனில் நம்முடைய தென்னிந்திய உணவு வகைகளில் சாதம், தோசை, இட்லி போன்ற அனைத்து உணவுகளுமே அரிசியால் செய்யப்படுவதாகும். அதனால் அரிசியை முழுவதுமாக தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.
அரிசியையும், கோதுமையும் ஒப்பிட்டு பார்க்கும்போது இரண்டிலுமே கார்போஹைட்ரேட் தான் உள்ளது. ஆனால் அரிசியுடன் ஒப்பிடும்போது கோதுமை உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை கூடும் அளவு சற்று குறைவாக இருக்குமே தவிர (சர்க்கரையை பொறுத்தவரை) அதிகளவு வித்தியாசம் இருக்காது. ஆனால் இது இரண்டிலும் ஊட்டச்சத்துக்களில் வித்தியாசம் உள்ளது.
அதாவது கோதுமையில் புரோட்டீன் சற்று அதிகமாக உள்ளது. மற்றபடி வேறு எந்த வித்தியாசமும் இல்லை. அதனால் நீரிழிவு நோயாளிகள் சாதம், தோசை, இட்லி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அரிசியோ கோதுமையோ எதுவாக இருந்தாலும் கார்போஹைட்ரேட்டின் அளவை குறைத்து அதற்கு பதிலாக உணவில் அதிக அளவு காய்கறிகளை சேர்த்து: கொண்டு புரோட்டீன் அளவை அதிகப்படுத்துவது நல்லது என்று கூறினார்.
Source : maalaimalar