காலையில் இட்லிக்கு மிகவும் சுவையான சட்னி அல்லது துவையல் செய்ய நினைத்தால், தேங்காய் வடகத் துவையலை செய்யுங்கள். இது மிகவும் சுவையுடன் இருப்பதால், எத்தனை இட்லி சாப்பிடுகிறோம் என்பதே தெரியாதது. ஏனெனில் அந்த அளவில் ருசியாக இருக்கும்.
மேலும் இந்த துவையலை காலையில் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அந்த தேங்காய் கறிவடகத் துவையலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
Coconut Vadaga Thogayal
தேவையான பொருட்கள்:
வடகம் – 1 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 4-5
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம் – 4-5
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய் மற்றும் வடகம் சேர்த்து மிதமான தீயில் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கி, பின் துருவிய தேங்காயை சேர்த்து, 30 நொடி வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பின்பு மிக்ஸியில் வறுத்து வைத்த வரமிளகாய், தேங்காய், வெங்காயம், புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் வடகத்தை சேர்த்து, தண்ணீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது சுவையான மற்றும் மணமான தேங்காய் கறிவடகத் துவையல் ரெடி!!! இது தோசை, இட்லி போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும்.