குழந்தைகள் சமூகத்தை பார்த்து வளர்கிறார்கள் என்பார்கள். ஆனால், அவர்கள் சமூகத்தை பார்க்கும் பார்வையை பெற்றோரிடம் இருந்து தான் பெறுகிறார்கள். பெற்றோர் என்ன பார்வை கொண்டிருக்கிறார்களோ, அப்படி தான் குழந்தைகளும் வளர்வார்கள்.
எனவே, தவறானவற்றை குழந்தைகள் முன்னால் செய்வதும் தவறு, பேசுவதும் தவறு. அந்த வகையில் வீட்டில் குழந்தைகள் முன் பெற்றோர் அவர்கள் காதுப்பட பேசக் கூடாத ஆறு விஷயங்கள் பற்றி இங்கு காணலாம்…
ஆபாசம்!
குழந்தைகள் காதுப்பட ஆபாசமான வார்த்தைகள், தீய சொற்கள், சபிப்பது போன்ற செயல்களில் பெற்றோர் ஈடுபட கூடாது. இவை பிஞ்சி நெஞ்சில் நஞ்சை விதைப்பது போன்ற காரியமாகும்.
சண்டை!
கணவன் – மனைவி; உறவினர்க்கள்; அக்கம்பக்கத்து வீட்டாருடன் குழந்தைகள் முன் சண்டையிட வேண்டாம். இது குழந்தைகள் மத்தியிலும் பகைமை வளர ஒரு காரணியாக அமையும்.
புறம் பேசுதல்!
உறவினர்கள் ; நண்பர்கள் வீட்டுக்கு வந்தால், முகத்திற்கு முன் பெருமையாகவும், சென்றவுடன் இகழ்ந்தும் பேச வேண்டாம். இது இரு தவறான அணுகுமுறை. இதை குழந்தைகள் மனதிலும் பதிக்க வேண்டாம்.
பொய் பேசுதல்!
நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ குழந்தைகள் முன்னிலையில் பொய் பேசுவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். பொய் என்ற ஒரு தீய பழக்கம், இதர அனைத்து கேட்ட பழக்கங்களும் மனதில் வளர உரமாகிவிடும்.
எதிர்மறை!
குழந்தைகள் முன்னிலையில் அல்லது குழந்தைகளுடன் எதிர்மறையாக பேச வேண்டாம். உன்னால் முடியாது, நீ இதை செய்ய முடியாது, நீ தோற்றுவிடுவாய், வெற்றி பெறுவது கடினம் போன்ற சொல்லாடல் பேச்சை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது.
தரம் தாழ்த்தி பேசுதல்!
ஏற்ற தாழ்வு, பெரியவர், சிறியவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என வேறுபாடு பார்த்து தரம் தாழ்த்தி பேசும் வழக்கத்தை பெற்றோர் தவிர்க்க வேண்டும். அடுத்த தலைமுறையாவது ஏற்றத்தாழ்வு எனும் நோய் தொற்று இல்லாமல் வளரட்டும்.