எத்தனை மாதங்களுக்குத் தாய்ப்பால் புகட்டப்பட வேண்டும்?
பிறந்த குழந்தைகளுக்குத் தரப்படும் முதல் தடுப்பு மருந்து, தாய்ப்பால். இதில் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து சத்துகளும், அதனுடன் சேர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய அம்சங்களும் நிறைந்துள்ளன.
ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து 6 மாதங்கள் வரை கட்டாயம் தாய்ப்பால் வழங்கப்பட வேண்டும். தாய்ப்பால் மட்டுமே வழங்கப்பட வேண்டும், தண்ணீர் கூட தேவையில்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவுகளை வழங்கலாம். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பரிந்துரையின்படி ஒரு குழந்தைக்குக் குறைந்தபட்சம் அதன் 2 வயது வரை அவசியம் தாய்ப்பால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதிகபட்சம் 5 வயது வரை தாய்ப்பால் புகட்டலாம். சிலர் தங்கள் குழந்தைக்கு ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்குள்ளாகவே தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்திவிடுகிறார்கள். இவ்வாறு நிறுத்தப்படும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பலவீனமாகக் காணப்படுவார்கள்.
சிசேரியன் பிரசவம் எனில் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்குமா?
இல்லை. பொதுவாக பிரசவமானவுடன் வெளிப்படும் தாய்ப்பாலுக்கு `கொலஸ்ட்ரம்’ என்று பெயர். இது அடர் மஞ்சள் நிறத்தில் கெட்டியாக இருக்கும். குழந்தை பிறந்ததிலிருந்து முதல் 3 நாள்களுக்கு இந்த கொலஸ்ட்ரம் சுரக்கும். இது சிறிதளவு மட்டுமே சுரக்கக்கூடியது. ஆனால், அதை அறியாத பலர், தங்களுக்குப் பால் சுரப்பு குறைவாக இருக்கிறது என்று நினைத்துவிடுகிறார்கள். குழந்தை பால் குடிக்கத் தொடங்கியவுடனேயே அதன் தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில் தாய்க்கு பால் சுரக்கத் தொடங்கிவிடும். குழந்தை பிறந்த அரை மணிநேரத்தில் அதற்கு முதல் பால் கொடுத்துவிடுவது நல்லது.
எந்தெந்த உடல்நலக் குறைபாடு உள்ள தாய்மார்கள் தாய்ப்பால் புகட்டக்கூடாது?
ஹெச்.ஐ.வி இருக்கும் பெண், மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொண்டிருக்கும் பட்சத்தில் அவர் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்ட நம் நாட்டில் அனுமதி உண்டு. ஒரு பெண் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, போதைப்பொருள்கள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தாலோ அவர் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டக்கூடாது. கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற சிகிச்சையில் இருப்பவர்களும் தாய்ப்பால் புகட்டக்கூடாது.
கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் பெண் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் வழங்கலாமா?
ஒரு பெண்ணுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும், தொற்று ஏற்பட்டு குணமாகியிருந்தாலும் அவர் தாராளமாக தன் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டலாம். கொரோனா தொற்றுள்ள தாயின் உடலில் அந்த வைரஸுக்கு எதிராக உற்பத்தியாகும் ஆன்டிபாடிகள் தாய்ப்பாலின் மூலம் குழந்தையின் உடலில் சென்று சேர்வதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. இதனால் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், கொரோனா தொற்றுக்குள்ளான பெண் குழந்தைக்குத் தாய்ப்பால் தரும்போது கைகளைத் தூய்மையான நீரில் நன்றாகத் துடைத்துவிட்டு பால் தருவது, மாஸ்க் அணிந்திருப்பது போன்ற சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாகப் பின்பற்ற வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின்படி பிறந்த குழந்தைக்கு அதன் 6 மாதம் வரையில் தாய்ப்பால் மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். இந்நேரத்தில் பால் சுரப்பு இல்லை என்ற காரணத்தினாலோ, குழந்தையின் தாயால் தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ உடனே பசும்பால், பால் பவுடர் போன்றவற்றை மாற்று உணவாகத் தருவதற்கு பதிலாக, `தாய்ப்பால்’ வங்கியிலிருந்து பாலை தானமாக வாங்கி குழந்தைக்குத் தரலாம். அல்லது உறவினர்களில் யாராவது பாலூட்டும் தாய்மார்கள் இருந்தால் அவர்களின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்கச் செய்யலாம்.
6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கப்படும் உணவுகளைக் கடைகளில் வாங்கும்போது அது தயாரிக்கப்பட்ட தேதி, அவற்றில் அடங்கியிருக்கும் பொருள்கள், அரசின் அங்கீகாரம் போன்றவற்றை ஆராய்ந்து வாங்க வேண்டியது அவசியம்.