கரு உருவாகி 25-ல் இருந்து 30 மணி நேரத்துக்குப் பிறகு கருவில் உள்ள ஒரு செல் பிரிந்து இரண்டு செல்கள் ஆகும். சில மணி நேரம் கழித்து இரண்டு நான்காகும், நான்கு எட்டாகும். இப்படி எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே போகும். இவை எல்லாமே ஃபெலோபியன் குழாயில்தான் நடக்கும்.
ஐந்தாம் நாள் கருவானது ஃபெலோபியன் குழாயில் இருந்து நகர்ந்து வந்து, கருப்பையில் வந்து உட்கார்ந்துகொள்ளும். முதல் மூன்று மாதங்களில் தாய்க்கு வாந்தி, குமட்டல் போன்ற மசக்கை அறிகுறிகள் இருக்கும். கர்ப்பம் தரித்த 14-ம் நாளில் இருந்து மூன்றாவது மாதம் வரை தாயின் கருவறையில் உள்ள கருவுக்கு ‘எம்பிரியோ’ என்று பெயர்.
மூன்றாவது மாதத்துக்கு அப்புறம் ‘ஃபீட்டஸ்’ என்று பெயர். கருவில் உள்ள குழந்தைக்கு முக்கியமான உறுப்புகள் எல்லாம் உருவாகிற தருணம் இது. எனவே, கர்ப்பிணிப் பெண் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும். மூன்று மாதத்துக்குப் பிறகு கருவைச் சுற்றி ‘ஆம்னியான்’ (Amnion) எனப்படும் நீர் நிறைந்த பனிக்குடம் உருவாகும். நடப்பது, உட்கார்வது, படுப்பது எனத் தாயின் உடல் அசைவுகளின்போது கருவில் உள்ள குழந்தை சிதைவுறாமல் இருக்கவே இயற்கை இந்த ஏற்பாட்டைச் செய்கிறது.
எனவே, ஒரு பெண் கர்ப்பம் ஆனது உறுதியானவுடன், அந்தத் தம்பதி தங்களின் செக்ஸ் நடவடிக்கைக்குத் தற்காலிகமாக லீவு கொடுத்துத்தான் ஆக வேண்டும். மாறாக முதல் மூன்று மாதங்களில் உடல் உறவில் ஈடுபட்டால் வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமாக உருவாவதில் சிக்கல், பனிக்குடம் உடைதல் போன்ற பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.
மூன்றாவது மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரை உறவில் ஈடுபடலாம். முதல் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்திருந்தால், அதற்கு அடுத்த கர்ப்பக் காலத்தில் கட்டாயம் உடல் உறவைத் தவிர்க்க வேண்டும்.