குழந்தைகளுக்கு பன்னீர் மற்றும் கார்ன் இரண்டுமே மிகவும் பிடிக்கும். மேலும் அந்த உணவுப் பொருட்களும் மிகவும் ஆரோக்கியமானவை. ஆகவே அந்த உணவுப்பொருட்களை குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளோருக்கும் பிடித்தவாறு செய்ய வேண்டுமானால், அவற்றைக் கொண்டு குருமா செய்யுங்கள்.
அதிலும் இங்கு அந்த ரெசிபியின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ரெசிபியின் செய்முறை வீடியோவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் – 3/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
சோளம் – 1/4 கப் (வேக வைத்தது)
வெங்காயம் – 1/2 கப் (நறுக்கியது)
தக்காளி – 1 கப் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அரைத்த தக்காளி – 1 டேபிள் ஸ்பூன்
தயிர் – 1/2 கப் (நன்கு அடித்தது)
எண்ணெய் – 5 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
தேங்காய் பேஸ்ட்டிற்கு…
தேங்காய் – 1/2 கப் (துருவியது)
கசகசா – 2 டீஸ்பூன்
முந்திரி – 8
பச்சை மிளகாய் – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காயை போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் கசகசா, முங்நதிரி சேர்த்து 2-3 நிமிடம் மிதமான தீயில் வறுக்க வேண்டும்.
பின்னர் அதனை இறக்கி குறிர வைத்து, பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பன்னீரை சேர்த்து பொன்னிறமான வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் மீண்டும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பிறகு வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயம் மற்றும் தேங்காய் பேஸ்ட்டை போட்டு, தக்காளியையும் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
பின்னர் அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கிளறி, 1/4 கப் தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, மத்து கொண்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
பின் மீண்டும் அந்த மசித்த கலவையை அடுப்பில் வைத்து, அதில் அரைத்த தக்காளி மற்றும் தயிர் சேர்த்து 2 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
அடுத்து அதில் வேக வைத்துள்ள சோளம் மற்றும் வறுத்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பன்னீர் கார்ன் குருமா ரெடி!!! இந்த குருமாவானது சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு நன்றாக இருக்கும்.