மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை ஆகியவற்றை சரியாக பின் பற்றுவதே, தாயும், சேயும் நலமாக இருக்க உதவுகிறது. இந்த காலகட்டத்தில் தான் புத்தகம் படிப்பது, நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்வது, சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுவது என, குழந்தையின் நலனை காப்பதற்கான முயற்சியின் அடித்தளம்.
இதில், திரவ உணவுகளான பால், இளநீர் , பழம் மற்றும் பழச்சாறுகள் ஆகியன அதிகமாக எடுத்துக் கொள்ளவேண்டும். முதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவு வகைகளை எடுக்க கொள்ள வேண்டும். இவை பிரசவகாலத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது. இந்த கால கட்டத்தில் சிசுவின் உடலில் கை, கால்கள், தோல் மற்றும் முடி வளர்ச்சி நடைபெறும். இம்மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட நெய், ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.
மூன்றாம் மாத முடிவிலிருந்தே சிசு, உணவை தாயின் ரத்தத்தின் மூலம் ஏற்றுக் கொள்கிறது. ஆகவே இருவர் உணவும், ஒரே உணவாக அமைகிறது. கொழுப்பு, காரம், உப்பு மற்றும் நீரைசற்று குறைத்து, அரிசி கஞ்சியை நெய்யுடன் சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் சிறிதளவு துளசியை உட்கொண்டு வந்தால் பிரசவவலி குறையும். ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும், எதிர் காலத்தில் மனதாலும், உடலாலும் ஊனமில்லாமல் பிறந்துவளரவும், கருவுற்ற பெண்கள் சில நடை முறைகளைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
அவை:
கர்ப்பிணிகள் சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக்கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. ஆகவே, மாத்திரை உட்கொள்ளும் அளவிற்கு, காய்கறிகளையும் சேர்த்து கொள்வது அவசியம். மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம். கர்ப்பிணிகள் சரியான நேரத்திற்கு, உணவு அருந்த வேண்டும். சாப்பிட்டவுடன் தூங்கக்கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்த வரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.