”ப்ளஸ் ஒன் படிச்சுட்டு இருக்கிறப்பவே கல்யாணம் கட்டி வெச்சுட்டாங்க. கணவர் நடராஜனைக் கைபிடிச்சு, சென்னை பட்டணத்துக்கு வந்துட்டேன். மனசு விட்டுப் போகாம தொடர்ந்து முயற்சி செஞ்சதுல, ஜுவல்லரி பிஸினஸ்ல நல்லா சம்பாதிக்கிறேன். இதைப் பத்தி காலேஜ்கள்ல கிளாஸ்கூட எடுத்துட்டு இருக்கேன்…”
– பளிச்சென சொல்கிறார், மாரியம்மாள்.
ஆரம்பத்தில் எட்டு வருடங்கள், வேலைக்குப் போய் வந்தவருக்கு, பிறகுதான் ‘சொந்த தொழில்’ எனும் எண்ணம் வந்திருக்கிறது. தொடர் முயற்சிகளால் ஜுவல் மேக்கிங், எம்ப்ராய்டரி என்று கற்றுக் கொண்டு, நிறைவான வருமானம் ஈட்டி வருகிறார்.
தூத்துக்குடி கிராமம் ஒன்றில் விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்… தான் தயாரித்த ஃபேஷன் நகைகளை கையில் ஏந்தி, சென்னை மாநகரில் கடை கடையாக ஆர்டர் கேட்டு அலைந்திருக்கிறார். நகைகள் பிடித்துப் போய் ஆர்டர் கொடுத்தவர்கள், இன்று வரை தொடர்கிறார்கள். கூடவே, எம்.ஓ.பி, எத்திராஜ், எம்.ஜி.ஆர் – ஜானகி என பல கல்லூரிகளில் நகை செய்வது பற்றிய பயிற்சி வகுப்பு எடுக்கிறார்.
”என் பொண்ணு அஜிதா பார்வதி, ஈரோடுல இன்ஜினீயரிங் ரெண்டாம் வருஷம் படிக்கறா… தச்சு வேலை பாத்துட்டிருந்த கணவர், ஹார்ட் பிராப்ளத்தால அதை விட்டுட்டாரு. எல்லா சுமையும் இப்போதைக்கு என் முதுகுல. ஆனாலும், சந்தோஷமா சுமக்கிறேன். டெய்லரிங் கத்துக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. அதையும் சீக்கிரத்துல கத்துக்கிட்டு வருமானத்துக்கான வழியா மாத்துவேன்” என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார் 35 வயது மாரியம்மாள்.
”ஃபேஷன் ஜூவல் மேக்கிங்’ல நாம செலவழிக்கிறது மாதிரி மூணு மடங்கு லாபம் கிடைக்குது. எனக்கு, மாசம் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறையாம லாபம் வருது. ஃபேஷன் ஜுவல்ஸ் தொழில்ல அப்டேட் ரொம்ப முக்கியம். காலேஜ் பொண்ணுங்க புது டிசைனைத்தான் விரும்புறாங்க. கேரளாவுல ‘பாலக்கா பிரைடல் நெக்லஸ்’ங்கிற மாடல் ரொம்ப பிரபலம். இப்போதைக்கு விற்பனையில இதுதான் மாஸ். இது பளிச்னு இருக்கும். போடுறவங்களுக்கு கூடுதல் அழகைக் கொடுக்கும்” என்றபடியே… அந்த நெக்லஸை செய்து காண்பிக்கிறார் மாரியம்மாள்.
தேவையான பொருட்கள்:
கியர் ஒயர் – 1 மீட்டர் (ஒரு ரோல் 25 ரூபாய். இதை வாங்கி 1 மீட்டர் அளவுக்கு கட் செய்யவேண்டும்), கோல்ட் கலர் பீட்ஸ், பிடித்தமான கலர்களில் தேவையான அள வுக்கு சிங்கிள் ஸ்டோன்ஸ் மற்றும் டபுள் ஸ்டோன்ஸ், டாலர், சமோசா லாக் கொண்ட சிங்கிள் ஸ்டோன், கட்டர், பிளேயர், க்ளோ ஸிங் பின்ஸ், நெக்லஸ் ரோப்.
செய்முறை:
படம் 1: ஒரு மீட்டர் கியர் ஒயரை இரண்டாக மடித்துக் கொள்ளவும். க்ளோஸிங் பின்னை கோக்கும் வகையில் உள்ள சமோசா லாக் கொண்ட சிங்கிள் வொயிட் ஸ்டோனை முதலில் கோக்கவும். பிறகு சிங்கிள் கலர் ஸ்டோனை கோக்கவும் (ஸ்டோன்களின் பின்புறத்தில் மேலும் கீழுமாக இரு துளைகள் இருக்கும். மடிக்கப்பட்டிருக்கும் கியர் ஒயரை, மேல் துளையில் ஒன்று கீழ் துளையில் ஒன்று என செலுத்த வேண்டும்).
படம் 2: பிறகு, டபுள் ஸ்டோனை படத்தில் காட்டியுள்ளது போல் அடுத்தடுத்து வைத்து கோக்கவும்.
படம் 3: இந்த ஸ்டோன்களை பாதி கோத்ததும், மேல் வரிசை கியர் ஒயரில் ஒரு கோல்ட் கலர் பீட்ஸையும், கீழ் வரிசை கியர் ஒயரில் இரண்டு கோல்டன் கலர் பீட்ஸையும் கோத்த பிறகு, ஸ்டோன்ஸ் வைத்த பெரிய டாலரை கோக்கவும்.
படம் 4: இப்போது மீதமுள்ள பாதியையும் சரியான எண்ணிக்கையில் கோத்து முடிக்கவும்.
படம் 5: சமோசா லாக் கொண்ட வொயிட் கலர் சிங்கிள் ஸ்டோனை வைத்து கோத்து முடித்ததும், நான்கைந்து முடிச்சுகள் போட்டு கட்டர் மூலம் மீதம் உள்ள ஒயரை கட் செய்துவிடவும்.
படம் 6: இப்போது க்ளோஸிங் பின்னை, நெக்லஸின் இருபுறமும் கோத்து, அதில் நெக்லஸ் ரோப்பை கோத்து, பிளேயரைக் கொண்டு நன்றாக அழுத்திவிடவும். இப்பொழுது கண்ணைக் கவரும் கலர்ஃபுல் பாலக்கா நெக்லஸ் ரெடி.
இதைச் செய்வதற்கு 150 ரூபாய் வரை செலவாகும். 250 ரூபாய் வரை விற்க முடியும். கழுத்தின் அளவைப் பொறுத்து ஸ்டோன்களை அதிகமாகவோ, குறைவாகவோ கோத்துக் கொள்ளலாம். சிலருக்கு பெரிய நெக்லஸ் அல்லது ஆரம் தேவையாக இருந்தால்… இடையில் கோல்டன் பீட்ஸ் மற்றும் சிங்கிள் ஸ்டோன்களை கலர் கலராக மிக்ஸ் செய்து கோத்துக் கொள்ளலாம்.