காலை வந்தாலே அனைவருக்கும் சமைப்பதற்கு சோம்பேறித்தனம் அதிகம் இருக்கும். அதற்காக சமைக்காமல் இருக்க முடியாது. இருப்பினும் அந்நேரத்தில் மிகவும் விரைவில் சமைக்கக்கூடியவாறான ரெசிபியை முயற்சித்தால், நன்றாக இருக்கும் அல்லவா?
ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை அத்தகையவர்களுக்காக ஒரு அருமையான, அதே சமயம் மிகவும் ஈஸியான ஒரு காலை உணவை கொடுத்துள்ளது. அந்த ரெசிபி தான் ஜவ்வரிசி கிச்சடி. இது செய்வதற்கு 10 நிமிடம் போதும். இப்போது அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி – 1 கப் (நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்)
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 2
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – 1 இன்ச்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
வேர்க்கடலை – 1/4 கப் (ஒன்றிரண்டாக உடைத்தது)
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வரமிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் ஜவ்வரிசியை கழுவி சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
ஜவ்வரிசியானது நன்கு வெந்ததும், அதில் வேர்க்கடலையை தூவி கிளறி இறக்கி, கொத்தமல்லியை தூவினால், சுவையான ஜவ்வரிசி கிச்சடி ரெடி!!!