நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே வயிற்றில் தேங்கி தொப்பையாகிவிடுகிறது. இப்படி சேரும் கொழுப்புக்களை கரைப்பதற்கு பலரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வாருவார்கள். இருப்பினும் தொப்பை மட்டும் குறையாமல் அப்படியே இருக்கும்.
சிலர் நாம் தான் ஜிம் செல்கிறோமே என்று வெளியிடங்களுக்கு சென்றால், ஜங்க் உணவுகளை வாங்கி சாப்பிடுவார்கள். வாயைக் கட்டிப் போடமுடியாவிட்டால், எப்படி வயிற்றைக் குறைக்க முடியும். இதுப்போன்று நிறைய விஷயங்களால் தான் நம்மால் தொப்பையைக் குறைக்க முடிவதில்லை.
சரி, இப்போது தொப்பையைக் குறைய விடாமல் தடுக்கும் விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.
தவறான உடற்பயிற்சி
என்ன தான் ஜிம் சென்றாலும், அங்கு செய்யும் உடற்பயிற்சிகளை சரியாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால், தவறான பலனைத் தான் பெற முடியும். செய்யும் உடற்பயிற்சி சரியானதா என்பதை உறுதி செய்து கொண்டு, பிறகு பின்பற்றுங்கள்.
ஜங்க் உணவுகள்
தொப்பையைக் குறைக்க ஜிம் செல்லும் போது, ஜங்க் உணவுகளை ஒரு நாள் தானே என்று உட்கொண்டாலும், அது தொப்பையைக் குறைப்பதற்கு இடையூறு விளைவிக்கும். எனவே தொப்பை குறையும் வரை ஜங்க் உணவுகளை ருசிக்க கூட நினைக்க வேண்டாம்.
தவறான கொழுப்புக்கள்
கொழுப்புக்கள் உடலுக்கு அவசியமானதே. ஆனால் எது நல்ல கொழுப்பு, எது கெட்ட கொழுப்பு என்பதை தெரிந்து, அளவாக எடுத்து வாருங்கள். இல்லாவிட்டால் உடலில் கலோரிகளின் அளவு அதிகரித்து, அதனால் உடல் பருமன் ஏற்படும். எனவே பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகளை தவிர்த்திடுங்கள்.
மன அழுத்தம்
மன அழுத்தம் கூட ஒருவருக்கு தொப்பை வரவழைக்கும். ஏனெனில் மன அழுத்தம் ஏற்படும் போது, கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோனின் அளவு அதிகரித்து, அதனால் உடலில் கொழுப்புக்களும் அதிகரிக்கும்.
குறைவான தூக்கம்
ஒருவர் போதிய அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், அதுவும் உடல் பருமனை அதிகரித்துவிடுவதோடு, தொப்பையை உண்டாக்கும். எனவே தினமும் இரவில் குறைந்தது 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ளுங்கள்.
சோம்பேறித்தனம்
கீழே உட்கார்ந்து எழ முடியவில்லை என்று ஷோபாவில் அமர்வது, அருகில் உள்ள கடைக்கு நடந்து செல்ல முடியவில்லை, படிக்கட்டுக்கள் ஏற முடியவில்லை என்று சோம்பேறித்தனத்தால் சிறு செயல்களை தவிர்த்தால் கூட, தொப்பை குறையாது. ஆகவே எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுங்கள். எந்த ஒரு வீட்டு வேலையையும் இழுத்துப் போட்டு நீங்களே செய்யுங்கள்.