23.7 C
Chennai
Wednesday, Dec 25, 2024
3152e954 74aa 4d87 89bc 2bcff451bad8 S secvpf
அழகு குறிப்புகள்

பிரபலங்களின் அழகு ரகசிய குறிப்புகள்

சினிமா நட்சத்திரங்களின் அழகு ரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் சாமானிய மக்களுக்கு எப்போதும் ஒரு ஆர்வம் உண்டு. அழகுசாதனப் பொருள்களுக்கான விளம்பரங்களில், முன் எப்போதையும் விட, கடந்த சில வருடங்களில் நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதன் பின்னணியும் அதுவே. ஆஸ்தான நடிகையோ, நடிகரோ உபயோகிக்கிற அனைத்தையும் தானும் உபயோகித்தால் அவர்களைப் போலவே மாறிவிடலாம் என நம்புகிற மனிதர்கள் நம்மிடையே பலர் உண்டு. அதெல்லாம் விளம்பர உத்தி என்பதை அறியாத அப்பாவிகள் அவர்கள்!

நடிகர், நடிகைகள் அவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தானே?

முதுமையும் தள்ளாமையும் அவர்களுக்கும் உண்டு. அவர்களுக்கும் முடி கொட்டும். நரைக்கும். வழுக்கை விழும். சருமத்தில் சுருக்கங்கள் வரும். அழகு மெல்ல விடைபெறும். சாதாரண மக்களுக்கும் பிரபலங்களுக்கும் ஒரே ஒரு விஷயத்தில்தான் வித்தியாசம். அழகை ஆராதிப்பதிலும், கட்டிக் காப்பதிலும் அவர்கள் காட்டுகிற அக்கறை. அது நம்மிடம் மிஸ்ஸிங். அதனால்தான் நமக்கு சீக்கிரமே வரும் முதுமை, அவர்களுக்கெல்லாம் தாமதமாகிறது. அழகைப் பேண பிரபலங்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்? அழகுக்கலை நிபுணர் மேனகா பேசுகிறார்…

தலைக்கு:
3152e954 74aa 4d87 89bc 2bcff451bad8 S secvpf
* பிரபலங்கள், சாமானிய மனிதர்களைப்போல, நரைத்த முடியுடனும் வழுக்கைத் தலையுடனும் வெளியில் தலை காட்ட முடியாது. அதை மறைக்கும் டெக்னிக்குகளை பின்பற்றியே ஆக வேண்டும். நடிகைகளைப் பொறுத்த வரை முடியை ரொம்பவும் நீளமாகவோ, ரொம்பவும் குட்டையாகவோ வைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். மீடியம் நீளமுள்ள, அதாவது, தோள்பட்டை அளவுக்கு வைத்துக் கொள்வார்கள். அப்போதுதான் அவர்களால் எப்படிப்பட்ட ஹேர் ஸ்டைலுக்குள்ளும் பொருந்திப் போக முடியும்.

* வெஸ்டர்ன் லுக்கோ… ட்ரெடிஷனல் லுக்கோ… எதுவும் அவர்களுக்குப் பிரச்னையே இல்லை. எப்படிப்பட்ட ஸ்டைலுக்கும் ஹேர் அட்டாச்மென்ட்டுகள் கிடைக்கின்றன இன்று. கிளிப் உடன் கூடிய அவற்றை அப்படியே ஒரிஜினல் கூந்தலில் பொருத்திக்கொள்ள வேண்டியதுதான். கலரிங், அயர்னிங், பெர்மிங் என எதை வேண்டுமானாலும், அந்த செயற்கை அட்டாச்மென்ட்டின் மேல் செய்து கொள்ளலாம். கூந்தலுக்கு 1 சதவிகிதம்கூட பாதிப்பே இருக்காது. வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு அவர்கள் ஒரிஜனல் கூந்தலில் செய்து கொண்டது மாதிரியே தெரியும்!

* நரையை மறைப்பதிலும் நட்சத்திரங்கள் ரொம்பவே கவனமாக இருப்பார்கள். ஒரு இன்ச் கூட நரை முடி வெளியே தெரியாமலிருக்க வேண்டும் என்கிற ஜாக்கிரதை உணர்வில் வாரம் ஒரு முறை கூந்தலுக்கு டச் அப் செய்கிறவர்களும் உண்டு. இன்னும் சொல்லப் போனால், சம்பந்தப்பட்ட நடிகருக்கோ, நடிகைக்கோ வெள்ளை முடி இருப்பது, அவர்களது வாழ்க்கைத்துணைக்குக் கூட தெரியாமலிருக்கலாம். எக்கா ரணம் கொண்டும், தரக் குறைவான ‘டை’யை அவர்கள் உபயோகிக்கவே மாட்டார்கள். அமோனியா கலக்காத வாட்டர் பேஸ்டு ஹேர் கலரிங்கை மட்டுமே உபயோகிப்பார்கள்.

* சரி திடீரென ஒரு ஃபங்ஷன். அல்லது போட்டோ ஷூட்… கலரிங் செய்யவோ, பார்லர் போகவே நேரமில்லை… நரையையும் மறைத்தாக வேண்டும்… என்ன செய்வது? ‘டை ஸ்டிக்’ என ஒன்று இருக்கிறது. கருப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் மாதிரி இருக்கும்… அதை நரை உள்ள இடங்களில் டச் அப் செய்து கொண்டால் போதும்.

கண்களுக்கு…
கேமரா வெளிச்சமும், கண்ட நேரத்து வேலையும் அவர்களின் கண்களையும் பதம் பார்க்கும். அதிலிருந்து விடுபட கண்களுக்கான மசாஜ் செய்து கொள்வார்கள். நடிகைகளுக்கு கண்களின் கவர்ச்சி மிக முக்கியம். முகத்தில் மேக்கப்பே இல்லாவிட்டாலும், கண்களுக்கு மட்டும் மேக்கப் செய்துகொள்ள விரும்புவார்கள். கண் இமைகளை நீளமாகக் காட்ட, ஐ லேஷ் எக்ஸ்டென்ஷன்ஸ் இப்போது பிரபலமாகி வருகிறது. கூந்தல் இல்லாதவர்கள் ஹேர் எக்ஸ்டென்ஷன் செய்து நீளமான முடியிருப்பது போலக் காட்டிக் கொள்வது போல, இது கண் இமைகளுக்கானது. ஒருமுறை செய்து கொண்டால் ஒன்றரை மாதம் வரை அப்படியே இருக்கும்.

நகங்களுக்கு:

நடிகைகளின் கைகளை கவனித்தீர்களானால், நகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கலாம். அவர்களது நகங்கள் நீளமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். நெயில் ஆர்ட் செய்து கொள்வதை விரும்புவார்கள். அதில் என்னவெல்லாம் லேட்டஸ்ட்டோ அதையெல்லாம் முயற்சி செய்து பார்ப்பார்கள். நகங்களே இல்லாவிட்டாலும் நோ பிராப்ளம். செயற்கையாக ஒட்டிக்கொள்ளக் கூடிய ஜெல் மற்றும் அக்ரிலிக் நகங்கள் கிடைக்கின்றன. ஏற்கனவே உள்ள நகங்களின் மேல் இவற்றை ஒட்டிக் கொண்டு விட்டால் போதும், வித்தியாசம் தெரியாது!

வாக்சிங்:

நடிகைகள் உபயோகிக்கிற எல்லா அழகுசாதனங்களுமே ஸ்பெஷல் வகையறாதான். அதில் வாக்சும் ஒன்று. சாதாரணப் பெண்கள் உபயோகிக்கிற ஹாட் வாக்ஸ், கோல்ட் வாக்ஸெல்லாம் இவர்களுக்குப் பிடிக்காது. ஃப்ரூட் வாக்ஸ் என ஒன்று வந்திருக்கிறது. விதம் விதமான வாசனைகள் கொண்ட இதை உபயோகிக்கும் போது, மறுபடி முடி வளர நேரம் பிடிக்கும். ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்புதான் இதை உபயோகிப்பார்கள். முகத்துக்குக் கூட இந்த வாக்ஸ் உபயோகிக்கிற நடிகைகள் இருக்கிறார்கள். இதில் வாக்ஸ் செய்வதற்கு முன் உபயோகிக்கக் கூடிய ப்ரீ லோஷனும், வாக்ஸ் செய்த பிறகு உபயோகிக்கக் கூடிய லோஷனும் இருப்பதால், சருமமும் அழகாக மின்னும்.

உடைகள் மற்றும் நகைகள்…
* ஆள் பாதி, ஆடை பாதி என்பது நடிகைகள் விஷயத்தில் மிகச் சரி. எந்த நடிகையாவது அவர்களுக்குப் பொருந்தாத உடை அணிந்து பார்த்திருக்கிறீர்களா? தைத்துப் போட்டார்களா? போட்டுக் கொண்ட பின் தைத்தார்களா எனக் கேட்க வைக்கிற அளவுக்கு அத்தனை கச்சிதமாக உடை அணிவார்கள்.

* பெரும்பாலான நடிகைகள் பொது நிகழ்ச்சிகளிலும், சாதாரண நேரத்திலும் நகைகள் அணிய மாட்டார்கள். கழுத்தில் சின்னதாக ஒரு சங்கிலி கூட இருக்காது. தொடர்ந்து நகைகள் அணிவதுகூட சருமத்தில் சில அடையாளங்களைப் பதிக்கும். ஷூட்டிங்கின் போதும், பிரமாண்ட நிகழ்ச்சியின் போதும் மட்டும்தான் அவர்கள் நகைகள் அணிவார்கள்.

அழகு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை மறைக்கிற டெக்னிக்குகள் இவையெல்லாம். அதை வைத்து நடிகைகள் எல்லாம் அவலட்சணமானவர்கள் என்றும், இப்படித்தான் ஏமாற்று வேலைகளைச் செய்து, அவர்களது குறைகளை மறைத்து, அழகாகக் காட்டிக் கொள்கிறார்கள் என்றும் அவசரப்பட்டு நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம். அழகைத் தக்க வைத்துக் கொள்வதில் அவர்களது அக்கறை நம்மையெல்லாம் பிரமிக்க வைக்கும். அப்படி என்ன செய்வார்கள் என்கிறீர்களா?

* கூந்தலோ, சருமமோ அதற்கான சிகிச்சைகளை முறையாக எடுத்துக் கொள்வார்கள். வாரம் 2 முறை கூந்தலுக்கான ஹேர் பாலிஷிங்கும், 4 வாரங்களுக்கு ஒரு முறை ஹேர் கட்டும், வாரம் ஒரு முறை ஹேர் ஸ்பாவும் செய்து கொள்வார்கள். கூந்தல் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஷாம்பு, கண்டிஷனர் மற்றும் சீரம்தான் உபயோகிப்பார்கள். வாரம் ஒரு முறை கூந்தலுக்கு மசாஜ் செய்து கொள்வார்கள். கூந்தலை அடர்த்தியாகக் காட்டக் கூடிய ‘வால்யூம் ட்ரீட்மென்ட்’ செய்து கொள்வார்கள்.

* மிகச்சிறந்த மேக்கப் சாதனங்களை மட்டுமே உபயோகிப்பார்கள். அவை எஸ்.பி.எஃப் உள்ளதும், வாட்டர் பேஸ்டுமானதாக இருக்கும். மேக்கப் முடித்த பிறகு ஒருவித ஸ்பிரேவை அடித்துக்கொண்டால், பல மணி நேரத்துக்கு மேக்கப் அப்படியே இருக்கும்.

* மேக்கப் செய்து கொள்வதில் எடுத்துக் கொள்கிற அக்கறையை, மேக்கப்பை நீக்குவதிலும் எடுத்துக் கொள்வார்கள். சரும அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் மேக்கப்பை முறையாக சுத்தப் படுத்த வேண்டியது மிக முக்கியம். எத்தனை தாமதமாக ஷூட்டிங் முடித்துத் திரும்பினாலும், மேக்கப்பை நீக்கி 100 சதவிகிதம் சுத்தமான பிறகுதான் தூங்கச் செல்வார்கள். கூந்தலுக்கும் அப்படித்தான். தவறாமல் நைட் கிரீம் உபயோகிப்பார்கள். வாரம் தவறாமல் ஃபேஷியலும், பாடி பாலிஷும் செய்து கொள்வார்கள். எங்கே வெளியில் சென்றாலும், உடல் முழுவதற்குமான சன் பிளாக் உபயோகிப்பார்கள்.

* எல்லாவற்றையும் விட முக்கியம்… அவர்களது சாப்பாடு. நிறைய காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள் சேர்த்துக் கொள்வார்கள். தூக்கத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தவறாமல் உடற்பயிற்சி செய்வார்கள்.

* கைகளுக்கும், கால்களுக்கும் ஸ்பா மெனிக்யூர் மற்றும் ஸ்பா பெடிக்யூர் செய்து கொள்வார்கள். டென்ஷனை விரட்ட ரெஃப்ளெக்சாலஜி செய்து கொள்வார்கள். என்னதான் வேலை இருந்தாலும் ஓய்வைத் தியாகம் செய்ய மாட்டார்கள்.

Related posts

குளிர் காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க..

nathan

பஞ்சு போன்ற உள்ளங்கைக்கு என்ன செய்யலாம்

nathan

ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றங்கள் ?

nathan

தழும்பை மறைய வைக்க

nathan

46 வயது திருமணமாகாத நடிகை -இப்படியொரு போஸ்-ஆ!!

nathan

சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்…

sangika

சற்றுமுன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூப்பர் சிங்கர் புகழ் சௌந்தர்யா!

nathan

விஜய் சேதுபதியை எட்டி உதைத்தால் ரூ.1,001 பரிசு அறிவித்த அர்ஜுன் சம்பத்

nathan

கன்னங்களின் அழகு கெடாமல் இருக்க

nathan