மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிக அளவு உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்துடன் காணப்படுவர்.
அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள தகுந்த உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் சாப்பிடவேண்டிய உணவு வகைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
- மாதவிடாய் நாட்களில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது சிறந்தது. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான, பீன்ஸ், டார்க் சாக்லேட், கீரைகள், நட்ஸ், சூரியகாந்தி விதைகள் மற்றும் டோஃபு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- பதற்றம், தூக்கமின்மை, தலைவலி மற்றும் மாதவிடாய் கால தசைபிடிப்பு போன்ற பிரச்சனைகளை குறைப்பதற்கு மெக்னீசியம் மிகவும் உதவக்கூடியது. எனவே மெக்னீசியம் நிறைந்த முந்திரி, சோயாபீன்ஸ், பசலைக்கீரை, பாதாம், அவகேடோ, வாழைப்பழம் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- நார்ச்சத்து நிறைந்த உணவுகளை மாதவிடாய் காலங்களில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். எனவே ஆப்பிள், பீன்ஸ், சியா விதைகள், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அந்த நாட்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- முட்டை, கடல் உணவுகள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்ற வைட்டமின் பி நிறைந்த உணவுகளை இரத்தப்போக்கு ஏற்படக்கூடிய நாட்களில் அதிகமாக எடுத்துக் கொள்ள மறவாதீர்கள். போதுமான அளவு வைட்டமின் பி நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய தசைபிடிப்பு, தசை வலி மற்றும் உடற்சோர்வு ஆகியவற்றில் இருந்து தப்பிக்கலாம்.
- மாதவிடாய் காலங்களில் கால்சியம் அளவை அதிகரித்துக் கொள்ள வேண்டும். எனவே, பால், தயிர், பாதாம், ப்ரோகோலி மற்றும் கீரைகள் போன்றவற்றை மாதவிடாய் காலங்களில் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவிடக்கூடும்.