அன்றாடம் உண்ணும் உணவில் ஒருசில உணவுகளை சேர்த்துக் கொள்வது மிகவும் இன்றியமையாதது. அதிலும் அதிகப்படியான எடையால் அவஸ்தைப்படுவோர், அதனைக் குறைப்பதற்கு உதவும் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து வர வேண்டும். அப்படி உடல் எடையை குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் தேன் மற்றும் பட்டை மிகவும் சிறப்பானவை.
பல வருடங்களாக உடல் எடையை குறைப்பதற்கு தேன் மற்றும் எலுமிச்சை மிகவும் சிறப்பான உணவுப் பொருட்களாக விளங்குகிறது. அதுவும் தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் எலுமிச்சை சாற்றில் தேன் சேர்த்து கலந்து குடித்தால், எடையில் மாற்றம் தெரியும். அதேப் போல் பட்டையையும் அன்றாட உணவில் சேர்த்து வந்தாலும் எடையைக் குறைக்கலாம்.
அதிலும் உடல் எடையை விரைவில் குறைக்க நினைப்போர் தேன் மற்றும் பட்டையை சேர்த்து வர வேண்டும். மேலும் இந்த பொருட்கள் எடையை குறைக்க மட்டுமின்றி, பல்வேறு உடல் பிரச்சனைகளையும் தடுக்கும்.
இப்போது தேன் மற்றும் பட்டை எப்படி உடல் எடையை குறைக்க உதவுகிறது என்றும், வேறு எந்த பிரச்சனைகளையெல்லாம் சரிசெய்ய உதவியாக உள்ளது என்றும் பார்ப்போமா!!!
எனர்ஜியைத் தரும்
தேன் உடலுக்கு அலாதியான எனர்ஜியைக் கொடுக்கும். அதிலும் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் தேனை ஊற்றி, அத்துடன் சிறிது பட்டை தூள் சேர்த்து கலந்து காலையில் உடற்பயிற்சியின் போது சிறிது சிறிதாக குடித்தால், அதிக அளவு எனர்ஜி கிடைக்கும்.
கொலஸ்ட்ரால்
உடல் எடை அதிகம் இருப்பவர்களின் உடலில் கொலஸ்ட்ராலானது அதிக அளவில் இருக்கும். இந்த கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கு 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் பட்டை தூளை 2 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறைந்திருப்பதைக் காணலாம்.
நல்ல வலிமை கொடுக்கும்
தேன் மற்றும் பட்டைத் தூள் உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, உடலின் வலிமையை அதிகரிக்கவும் உதவியாக இருக்கும். அதற்கு 1/2 டேபிள் ஸ்பூன் தேனை 1 டம்ளர் நீரில் கலந்து, அத்துடன் சிறிது பட்டை தூள் சேர்த்து கலந்து உணவு உண்ட பின்னர் குடித்தால் உடலின் வலிமை அதிகரிக்கும்.
உணவு செரிமானத்திற்கு…
உணவு உண்ணும் முன்பு 2 டேபிள் ஸ்பூன் தேனில், சிறிது பட்டைத் தூள் சேர்த்து கலந்து சாப்பிட்டால், அது அசிடிட்டியில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். மேலும் இந்த கலவை உணவுப் பொருட்களை எளிதில் உடைத்து செரிமானமடைய உதவி புரிவதால், உடலில் தேவையற்ற கொழுப்புக்கள் தங்குவதைத் தடுக்கலாம்.
கொழுப்புக்களை நீக்கும்
விரைவில் எடையை குறைக்க வேண்டுமானால், தேன் மற்றும் பட்டைத் தூளை வெதுவெதுப்பான நீரில கலந்து காலையில் வெறும் வயிற்றிலும், இரவில் தூங்கும் முன்பும் குடிக்க வேண்டும். இதனால் இவை உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை விரைவில் கரைத்து, உடலை சிக்கென்று வைத்துக் கொள்ள உதவிபுரியும்.
அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும்
தேன் மற்றும் பட்டைத் தூள் அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும். எப்படியெனில், தேனானது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்து, பசி உணர்வைக் கட்டுப்படுத்தும். அதுமட்டுமின்றி, பட்டைத் தூளானது செரிமான மண்டலத்தில் உள்ள பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் போன்றவற்றை வெளியேற்றிவிடும்.
செல்லுலைட்டை அழிக்கும்
தேன் மற்றும் பட்டை கலவையானது எடையை குறைக்க மட்டுமின்றி, செல்லுலைட் எனப்படும் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சேர்வதைத் தடுக்கும்.