பொலிவான, அழகான, மிருதுவான, எந்த பிரச்சனையும் இல்லாத, ஆரோக்கியமான சருமம் வேண்டுமென்று யாருக்கு தான் ஆசை இருக்காது. உண்மையை சொல்லுங்க, உங்களுக்கும் அப்படிப்பட்ட ஆசை இருக்கு தானே? முக சுருக்கம், கருவளையம், முகப்பரு, வயதான தோற்றம் போன்ற பிரச்சனைகள் வர கூடாது என்பதற்காகவே சரும பராமரிப்பு அவசியமான ஒன்றாகிவிட்டது. அத்தகைய சரும பராமரிப்பிற்கு சற்று அக்கறையும், செலவும் செய்ய வேண்டியதிருக்கும். அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில் சரும பராமரிப்பிற்கு நேரம் இருந்தாலும், நாம் உபயோகிக்கும் சில பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்பட்டவர்கள் தான் அதிகம்.
அதற்காக தான் இந்த ஊரடங்கு அனைத்து பெண்களுக்குமே செலவே இல்லாத அற்புத அழகு பராமரிப்பு பொருட்களை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அது தான் சமையலறை பொருட்கள். நம் வீட்டு சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கு அழகை மேம்படுத்தக்கூடிய ஏதோ ஒரு பண்பு உள்ளது. அந்த வகையில் நம் வீட்டு சமையறையில் வீணாக தூக்கி எறியும் சில பொருட்களை வைத்து நம் அழகை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்று தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். இவற்றை ஒரு முறை முயற்சி செய்து பார்த்தால் பின்னர், கடைகளில் எந்த பொருளையும் காசு கொடுத்து வாங்கி உபயோகிக்க எண்ணமே வராது.
உருளைக்கிழங்கு தோல்
பொதுவாக அனைவருமே உருளைக்கிழங்கு சமைக்கும் போது அதன் தோலை சீவி தூக்கி எறிந்துவிடுவர். ஆனால், அந்த தோலில் எத்தகைய பலன்கள் மறைந்துள்ளது என்று தெரிந்தால் யாருமே அதை தூக்கி எரிய மாட்டீர்கள். அட ஆமாம். சீவிய தோலை கொண்டு முகத்தில் பரு உள்ள இடத்திலும், கருவளையம் உள்ள இடத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். உருளைக்கிழங்கு தோலை பேஷ் பேக்காக கூட போடலாம். அப்படி செய்வதன் மூலம் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து முழுவதுமாக கிடைத்திடும். உருளைக்கிழங்கு தோலை அரைத்து, பேஸ்ட் போல செய்தும் முகத்தில் தடவலாம்.
உருளைக்கிழங்கு தோலை சரும பராமரிப்பிற்கு பல்வேறு வகைகளில் பயன்படுத்தலாம். ஆனால், அவற்றை பயன்படுத்துவதற்கு முன்பு நன்கு கழுவி சுத்தம் செய்திட மறவாதீர்கள்.
ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால், அவை சருமத்திற்கு ஊட்டமளித்து, சரும செல் பாதிப்பை தவிர்த்திட உதவுகிறது. ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு முடித்த பிறகு, அதன் தோலை வெயில் சில நாட்களுக்கு உலர வைத்து எடுத்துக் கொள்ளவும். ஆரஞ்சின் தோல் மொறுமொறுப்பாகும் வரை உலர்த்த வேண்டியது அவசியம். உடனே உபயோகிக்க வேண்டுமென்றால், மைக்ரோவேவ்ஓவனில் வைத்து கூட பயன்படுத்தலாம். காய்ந்த ஆரஞ்சு தோலை பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தயாரித்த அந்த பவுடரை தயிர் மற்றும் தேன் சேர்த்து பேஷ் பேக்காக போடலாம். அல்லது நீங்கள் போடும் எந்தவொரு பேஷ் பேக்கிலும் இந்த பொடியும் கலந்து கொள்ளலாம். இதை மட்டும் உபயோகித்து பாருங்கள். அதன் பலன் உங்களை ஆச்சரியப்பட செய்திடும்.
முட்டை மஞ்சள் கரு
நீங்கள் முட்டையின் மஞ்சள் கருவை விடுத்து, வெள்ளை கருவை மட்டும விரும்பி சாப்பிடுபவரா? எனில், மஞ்சள் கருவை பேஷ் மாஸ்க்காக போட்டுக் கொள்ளுங்கள். வெறும் மஞ்சள் கருவை எடுத்து முகம் முழுவதும் தடவி சிறிது நேரம் கழித்து கழுவவும். இப்படி செய்வதால் முகத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு, சரும வறட்சி தடுக்கப்படும். இதை செய்யும் போது சிறிது நாற்றம் வரத் தான் செய்யும். ஆனால், சரும பராமரிப்பை கருத்தில் கொண்டு அதை நீங்கள் சற்று பொறுத்துக் கொள்ள வேண்டும்.
சமைத்த ஓட்ஸ்
அளவு தெரியாமல் நிறைய ஓட்ஸை சமைத்து விட்டீர்களா? எனில் கவலை வேண்டாம். அதனை பயன்படுத்தி பேஷ் மாஸ்க் செய்து விடலாம். அட நிஜமாக தான் கூறுகிறேன். மீதமான ஓட்ஸ் உடன் சிறிது தேன் கலந்து பேஷ் மாஸ்க் ஆக உபயோகிக்கலாம். ஓட்ஸில உள்ள பால் மற்றும் தேன் சரும ஈரப்பதத்தை தக்க வைக்க உதவக்கூடியவை. அத்துடன், அவை உங்கள் சருமத்தை சுத்தப்பட்டு இயற்கையான பொலிவை பெற உதவிடும்.
காபி தூள்
காபி கொட்டையை அரைத்து காபி போட்டு குடிக்க மிகவும் பிடிக்குமா உங்களுக்கு? அப்படியெனில் இந்த டிப்ஸ் நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும். காபியின் அழகு நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கும். எனவே, நீங்கள் அரைக்கும் காபி கொட்டையில் மீதமானதை எடுத்து காபி மாஸ்க் அல்லது காபி ஸ்கரப் போன்று பயன்படுத்தலாம். அதற்கு, காபி தூளுடன் சிறிது தேங்காய் எண்ணெய் மட்டும் சேர்த்துக் கொண்டால் போதுமானது. இவை சருமத்தின் தோலை புதிதாக மாற்றி, இயற்கை பொலிவை தந்து உங்களது அழகை மேம்படுத்திட உதவும்.
-Boldsky