உடல் சோர்வாக இருக்கும் போது சூடாக மிளகு ரசம் ஒரு டம்ளர் குடித்தால் உடலுக்கு உடனடியாக பலம் கிடைக்கும். மிளகு உணவுக்கு மட்டும் அல்லாமல் கைவைத்தியத்துக்கும் பயன்படுத்தலாம்.
வீட்டின் சமையலறையே மருத்துவக்கூடமாக வைத்திருந்தவர்கள் நம் முன்னோர்கள். அஞ்சறை பெட்டி என்பது நோய்களுக்கு அஞ்சாமல் அதை தீர்த்துவைக்கும் அருமருந்தாக செயல்பட்டது. அஞ்சறைபெட்டியில் இருக்கும் அனைத்து பொருள்களுமே ஒவ்வொரு வகையில் முக்கியமானவையே.
அதில் ஒன்று மிளகு. மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. விஷமாக இருந்தாலும் அதை முறித்துவிடும் தன்மை மிளகுக்கு உண்டு. ஆயுர்வேதம் மற்றும் சித்தமருத்துவத்தில் மருந்துக்கு பயன்படுத்தும் திரிகடுக சூரணத்தில் மிளகும் உண்டு.
இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், தையமின், ரைபோப்ளேவின், நியாசின் சத்துக்களை கொண்டிருக்கும் மிளகு கொண்டு என்னவெல்லாம் கைவைத்தியம் செய்யலாம் தெரிந்துகொள்வோம்.
குளுமையால் வந்த சளி, ஜலதோஷம்
மழைக்காலங்களில் மட்டும் அல்லாமல் எல்லா காலங்களிலும் குளுமை உபாதைக்கு உள்ளாபவர்கள் உண்டு. சளி, ஜலதோஷம் பிரச்சனை இருக்கும் போது உணவில் மிளகு அதிகம் சேர்க்கும் வழக்கம் உண்டு. அதே போன்று மிளகு மட்டும் வைத்தியத்துக்கு பயன்படுத்தலாம்.
மிளகை வாணலியில் வறுத்து பொடித்து கொள்ளவும். சிறிய டீஸ்பூனில் கால் டீஸ்பூன் அளவு எடுத்து அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலக்கி இனிப்புக்கு தேன் அல்லது பனைவெல்லம் கலந்து இளஞ்சூட்டாக இருக்கும் போதே தொண்டையில் நனையும் படி குடித்துவரவும். அல்லது காலையில் மிளகுபொடியுடன் பனைவெல்லம் கலந்து பிசைந்து வாயில் இட்டு கரையும் வரை வைத்திருந்தாலும் இராண்டு நாளில் பலன் கிடைக்கும். தொடர்ந்து மூன்று நாட்கள் எடுத்தாலே போதுமானது.
பசியின்மை
சிறு பிள்ளைகள் சாப்பிடாமல் அடம்ப்பிடிப்பார்கள். பசியின்மை, செரிமானம் போன்ற பிரச்சனைகளை நீக்க மிளகை பயன்படுத்தலாம். மிளகுபொடியுடன் உப்பு சேர்த்து சிறிய வாணலியில் எண்ணெய் விடாமல் இலேசாக வறுக்கவும். இளஞ்சூட்டில் நெய் சேர்த்து இரண்டையும் கலந்து குழைத்து அப்படியே சாப்பிட வேண்டும். பெரியவர்கள் ஒரு கவளம் சூடான சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.
வயிறு உப்புசம், செரிமானக்கோளாறுகள் சீராகும். இதனால் நேரத்துக்கு பசி எடுக்க கூடும். உடல் மந்தத்தன்மை நீங்கும். தினமும் எடுக்க வேண்டாம். எப்போது வயிறு உப்புசம், பசியின்மை, செரிமான கோளாறு போன்ற குறைபாடு நேர்கிறதோ அப்போது தொடர்ந்து இரண்டு நாட்கள் எடுத்தாலே போதுமானது. பலன் உடனே கிடைக்கும்.
தலைவலி
அடிக்கடி தலைவலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மிளகை அரைத்து நெற்றியில் பற்று போடலாம். நெற்றியில் இலேசாக எரிச்சல் உணர்ந்தாலும் வலி நிவாரணம் கிடைக்கும். மண்சட்டியில் நெருப்பு துண்டுங்களை போட்டு அதில் மூன்று மிளகு போட்டு அதிலிருந்துவரும் புகையை சுவாசித்தாலும் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
பெரியவர்கள் தீரா தலைவலியால் அவதிப்பட்டுவந்தால் மிளகு பொடி சிட்டிகை அளவு மூக்கில் மூக்கு பொடி போன்று உறிஞ்சலாம். இதனால் தலைவலி குணமாகும் என்றாலும் மூக்கில் எரிச்சலும் உண்டாகும் என்பதால் சிறுவர்கள் இதை தவிர்க்கவேண்டும்.
விஷப்பூச்சி கடிகள்
விஷப்பூச்சிகடிக்கு உள்ளானவர்கள் உடனடியாக அரை டீஸ்பூன் அளவு மிளகையும், கைப்பிடி அளவு அருகம்புல்லையும் சேர்த்து இடிக்கவும். அதை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து கொதிக்கவைத்து அரை டம்ளராக சுண்டும் வரை காய்ச்சி குடிக்க வேண்டும். இவை உடலில் விஷம் பரவுவதை தடுக்கும். விஷமுறிவாகவும் செயல்படும்.
பூரான் கடியால் உடல் முழுக்க திட்டு திட்டாக சருமம் சிவந்து போகும். வெற்றிலைச்சாறில் மிளகுத்தூளை ஊறவைத்து வெயிலில் வைத்தால் சாறு முழுக்க மிளகுத்தூளில் படிந்து பொடி ஆகும். இந்த பொடியை உலர்த்தி சாப்பிடவேண்டும்.
புழுவெட்டு
தலையில் புழுவெட்டு பிரச்சனை இருப்பவர்கள் இயற்கை முறையில் தீர்வு காண மிளகு சிறந்த தீர்வாக இருக்கும். ஆரம்பகட்டத்தில் கவனித்து மிளகு வைத்தியம் செய்தால் அதிசயத்தக்க வகியில் வேகமாக புழுவெட்டு குணமாகி முடி வளரவும் தொடங்கும்.
புழுவெட்டு இருக்கும் இடத்தில் சாம்பார் வெங்காயம் 2, மிளகு 8 முதல் 10 ( தேவைக்கேற்ப) கல் உப்பு மூன்றையும் மைய அரைத்து தடவி வர வேண்டும். தினமும் தடவி வந்தால் 10 நாட்களில் பலன் தெரியும். எரிச்சலில் புண், சிவப்பு போன்று வந்தால் இரவு நேரங்களில் சுத்தமான தேங்காயெண்ணெயை அதன் மீது தடவி வரவேண்டும்.