நமது சருமத்திற்கும் முடிக்கும் நிறத்தைக் கொடுக்கும் மெலனின் (Melanin) என்னும் சுரப்புக் குறைவதே அடிப்படைக் காரணம். இந்த மெலனின் சுரப்பு குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.
இளநரையை நீக்கிக் கொள்ளலாம். ஆனால் முதுமையில் வரும் நரையை தள்ளிப் போடலாம். அதை முற்றிலும் நீக்குவது என்பது முடியாத விசயம்.
மனக்கவலை, நிம்மதியின்மை, தூக்கமின்மை மன இறுக்கம் திடீர் அதிர்ச்சி ஓயாத சிந்தனை கடின உழைப்பு மிதமிஞ்சிய ஆசைகள், தனது நோக்கம் நிறைவேறாத ஏக்கம், மனவெறுப்பு, சதா கவலை இது போன்ற மன இயல்கூறுகளும் இள நரையை விரைவில் உண்டாக்கி விடும்.
இளநரையை பித்த நரை என்றும் சொல்வதைக் கேட்கிறோம். பித்த ஆதிக்கம் உள்ள உணவுகளை அதிகமாக உண்பதாலும் வைட்டமின் ‘B’ சத்து அல்லது ‘K’ சத்து குறைவதாலும் உவர்ப்பு, காரம், புளிப்பு பதார்த்தங்களை மிதமிஞ்சி உண்பதாலும் தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரப்பதாலும் இளநரை ஊக்குவிக்கப்படுகிறது எனலாம்.
உப்புத் தண்ணீரில் குளிப்பதாலும், தலைக்கு சரியாக எண்ணெயிட்டு பராமரிக்காததாலும் இளநரை ஏற்படும். பொதுவாக வெயிலில் வேலை செய்பவர்களுக்கு நரை விரைவில் வராது. ஆனால் நிழலில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு விரைவில் நரை வருவதை அனுபவப்பூர்வமாக அறியலாம்.
செம்பட்டை, இளநரை நீங்க!
இதற்கு தேவையானது.. ஏதாவது ஒரு காபி பவுடர் தான். இரண்டு தொடக்கம் மூன்று கரண்டி காபி பவுடரை சிறிய பாத்திரம் ஒன்றில் சிறிதளவு நீர் சேர்த்து இளம் தீயில் வைத்து நன்றாக கொதிக்க வையுங்கள்.
ஓரளவு கட்டியான பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்துவிடுங்கள். பின்பு இதனை தலையில் பூசி அரை மணி நேரம் விட்டு குளியுங்கள். ஆரம்பத்தில் பிரவுன் கலராக மாறும் தலை முடிகள் பின் இயற்கையான தலை முடிபோல் மாறிவிடும்…இதனால் தலைக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.. மாதம் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் போதுமானது..!
தேங்காய் எண்ணை ஒரு லிட்டர், நல்லெண்ணை ஒரு லிட்டர் எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு 1/2 லிட்டர் சேர்த்து நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி வாரத்தில் இருமுறை தலையில் தேய்த்து வர இளநரை வருவதை தவிர்க்கலாம்.
மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
கறிவேப்பிலையை ஒருநாள் விட்டு ஒருநாள் துவையல் அரைத்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும்.