ஒழுங்கற்ற உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை தான் இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு வகையான நோய்களுக்கு அடித்தளமாக அமைகிறது. நம் முன்னோர்கள் நீண்ட காலத்திற்கு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு அவர்களது சத்தான ஆகாரம் தான் காரணம். இன்றைய காலத்தில் சத்திற்கு மதிப்பின்றி, சுவைக்கே மதிப்பானது அளிக்கப்படுகிறது.
வருடத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் இதய நோயினால் உயிரிழக்கின்றனர் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது, இதய நோயால் ஏற்படும் உயிரிழப்பு தான் அதிகம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முக்கிய காரணமே, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உட்கார்ந்தபடியே வேலை பார்ப்பது தான்.
உடல் உழைப்பிற்கு இடம் இல்லாத போது உடலில் நோய்கள் அதிகரிக்க தான் செய்யும். வேலை உட்கார்ந்த படி பார்ப்பதாக இருந்தால், அதற்கேற்க உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் அல்லவா. அது தவறும் பட்சத்தில் தான் நோய் அணிவகுக்க தொடங்குகிறது. மோசமான உணவுப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு இதய நோய் அதிகமாக ஏற்படுகிறது. ஏனென்றால், அவர்களுக்கு இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு போன்றவை ஏற்பட்டு இதயத்தை பாதிக்கும் அபாயம் அதிகம். இதய நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு ஒரே முக்கிய வழி என்னவென்றால், ஆரோக்கியமான உணவுப்பழக்கம் தான்.
இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்து உதவுவது என்றால் சூப் என்று கூறலாம். ஏனென்றால், உணவுகளில் சூப் வகையை எடுத்துக் கொண்டால், அதில் கலோரிகள் குறைவு, ஊட்டச்சத்துக்கள் அதிகம். அதுமட்டுமல்லாது, உடல் எடை குறைப்பதற்கு கூட சூப் உதவும். அதிகப்படியான உடல் எடை கூட இதய நோயை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரிவதில்லை. இப்போது, இந்த கட்டுரையில், இதயத்தை பலப்படுத்த உதவும் 5 ஆரோக்கியமான வெஜிடபிள் சூப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்…
பீன்ஸ் மற்றும் துவரம் பருப்பு சூப்
பீன்ஸ் மற்றும் பருப்பு கலந்து செய்யப்படும் சூப், மிகவும் ஆரோக்கியமானது. ஏனென்றால், பீன்ஸ் மற்றும் துவரம்பருப்பானது, தாவர அடிப்படையிலான புரதச்சத்தின் சிறந்த மூலமாகும். எனவே, இவற்றில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் எதுவும் இல்லை. இவற்றில் அதிகப்படியான நார்ச்சத்து, பொட்டாசியம் உள்ளது. இவை இரண்டும் பெரும்பாலான இந்தியர்களின் உணவில் இருந்து மறைந்து கொண்டே வருகிறது. உடலுக்கு தேவையான அளவு பொட்டாசியம் கிடைக்காத போது இரத்த அழுத்தமானது அதிகரிக்கக்கூடும். ஒரு கப் பீன்ஸில் 425 மி.கி. பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள உதவும்.
ப்ராக்கோலி-உருளைக்கிழங்கு சூப்
இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிப்பதில் ப்ராக்கோலி-உருளைக்கிழங்கு சூப்பை விட சிறந்தது எதுவும் இருக்க முடியாது. இந்த சூப் செய்யும் போது கொழுப்பு நிறைந்த க்ரீம் எதையும் பயன்படுத்திவிடாதீர்கள். அதற்கு பதிலாக வெள்ளை பீன்ஸ் அல்லது உருளைக்கிழங்கு மற்றும் டோஃபூ பயன்படுத்தலாம். இவை எவ்வித கொழுப்பும் சேராமல் க்ரீம் போன்ற சுவையை சூப்பிற்கு கொடுக்கும். செய்வதற்கும் இது சுலபம் தான். ஒரு பாத்திரத்தில், நறுக்கிய ப்ராக்கோலி மற்றும் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளவும். அத்துடன் பொடியான நறுக்கிய வெங்காயம், 2 கப் தண்ணீர் மற்றும் மிளகுத் தூள், சுவைக்கேற்ப நட்மங் சேர்த்துக் கொள்ளவும். அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து இந்த கலவையை நன்கு கொதிக்க விடவும். காய்கறி நன்கு வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி சூடாக பருகலாம்.
காளான் க்ரீம் சூப்
காளானில் அதிகப்படியான பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் தடுத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து இதயத்திற்கு மிகவும் நல்லது. வேண்டுமென்றால், இத்துடன், கொழுப்பற்ற பால் மற்றும் கார்ன் ஸ்டார்ச் சேர்த்து செய்யலாம். இது க்ரீம் சேர்த்தது போன்ற தோற்றத்தை கொடுக்கும். காளானுடன், பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து செய்தால் சுவையான அற்புதமாக இருக்கும். அனைத்து பொருட்களையும் ஒன்றாக பாத்திரத்தில் போட்டு 20 முதல் 25 நிமிடங்களுக்கு குறைவான தீயில் வேக வைத்து எடுத்தால் சூப்பரான சூப் ரெடி.
க்ரீமி முட்டைகோஸ்-உருளைக்கிழங்கு சூப்
இதயத்திற்கு ஆரோக்கியமாக, அதே சமயம், சுவையாகவும், க்ரீமியாகவும் சாப்பிட வேண்டுமென்றால், அதற்கு ஏற்றது இந்த சூப் தான். ஏனென்றால், முட்டைகோஸில் இதயத்திற்கு நன்மையளிக்க கூடிய நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி அதிகமாக உள்ளது. முக்கியமான இந்த சூப் செய்யும் போது, உப்பு குறைந்த காய்கறிகள், கொழுப்பில்லாத பால் சேர்த்து செய்து சாப்பிட்டால் இதயத்தின் பலம் கூடும்.
இத்தாலியன் சூப்
மிகவும் பிரபலமான இத்தாலிய வெஜிடேபிள் மற்றும் பீன்ஸ் சூப்பான இந்த மூலிகை சூப் இதயத்திற்கு அதிக நன்மையை செய்யக்கூடியது. இந்த சூப்பில் உடலுக்கு ஆரோக்கியமான கேரட், தானியங்கள் , பீன்ஸ் மற்றும் தக்காளி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இத்துடன் வெள்ளை பீன்ஸ் கூட சேர்க்கலாம். ஆனால், சுண்டல் சேர்த்து செய்யப்படும் இந்த சூப்பின் சுவை மிகவும் அருமையாக இருக்கும். சுவைக்காக சேர்க்கப்படும் பதப்படுத்தப்பட்ட பீன்ஸ் வாங்கும் போது, சோடியம் குறைந்த பீன்ஸை தேர்ந்தெடுப்பது சிறந்தது. சூப்பின் சுவை மற்றும் நன்மையை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென்றால் ஆலிவ் ஆயிலை கூட பயன்படுத்தலாம்.