உடைக்கு பொருத்தமாக விழிகளின் நிறத்தையும் மாற்றிக் கொள்ள, கான்டாக்ட் லென்ஸ் உபயோகிக்கிற பழக்கத்தையும் தற்போதுள்ள பெண்களிடம் பார்க்க முடிகிறது.
அழகுக்காக அணிகிற கான்டாக்ட் லென்ஸ் பாதுகாப்பானது தானா? அது பார்வையில் பிரச்சனைகளை ஏற்படுத்தாதா? அதைப் பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பதை பார்க்கலாம்.
இப்போது பெண்களுக்கு கான்டாக்ட் லென்ஸ் அணிவதில் அதிக விருப்பம் காட்டுகின்றனர். ஏதோ வருடத்தில் ஒருநாள், இரண்டு நாள் உபயோகிப்பதென்றால் பரவாயில்லை. கான்டாக்ட் லென்ஸ் போட்டால் பார்வை கெட்டுப்போகும் என அர்த்தமில்லை.
ஆனால், சில விஷயங்களை சரிவரப் பின்பற்றத் தவறினால், கண்களில் இன்ஃபெக்ஷன் உண்டாகி, அதன் காரணமாக பார்வைப் பிரச்சனைகள் வரலாம். முக்கியமாக, லென்ஸை மிக ஜாக்கிரதையாக, முறையாக சுத்தப்படுத்த வேண்டும். லென்ஸ் போடுவதற்கு முன், கைகளை சுத்தமாகக் கழுவவேண்டும்.
சரியாக சுத்தப்படுத்தாக லென்ஸினுள் தேவையற்ற புரோட்டீன் சேர்ந்து விடும். அது நல்லதல்ல. லென்ஸை அதற்கான பிரத்யேக திரவம் கொண்டே சுத்தப்படுத்த வேண்டும். சிலர் எச்சில் தொட்டு சுத்தம் செய்வதையெல்லாம் பார்த்திருக்கிறேன். அது மிகமிக ஆபத்தானது.
லென்ஸை அகற்றியதும், அதற்கான பெட்டியில் பத்திரமாக வைக்க வேண்டும். கண்ட இடங்களிலும் வைக்கக்கூடாது. மேக்கப் போடும் பழக்கமுள்ளவராக இருந்தால், முதலில் லென்ஸ் போட்டுக் கொண்டு, அதன் பிறகே மேக்கப் போடவேண்டும்.
லென்ஸை அகற்றிவிட்டே, மேக்கப்பை நீக்க வேண்டும். வருடம் ஒரு முறையாவது கண் மருத்துவரை அணுகி, கண்களைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதும் மிக அவசியம். இந்த முறைகளை பின்பற்றி வந்தால் பிரச்சனை வராமல் தவிர்க்கலாம்.