சிலருக்கு வயிறு முட்ட சாப்பிட்டாலே இந்த பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்து விடும். நெஞ்சு கப கபவென எரிவது, எச்சிலை கூட விழுங்க முடியாமல் போய் விடும். இதற்கு நெஞ்செரிச்சல் என்று பெயர். சிலருக்கு சாப்பிட்ட உணவு தொண்டை பகுதி வரை மேலே ஏறி கீழே இறங்கும். இதற்கு எதுக்களித்தல் அல்லது அமிலத்தன்மை என்று பெயர்.
பொதுவாக இந்த இரண்டையும் மக்கள் ஒன்று என்று நினைப்பார்கள். ஆனால் இந்த இரண்டு செயலுக்கும் இடையே சற்று வித்தியாசம் காணப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த இரண்டு நிலைகளும் உயிருக்கு ஆபத்தானது இல்லை என்றால் கூட சீக்கிரமே குணப்படுத்த வேண்டும். இல்லையென்றால் குடல் பகுதியி்ல் புண்கள், அல்சர் இவற்றை ஏற்படுத்த வழிவகுத்துவிடும். எனவே இவற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
அசிடிட்டி அல்லது எதுக்களித்தல்
நமது கீழ் உணவுக் குழாயில் வட்ட வடிவ தசை இருக்கும். இது உணவுக்குழாய்க்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் காணப்படும். இது ஒரு கேட் மாதிரி செயல்படும். உணவு வாயின் வழியே உணவுக்குழாய்க்குள் செல்லும் போது இந்த தசை திறந்து அதை வயிற்று பகுதிக்கு அனுப்பி வைக்கும். பிறகு இந்த தசை மூடி வயிற்றில் இருக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மேலே வருவதை தடுக்கும். இப்படித்தான் உணவு சீரணம் ஆகிறது. இந்த தசை பலவீனமாக இருந்தாலோ, ஓய்வில் இருந்தாலோ அல்லது இறுகவில்லை என்றாலோ வயிற்றில் இருக்கும் அமிலம் தொண்டை வரை எழும்பி கீழே வரும். இதைத்தான் அசிடிட்டி அல்லது எதுக்களித்தல் என்று கூறுகிறோம்.
அசிடிட்டி அறிகுறிகள்:
* இருமல்
* தொண்டை புண்
* தொண்டையில் ஒருவித கசப்பான தன்மை
* தொண்டைப்பகுதி எரிச்சல் போன்றவை ஏற்படும்.
நெஞ்செரிச்சல்
நமது வயிற்று சுவர்கள் இந்த செரிமான அமிலத்தை தாங்கும் அளவு அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் உணவுக் குழாய் மென்மையான பகுதி. அவற்றால் இந்த அமில வரப்பை தாங்க முடியாது. இதனால் எதுக்களித்தலால் மேலே எழுந்த அமிலம் உங்கள் நெஞ்சுப் பகுதியில் உள்ள உணவுப் குழாய் பகுதியில் எரிச்சலை உண்டாக்கும். இந்த எரிச்சலைத் தான் நாம் நெஞ்செரிச்சல் என்கிறோம். ஆனால் எல்லா அமிலத்தன்மை எதுக்களிப்பும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தாது. இது ஒரு அசெளகரியத்தை உண்டாக்கும்.
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் அமில ரிஃப்ளக்ஸ் உணவுக்குழாய் தசை பலவீனம் அடைவதால் அமிலம் மேலே எழும்புகிறது. இதன் அறிகுறியாக அந்த பகுதியில் எரிச்சல் ஏற்படுகிறது இது தான் நெஞ்செரிச்சல்.
நெஞ்செரிச்சலின் அறிகுறிகள்:
* அதிகமாக சாப்பிட்ட உடனே மல்லாக்க படுக்கும் போது நெஞ்செரிச்சல் உண்டாகும்.
* நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் மற்றும் வலி
* தொண்டை எரிச்சல் உண்டாகும்.
தடுக்க வழிகள்:
அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலை தவிர்க்க வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் இதை குறைக்கலாம்.
* வயிறு முட்ட சாப்பிட்ட உடனே படுப்பதை தவிருங்கள். 2 மணிநேரம் கழித்து படுங்கள்.
* அதிகமாக சாப்பிடாதீர்கள். வயிறு நிறைந்த பிறகு சாப்பிடுவது உங்களுக்கு எதுக்களித்தல் பிரச்சனையை ஏற்படுத்தும்.
* சாப்பிடும் போது உணவை முழுசு முழுசாக விழுங்காதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிடுங்கள்.
* காரசாரமான உணவுகள், அமில உணவுகள் சிட்ரஸ் உணவுகளை தவிருங்கள். இவை எதுக்களித்தல் பிரச்சனையை ஏற்படுத்தும்.
* ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கத்தை தவிருங்கள்.
* உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாக இருக்கும். எனவே உடல் எடையை குறைக்க முற்படுங்கள்.
* தக்காளி மற்றும் வெங்காய ஜூஸ் குடிக்காதீர்கள்.
* பலருக்கு இரவில் எதுக்களித்தல் பிரச்சினை அதிகமாக இருக்கும். இதனால் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்படுபவர்கள். படுக்கும் போது உயரமான தலையணையில் தலையை வைத்து படுங்கள்.
* சுய மருந்து வேண்டாம்.
* அசிடிட்டி மற்றும் எதுக்களித்தல் பிரச்சனை அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகி விடுவது நல்லது.
முடிவு
உடற்பயிற்சி கூட உங்க வயிற்று செயல்பாட்டை அதிகரித்து அமிலம் மேல்நோக்கி வருவதை தடுக்கிறது. எனவே தகுந்த உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவுகள் மூலம் அமிலத் தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை ஓரங்கட்டலாம்.