எண்ணெய் சருமத்தினை பராமரிப்பது மிகவும் கடினமான விஷயம். அதிலும் முகத்தில் அசுத்தங்கள் சேர்ந்து முகப்பரு மற்றும் பிரேக்அவுட்டுகள் ஏற்படும் போது அவை சருமத்தில் கருமையான புள்ளிகள் மற்றும் வடுக்களை ஏற்படுத்தி விடும். இதனால் சருமத்தினை பார்ப்பதற்கே சோர்வாகவும், மந்தமாகவும் இருக்கும். நீங்கள் மேக்கப் செய்ய விரும்பினால் கூட உங்கள் சருமம் உங்களுக்கு ஒத்துழைக்காது.
மேக்கப் செய்த சில மணி நேரங்களிலேயே முகத்தில் எண்ணெய் வடிந்து சருமத்தினை சோர்வாக மாற்றி விடும். எனவே உங்கள் எண்ணெய் சருமத்தினை மிகவும் அழகாக மற்றும் பளபளப்பாக மாற்றுவதற்கும், சுத்தப்படுத்துவதற்கு உங்களுக்கு ஆப்பிள் ஜூஸ், பால் மற்றும் ரோஜா பூக்கள் உதவும். இவை மூன்றும் சேர்த்து சருமத்தில் பயன்படுத்தும் போது விரைவிலேயே நீங்கள் நல்ல மாற்றத்தினை உணருவீர்கள்.
ஆப்பிள் ஜூஸ்
ஆப்பிள் ஜூஸில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் உங்கள் சருமத்தினை பளபளக்கச் செய்யும். நீங்கள் ஆப்பிள் ஜூஸினை தினமும் உபயோகிக்கும் போது சருமத்தில் உள்ள கறைகள் மற்றும் நிறமியைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தி புத்துயிர் பெறச் செய்கிறது. மேலும் உங்கள் சருமத்தினை முழுவதுமாக சுத்தம் செய்து ஆரோக்கியமான சருமத்தினை தருகிறது.
தேன்
தேன் என்பது ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசராக பயன்படுகிறது. தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் முகப்பரு மற்றும் பிரேக்அவுட்களைத் தடுக்க உதவுகின்றன. அத்துடன் ஆக்ஸிஜனேற்ற பண்பு இருப்பதால் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி சருமத்தினை பிரகாசமாக்கி உங்களின் வயதான தோற்றத்தினை குறைக்கிறது.
பால்
பாலில் பல ஆரோக்கிய நன்மைகளும் அழகு நன்மைகளும் நிறைந்துள்ளன. இதில் உள்ள லாக்டிக் அமிலம் உங்கள் சருமத்தினை ஈரப்பதமாக வைத்து முகத்தில் ஏற்படும் அதிகப்படியான எண்ணையை உறிஞ்சி சருமத்தினை சுத்தமாக வைக்கிறது. மேலும் பால் ஒரு எக்ஸ்போலியேட்டராக இருப்பதால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி சருமத்தினை பளபளக்கச் செய்கிறது.
பயன்படுத்தும் விதம்
நீங்கள் தேர்வு செய்யும் ஆப்பிள் சுத்தமான மற்றும் புதிய ஆப்பிளாக இருக்க வேண்டும். முதலில் ½ கப் ஆப்பிள் ஜூஸ், ஒரு தேக்கரண்டியளவு தேன், 1/3 கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால் எடுத்து அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இதனைப் பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் வைத்துச் சேகரித்து ஒரு வாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது தேவையான அளவு கலவையை ஒரு கிண்ணத்தில் எடுத்து பஞ்சு கொண்டு நனைத்து முகத்தில் தேய்த்து முகத்தினை சுத்தப்படுத்துங்கள். இதனை நீங்கள் தினமும் தவறாமல் பயன்படுத்தலாம். விரைவிலேயே நல்ல மாற்றத்தினை பெற்று சுத்தமான மற்றும் பளபளப்பான சருமத்தினை பெற்றிடுங்கள்.