33.3 C
Chennai
Saturday, May 18, 2024
111152374 gettyimages

கொரோனா தடுப்பு மருந்து முதல் வெற்றி! மனிதர்களிடம் சோதனை செய்ய முடிவு

கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் விலங்குகளுக்கு அளித்து முதல்கட்ட வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து மருத்துவர்கள், அடுத்ததாக மனிதர்களிடம் அதை பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். கொரோனா தடுப்பு மருந்து மட்டுமே அதன் பரவலை கட்டுப்படுத்தும் ஒரே தீர்வு என்று உலக அளவில் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அனைத்து நாடுகளும் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பாக மிகத்தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றன. சீனாவும், அமெரிக்காவும் ஏற்கனவே மனிதர்களிடம் தங்களுடைய சோதனையை தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இங்கிலாந்தில் ரூ.133 கோடி ஒதுக்கப்பட்டு, தடுப்பு மருந்து ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அந்நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முதல்கட்டமாக தடுப்பு மருந்து ஒன்றை தயாரித்துள்ளனர். இந்த மருந்து ஏற்கனவே ஆய்வகத்தில் வளர்க்கப்படும் விலங்குகளின் உடலில் செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் வெற்றி கிடைத்ததை தொடர்ந்து, நோய் பாதித்த மனிதர்களிடம் அல்லது தன்னார்வலர்களிடம் இதை செலுத்தி சோதனை செய்ய இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. ஓரிரு நாட்களில் இந்த சோதனை தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சோதனை வெற்றி பெற்றால், உடனடியாக அந்த மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக இங்கிலாந்து அரசு, நாட்டின் தலைமை அறிவியல் ஆலோசகர் பேட்ரிக் வாலான்ஸ், துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜோனதான் வான்டேம் தலைமையில் பணிக்குழுவை அமைத்துள்ளது.