பத்தாம் மாதம் தொடங்கிய உடனேயே கர்ப்பிணிப் பெண் தன் உடல் மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் பல நுணுக்கமான விஷயங்களும் அறிகுறிகளும் பிரசவம் சீக்கிரம் நிகழப் போகின்றது என்பதை உணர்த்திய வண்ணம் இருக்கும்.
எந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் சுகப் பிரசவ வழியிலேயே குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்புவாள். அதுதான் குழந்தையின் எதிர்காலத்திற்கும் கர்ப்பிணிப் பெண்ணின் எதிர்கால உடல் ஆரோக்கிய நிலைகளுக்கும் ஏற்புடையது. பத்தாம் மாதம் தொடங்கிய உடனேயே கர்ப்பிணிப் பெண் தன் உடல் மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் பல நுணுக்கமான விஷயங்களும் அறிகுறிகளும் பிரசவம் சீக்கிரம் நிகழப் போகின்றது என்பதை உணர்த்திய வண்ணம் இருக்கும். அப்படி என்னென்ன விஷயங்களைக் கர்ப்பிணிப் பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதைக் கீழே பார்க்கலாம்.
* பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு அவ்வப்போது முதுகு வலி ஏற்படுவது இயல்பானதுதான். இருப்பினும் பிரசவம் நிகழப்போகும் காலகட்டத்தில் இந்த முதுகுவலி வழக்கத்தை விட அதிகமாகக் காணப்படும். இதைக்கொண்டு பிரசவம் சீக்கிரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதைக் கர்ப்பிணிப் பெண்கள் உணர்ந்து கொள்ளலாம்.இது நிச்சயம் சுகப் பிரசவத்திற்கான அறிகுறி தான்.
* சுகப் பிரசவம் நிகழச் சாத்தியம் ஏற்படுவதற்கு சில நாட்களோ அல்லது வாரங்களுக்கு முன்னர் இந்த பிரசவ அறிகுறி தென்படும். கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உடல் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து அதன் மூலம் இந்த விஷயத்தில் அறிந்து பயமில்லாமல் எதிர் கொள்ளலாம். இதன் மூலம் அவர்கள் பிரசவத்தை எதிர்நோக்கி தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளலாம். செர்விக்ஸ் முழுமையாக விரிவடையும் பொழுது 10 சென்டி மீட்டர் என்ற அளவை அடைந்து இருக்கும்.
* கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் பல்வேறு ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்கும். கருவில் உள்ள குழந்தை முழு வளர்ச்சியைக் கடைசி மாதத்தில் எட்டி இருக்கும். அந்த நேரத்தில் குழந்தையின் தலை திரும்பி பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக வரத் தயாராகும். குழந்தையின் தலைப் பகுதியானது செர்விக்ஸ் பகுதியில் அழுத்தம் ஏற்படுத்திக் கொண்டு இருக்கும். இந்த நேரத்தில் செர்விக்ஸ் கிளான்டானது சளி மாதிரியான திரவத்தைச் சுரக்கத் தொடங்கும். இந்த சளியானது சற்று அடர்த்தியான தன்மையோடு காணப்படும். சில சமயங்களில் இதனோடு இரத்தம் அல்லது இரத்தக்கட்டிகள் காணப்படும். பிரசவம் நிகழப் போவதற்கான இந்த அறிகுறி பல கர்ப்பிணிப் பெண்களிடம் காணப்படுகின்றன. இருப்பினும் ஒரு சில கர்ப்பிணிப் பெண்களிடம் இந்த அறிகுறிகள் தென்படுவதில்லை.
* குழந்தை கருவறையிலிருந்து வெளியே வர நேரம் வந்துவிட்டது என்றால் கர்ப்பிணிப் பெண்களின் பெல்விக் பகுதி எலும்புகள் மற்றும் இணைப்புகளும் சற்று தளர்ச்சி அடையத் தொடங்கும். இதுவும் பிரசவம் விரைவில் நிகழப் போவதற்கான அறிகுறியே ஆகும். அப்போது தான் எலும்புகள் சற்று விரிவடைந்து குழந்தை எளிதாகச் சுகப் பிரசவ வழியில் வெளி வர முடியும்.
* கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்ப காலம் முழுவதும் சற்று சோர்வாகும் களைப்பாகவும் இருப்பர். ஆனால் சுகப் பிரசவம் நிகழப்போகும் தருணம் நெருங்குகையில் அவர்கள் மிகவும் தெம்பாகவும் சக்தி நிறைந்தவர்களாகவும் காணப்படுகின்றார்கள். இதற்குக் காரணம் பிரசவத்தைத் தாங்க கூடிய சக்தி உடலில் இயற்கையாக உற்பத்தியாவது தான். இதை ஆங்கிலத்தில் நெஸ்டிங்(nesting) என்பார்கள்.
* கடைசி பிரசவ காலத்தில் குழந்தையின் தலை திரும்பி பெல்விக் பகுதியில் இருக்கும். இந்த காரணத்தினால் கர்ப்பிணிப் பெண்ணின் சிறுநீர்ப்பை குழந்தையின் தலைப் பகுதியால் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். அதனால் நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டபடி இருக்கும். இது சுகப் பிரசவம் நிகழச் சாத்தியம் ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும்.
* கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரசவ காலம் நெருங்கிவிட்டது என்ற சமயத்தில் அவர்களின் பிறப்பு உறுப்பில் வலி ஏற்படுகின்றது. இந்த வித வலி எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. சில பெண்களுக்கு மட்டும் ஏற்படுகின்றது.
* கர்ப்பிணிப் பெண் தன் பிரசவ நேரத்தை எட்டிக் கொண்டிருக்கும் போதே அவளால் இலகுவாக சுவாசிக்க முடிகின்றது. ஆரம்பத்தில் இருந்து மூச்சுத் திணறல் எல்லாம் குறையும். குழந்தையின் நிலை மாறுதலே இந்த புதிய மாற்றத்தை சாத்தியப்படுத்தும். இதற்கு முக்கிய காரணம் டையப்ரம் பகுதியிலிருந்து அழுத்தம் குறைந்ததே ஆகும்.
* செர்விக்ஸ் பகுதியானது பிரசவ நேரத்தை நெருங்கும் காலகட்டத்தில் மெல்லிய நிலையை அடையும். இவ்வாறான மாற்றம் செர்விக்ஸ் பகுதியில் ஏற்படுவதாலேயே அதனால் இலகுவாக விரிவடைய முடியும். இதை ஆங்கிலத்தில் தின்னிங்(thinning) என்று கூறுவார்கள். இதனால் குழந்தை எளிதாக பிறப்பு உறுப்பு வழியே வெளியேற முடியும்.
* குழந்தையின் தலைப் பகுதியானது சற்றுத் திரும்பி கீழே வரும். இவ்வாறான நிலையை கர்ப்பிணிப் பெண்ணின் உடலமைப்பில் இருந்தும் கண்டு கொள்ளலாம். கூர்ந்து கவனித்தால் கர்ப்பிணி பெண் இந்த மாற்றத்தை உணர வேண்டும். இயற்கையாகவே ஒரு பெண்ணின் உடல் ஒவ்வொரு விசயத்திலும் குழந்தையைச் சுகமான வழியில் பிரசவிக்கத் தயார்ப் படுத்திக் கொண்டே இருக்கும்.
* குழந்தையின் தலைப் பகுதியானது தொடர்ச்சியாக பெல்விக் பகுதியில் அழுத்தம் ஏற்படுத்திக் கொண்டிருப்பதால் அந்தப் பகுதியில் அவ்வப்போது சிறு வலி ஏற்பட்டபடியே இருக்கும். இந்த உணர்வைக் கர்ப்பிணிப் பெண்கள் மலம் வருவது போன்று உணர்வு என்று தவறாக நினைத்துக் கொள்கின்றனர். இது உண்மையில் அழுத்தத்தின் காரணமே ஆகும். இந்த அறிகுறி தென்பட்டாலும் சுகப் பிரசவம் நிகழப் போகிறது என்று அர்த்தம்.
* குழந்தையானது தாயின் கருவறையில் உள்ள அம்னியாட்டிக் திரவத்தில் வாழும். இந்த அம்னியாட்டிக் திரவமானது நிறமற்றது மற்றும் நறுமணம் அற்றதாகும். இது பார்வைக்குச் சிறுநீர் போலவே தென்படும். இந்த திரவத்தையும் சிறுநீரையும் வேற்றுமைப் படுத்திப் பார்ப்பது சற்று கடினமானது. பிரசவம் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறியாக இந்த விஷயம் கருதப்படுகின்றது. பனிக்குடம் உடைந்து நீர் மெல்ல கசியத் தொடங்கும். இந்த அறிகுறி தென்பட்ட உடனேயே கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரை அணுக வேண்டும்.-Source: maalaimalar