தொப்பையால் அவஸ்தைப்படுவோர் அதிகம். அத்தகையவர்கள் அத்தகைய தொப்பையைக் குறைக்க, பல்வேறு டயட், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வார்கள். அப்படி தொப்பையைக் குறைக்க அப்டமன் பயிற்சி அல்லது அடி வயிற்று பயிற்சிகளை செய்தும் தொப்பை குறையவில்லையா? ஒரு வேளை நீங்கள் எந்த பயிற்சியையாவது செய்ய மறந்துவிட்டீர்களா? அப்படியெனில் மேற்கொண்டு படித்தால் நிச்சயம் தெரிந்துவிடும்.
அடி வயிற்று கொழுப்பை கரைக்க எந்த விதமான தனிப்பட்ட பயிற்சியும் இல்லாத பட்சத்தில், இந்த கட்டுரை எப்படி இத்தகைய கொழுப்பு உருவாகிறது என்பதையும், அதை எப்படி கரைக்கலாம் என்றும் உங்களுக்கு தெளிவாக விளக்கும்.
முக்கியமாக கீழ்வரும் சில குறிப்புகள் நீங்கள் செய்யும் பயிற்சியை நன்கு செய்ய உதவும். சரி, அது என்னவென்று பார்ப்போமா.
எளிமையான பயிற்சி
எளிமையானதாகவும் சுலபமானதாகவும் உங்கள் பயிற்சியை துவங்குங்கள். உதாரணத்திற்கு சைக்கிள் ஓட்டத் தெரியாமல் உங்களால் வெகு தூரம் சைக்கிள் பந்தயத்தில் செல்ல முடியாது. அது போல துவக்கத்தில் எளிதான பயிற்சி முறைகளை மேற்கொள்ளுங்கள் – ஒரு பலகையை 20 நொடிகள் பிடித்துக் கொண்டோ அல்லது 10 முறை க்ரன்ச் (Crunch) பயிற்சியையோ செய்து வாருங்கள்.

பயிற்சி செய்வதற்கு முன் தயார் செய்வது
பலர் பயிற்சி செய்வதற்கு முன் முறையாக தங்களை தயார் செய்து கொள்ள தேவையில்லை என்று நினைத்துக் கொண்டு, தங்களை சரியான முறையில் தயார் செய்து கொள்வதில்லை. கடினமான பயிற்சியை மேற்கொள்ளும் போது, தசைகளில் வலியும், காயங்களும் வீக்கங்களும் ஏற்படலாம். ஆகையால் பயிற்சிக்கு முன் ‘வார்ம் அப்’ செய்வது, உடலின் தசைகளில் காயங்கள் ஏற்படுவதை தடுக்கும். உதாரணமாக, சிறிது தூரம் விரைவாக நடப்பது, குனிந்து உங்கள் பாதங்களை மெதுவாக தொடுவது, மூச்சை இழுத்து விடுவது, இடுப்பை வளைத்து சில பயிற்சிகள் மெதுவாக செய்வது சிறந்ததாகும். இச்செயல்கள் உங்களை வயிற்று பயிற்சிக்கு தயார்படுத்தும்.

சுவாசம்
வயிற்று பயிற்சியின் போது முக்கிய தசைகள் நன்றாக செயல்பட ஆக்ஸிஜன் இன்றியமையாததாகும். எனவே மூச்சை அடக்கக் கூடாது. பயிற்சியின் போது எளிமையான நேரங்களில் மூச்சை இழுக்கவும், அதுவே கடினமாக இருக்கும் நேரங்களில் மூச்சை வெளியே விடவும் வேண்டும். உதாரணமாக, க்ரன்ச் பயிற்சியில் மேல் எழும் போது மூச்சை வெளியே விட வேண்டும்.

கவனம் தேவை இக்கனம்
‘பயிற்சியின் போது தசைகள் மட்டும் தான் முக்கிய பங்கு வகிக்கிறது என நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு. உங்கள் மனமும் பயிற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதலால் பயிற்சியின் போது டி.வி பார்ப்பதை தவிர்த்து தசைகள் மீது கவனம் செலுத்துங்கள். தசைகள் நகர்ந்து, விரிவடைவதையும் சுருங்குவதையும் உணருங்கள். இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

சகலகலா வல்லவராகுங்கள்
தட்டையான வயிற்றைப் பெற எல்லா பக்கங்களிலும் தசைகளை நகர்த்தி பயிற்சி செய்தால் நல்ல பலனை விரைவில் பெறலாம். க்ரன்ச் பயிற்சியில் மட்டும் கவனம் செய்யாதீர்கள். வக்ராசனா போன்று உடம்பை வளைக்கும் மற்றும் திரும்பும் விதமான பயிற்சிகளையும் செய்யலாம்.

சமநிலை
வலிமையான வயிற்றைப் பெற உங்கள் வழக்கான பயிற்சியில் சில பாலன்ஸ் செய்யும் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒற்றை காலில் நின்று மற்றொரு காலை தொடையின் மீது வைத்துக் கொள்வது, கைகளை தலைக்கு மேல் வைத்து உள்ளங்கைகளை தொடும் வண்ணம் வைத்துக் கொள்வது என ‘விரிக்காசனா’ போன்ற பயிற்சிகளையும் செய்யலாம்.

ஓய்வு எடுத்தல்
உங்களின் பயிற்சி முழுமையடைய போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டும். வயிற்று பயிற்சியை அளவுக்கு அதிகமாக செய்வதால் பலன் பெற முடியாது. ஓய்வு எடுப்பதால் தசைகள் மீண்டு மேலும் உறுதியடையும்.

மெதுவாக.. நிதானமாக..
அவசர அவசரமாக பயிற்சி செய்தால் பலன் பெற முடியாது. மெதுவாகவும், நிதானத்துடனும் பயிற்சி செய்தால் சிறந்த முறையில் கொழுப்பை குறைக்கலாம்.

யோகா
ஜிம்மிற்கு சென்று களைத்து விட்டதா? பெரும்பாலான யோகாசனங்கள் முக்கிய தசைகளை உறுதிப்படுத்தும். யோகாசனங்கள் உங்கள் உடலோடு, உள்ளத்தை மட்டுமே உறுதிப்படுத்துவதில்லை. மாறாக உங்களுக்கு நல்ல வளைவையும், உங்கள் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.

எடை
உங்களின் வயிற்று தசைகள் அதிக எடைகளை தூக்குவதால் சிறந்த பலனைப் பெறும். ஒவ்வொரு முறை பயிற்சி செய்யும் போதும், எடைகளை ஒரு சில கிலோ ஏற்றி பயிற்சி செய்வதால், இன்னும் நல்ல பலனை அடையலாம்.

சாப்பிடுவதில் கவனம்
நல்ல அழகான வயிற்றினை பெற சரியாக சாப்பிட வேண்டும். ஜிம்மிற்கு தினம் சென்று கடினமான பயிற்சி செய்வதால் மட்டுமே போதாது. ‘உங்கள் உணவில் புரதம், கொழுப்பு குறைவான கொழுப்புடைய பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள், பழங்கள் மற்றும் நல்ல காய்கள் ஆகியவை இருக்க வேண்டும்’ என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.