வரும்போது போய்க்கொள்வது அல்ல மலம் கழித்தல். தினம் அது கழிக்கப்பட வேண்டும். இல்லையேல் வாயுத் தொல்லையில் இருந்து கேன்சர் வரை வர வழிவகுக்கும். கடுக்காய்ப் பிஞ்சை விளக்கெண்ணெயில் லேசாக வறுத்துப் பொடித்து காற்றுப் புகாத இறுக்கமான புட்டியில் வைத்துக்கொண்டு, உணவு உண்ட பின் 30-40 நிமிடங்கள் கழித்து 1/2 தேக்கரண்டி பொடியை வெந்நீரில் கலக்கி இரவில் சாப்பிடுங்கள்.
சிக்கலின் தீவிரம் பொறுத்து 2 கரண்டி வரைகூட அதிகரிக்கலாம். தயார் நிலையில் உள்ள இந்தப் பொடிகளோடு, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், அதிமதுரம், வசம்பு, லவங்கப் பட்டை, வால்மிளகு, அன்னாசிப் பூ, மாசிக்காய், கருஞ்சீரகம், சாதிக்காய், ஓமம்… ஆகிய உலர் மருத்துவ உணவுகள் கண்டிப்பாக வீட்டில் கண்ணாடிப் புட்டியிலோ, காற்றுப் புகாத பிற கலன்களிலோ கொஞ்சமாக இருக்க வேண்டும்.
கூடவே வீட்டுத் தோட்டத்திலோ, பால்கனி தொட்டியிலோ… கரிசலாங்கண்ணி, துளசி, தூதுவளை, ஆடு தொடா இலை, கீழாநெல்லி, கற்பூரவல்லி… போன்றவற்றை வளர்ப்பதும், உலர் வற்றலாய், மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், பிரண்டை வற்றல் வைத்திருப்பதும் அவசியம். வருடத்தில் எல்லா மாசமும் மாம்பழ ஜூஸ் தரும் கெமிக்கல் வித்தை இதில் கூடாது.
ஆதலால், செடி துளிர்க்கும், பூக்கும், காய்க்கும் பருவத்தில் சேகரிக்கப்பட்டு, உலர்த்தியும் பொடித்தும் பத்திரமாக வைத்திருந்து, நோயின்போது சரியாகப் பரிமாறப்பட வேண்டும். அதுவே ஆயுளுக்கும் நலம் பயக்கும்