ஆட்டுக்கால் சூப்,பாயா எல்லோரும் சாப்பிட்டு இருப்பீர்கள்.
இது கொஞ்சம் ரேரான சங்கதி! செய்து பாருங்கள்,சாப்பாடு,இட்லி,தோசை எல்லாவற்றுக்கும் சரி ஜோடி இது.
தேவையான பொருட்கள்.
ஆட்டுக்கால் 4
சின்ன வெங்காயம் 200 கிராம்
பெரிய வெங்காயம் 1
தக்காளி 2
தேங்காய் துருவல் 1 கப்
கசகசா 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் 3 டீஸ்பூன்
மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு 2
தேங்காய் ஓடு ஒரு துண்டு.
தாளிக்க,
பட்டை
கிராம்பு,
பிரிஞ்சி இலை
அன்னாசிப்பூ
கடல்பாசி
கறிவேப்பிலை
செய்முறை,
மேலே கொடுக்கப்பட்டு உள்ளவற்றில் தேங்காய் கசகசா இரண்டையும் தனியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
தேங்காய் ஓடு,உருளைக்கிழங்கு தவிர மீதியுள்ள அனைத்து மசாலாப் பொருட்களையும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி எடுத்து அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்குகளை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
ஆட்டுக்காலை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வையுங்கள்.
இப்போது,குக்கரை அடுப்பில் வைத்து, இரண்டு டீஸ்பூன் எண்ணை விட்டு தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளித்து அதனுடன் ஆட்டுக்கால்,உருளைக் கிழங்கு ஆகியவற்றுடன் தேங்காய் ஓட்டுத் துண்டையும் போட்டு மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து குக்கரை மூடி ஆறு விசில் விடுங்கள்.
குக்கர் ஆவி அடங்கியதும் திறந்து பார்த்தால் தேங்காய் ஓட்டின் காரணமாக ஆட்டுக்கால் துண்டுகள் நன்றாக வெந்திருக்கும்.மீண்டும் அடுப்பைப் பற்றவையுங்கள்
இப்போது தேங்காய் ஓட்டைத் தூக்கிப் போட்டுவிட்டு, அரைத்து வைத்த மசாலாவிப் போட்டு ஐந்து நிமிடம் கொதித்ததும்,தேங்காய் கசகசா கலவையை கொட்டி உப்பு சரிபாருங்கள்.மேலும், ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டால் அட்டகாசமான ஆட்டு கால் குழம்பு ரெடி.