பேஷியல் என்பது உங்கள் முகத்தை பொலிவாகவும் களைப்புடனும் வைத்துக் கொள்ள பயன்படுகிறது. அதிலும் இந்த குளிர்காலம் பேஷியல் செய்வதற்கு ஏற்றது என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். இது உங்களுக்கு ஒரு அழகு விருந்து என்றே அவர்கள் கூறுகிறார்கள். இப்படி குளிர் காலத்தில் நீங்கள் பேஷியல் பண்ணும் போது முகத்தில் ஏற்படும் முன்னேற்றத்தை அழகாக காண முடியும்.
குளிர்காலத்தில் முடிந்த வரை ஆல்கஹால் சேர்க்கப்படாத க்ரீம்களைப் பயன்படுத்துங்கள். இது சரும pH அளவை பராமரிக்க உதவுகிறது. மேலும் சருமத்தை புத்துணர்ச்சி செய்ய பழங்களைக் கொண்டு பேஷியல் செய்து வரலாம். வாழை, தர்பூசணி, கிவி போன்றவை உங்கள் சருமத்திற்கு ஈரப்பதமூட்டி ஜொலிப்பாக்க உதவும்.
இந்த குளிர்கால பேஷியல் முறைகள் முகத்தை மெருகேற்றுவதோடு, சரும பிரச்சனைகளையும் விரட்டி அடிக்கிறது. சரி வாங்க இதன் நன்மைகளைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
கூடுதல் பராமரிப்பு
குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று முகத்தில் படும் போது, சருமம் வறண்டு போய் ஈரப்பதமின்றி இருக்கும். இதனால் சருமத்தில் வெடிப்பு, வறட்சி நிலவக் கூடும். எனவே இந்த மாதிரியான சமயங்களில் கூடுதல் பராமரிப்பு தேவைப்படுகிறது.
சரும ஊட்டச்சத்துக்கள்
நாம் என்ன தான் ஏகப்பட்ட க்ரீம்களை தடவினாலும் குளிர்காலத்தில் இருந்து உங்கள் முகத்தை பாதுகாப்பது கடினம். எனவே முக அழகை பராமரிக்க, சருமத்திற்கு சில ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டியிருக்கிறது. வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் அடங்கிய அழகு சாதனப் பொருட்கள் தேவைப்படுகிறது. இது உங்கள் சருமம் வயதாவதை தடுத்தல், சரும அழற்சியை போக்குதல், சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பு, சரும பிரச்சனைகள் எல்லாவற்றையும் போக்குகிறது.
ஆழமான சுத்தம்
குளிர்காலத்தில் நமது சருமம் வறண்டு போய் இறந்த செல்கள் தேங்க ஆரம்பித்துவிடும். இவை நமது சரும துளைகளை அடைத்து ஏகப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். பருக்கள், கரும்புள்ளிகள் தோன்ற வாய்ப்புள்ளது. எனவே குளிர்காலத்தில் முகத்தை ஆழமாக சுத்தம் செய்வது முக்கியம். இப்படி ஆழமாக சுத்தம் செய்யும் போது முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் ப்ரஷ்ஷாகவும், மென்மையாகவும் மாற ஆரம்பித்து விடும்.
சருமத்திற்கு ஈரப்பதமூட்டுதல்
குளிர்காலத்தில் அடிக்கும் குளிர்ந்த காற்றால் சரும ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும். இதனால் சருமத்தில் அரிப்பு, எரிச்சல் மற்றும் சிவத்தல் போன்றவை ஏற்படும். எனவே இதற்கு பேஷியல் க்ரீம், மாய்ஸ்சரைசர், சீரம், பேஸ் மாஸ்க் போன்றவற்றை பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும்.
இப்படி சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் போது இயற்கையான பொலிவை பெற முடியும். லேசாக மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து முகம் எப்பொழுதும் ப்ரஷ்ஷாக தென்படும். மேலும் சரும கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கவும், மென்மையான சருமம் பெறவும் உதவுகிறது.
கெமிக்கல் நிறைந்த பேஷியல் வேண்டாம்
நீங்கள் பேசியலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் அதிகளவு கெமிக்கல்கள் இருந்தால், அது உங்கள் சருமத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே குறைந்த பட்சம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பேஷியல் செய்ய முற்படுங்கள். இது உங்கள் சருமத்திற்கு எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. மேலும் உங்கள் சரும pH அளவை சரியான அளவில் வைக்க உதவுகிறது.
எத்தனை தடவை பேஷியல் செய்யலாம்?
குளிர்காலத்தில் 4-6 வாரங்களுக்கு ஒரு முறை பேஷியல் செய்து வாருங்கள். ஒரு தடவை செய்த உடனே வித்தியாசத்தை காண இயலாது. படிப்படியாக செய்து வரும் போது நல்ல மாற்றத்தை காண முடியும்.
பேஷியல் செய்யும் போது உங்கள் சரும வகை, சரும நிறம், தன்மையை மனதில் கொண்டு பொருத்தமான முறையை தேர்ந்தெடுங்கள். சருமம் அழகு பெறும்.
குளிர்கால சரும டிப்ஸ்கள்:
பேசியலை தவிர குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்க கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றி வாருங்கள்.
* வெதுவெதுப்பான நீரில் குளிக்க முற்படுங்கள். சூடான நீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ குளித்தால் சருமம் மேலும் வறண்டு போய் அரிக்க ஆரம்பித்து விடும்.
* மாய்ஸ்சரைசர் அப்ளே செய்யுங்கள்
* அத்தியாவசிய எண்ணெய்களை குளிக்கும் போது பயன்படுத்தி வரலாம்.
* நீராவி பிடிக்கும் முறையை பின்பற்றி வரலாம். இது அந்த குளிருக்கு இதமாக இருப்பதோடு உங்கள் சருமமும் பொலிவாக இருக்க உதவும்.