மாசிக்கருவாடு என்பது சுத்தம் செய்யப்பட்ட சூறை மீனை உப்பு நீரில் வேகவைத்து மண்ணில் புதைத்து வைத்து செய்யப்படுவது.
புதைத்த மீனைக் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு எடுத்தால் அது காய்ந்த மரக்கட்டை போல ஆகி இருக்கும் உடைக்கச் சுத்தியல் தேவைப்படும் அளவுக்கு இறுகி காணப்படும்.
இதை இலங்கை மக்களின் தேசிய உணவு என்று சொல்லலாம்.
தமிழகத்தில் தூத்துக்குடி பகுதியிலும் கீழத்தஞ்சை மக்களிடமும் இந்த சம்பலுக்குச் செல்வாக்கு இருக்கிறது. சென்னையிலும் கிடைக்கிறது.
விலை கொஞ்சம் அதிகம்,ஆனால் அதன் தனித்த சுவை அறிந்தவர்கள் விலையைப் பற்றிக் கவலை படுவதில்லை.
இதுதான்,கடல் உணவுகளிலேயே எளிமையாக செய்யக்கூடியது.ஐந்து நிமிடத்தில் செய்து விடலாம்,இது இட்லி தோசை,சூடான சோறு ஆகியவற்றுக்கு அசத்தலான காம்போவாக இருக்கும்.
கடையில் விறகுபோல் அடுக்கி வைத்திருப்பார்கள். அதை வாங்கிவந்து அப்படியே மிக்சியில் போட்டால் மிக்சி பிளேடுகள் உடைந்து விடும் ஜாக்கிரதை.
வாருங்கள்,அடுப்பே இல்லாமல்,மாசி சம்பல் செய்யலாம்.
தேவையான பொருட்கள்.
100 கிராம் மாசி கருவாடு,
கால் மூடி தேங்காய்,
நெருப்பில் சுட்ட காய்ந்த மிளகாய் 2
சின்ன வெங்காயம் 4
சிறிதளவு உப்பு
செய்முறை
கடையில் வாங்கிவந்த மாசியை,சிறு உரல்,அல்லது சுத்தியலால் தட்டி சின்னச் சின்ன துண்டுகளாக உடைத்துக் கொள்ளுங்கள்.
அவற்றை மிக்சியில் போட்டு இரண்டு சுற்று ஓட விடுங்கள்.இப்போது அதனுடன் தேங்காய் சேர்த்து மேலும் இரண்டு சுற்று,அப்புறம் சுட்ட மிளகாய் சேர்த்து.இரண்டு சுற்று,கடைசியாக சின்ன வெங்காயம் கால் ஸ்பூன் உப்புச் சேர்த்து இரண்டு சுற்றுச் சுற்றினால் மாசி சம்பல் ரெடி.எந்தக் காரணம் கொண்டும் தண்ணீர் சேர்த்து விடாதீர்கள்.
இதை,சூடான இட்லி அல்லது தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம்.
சூடான சோற்றின் மேல் இதைத் தூவி,இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.
மாசியை மட்டும் பொடி செய்து ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.வீட்டில் பொரியல் செய்யும்போது, பொரியலை ஆஃப் செய்த உடன்,ஒரு ஸ்பூன் மாசியை அதன் மீது தூவினால் வாசனை தூக்கும். கறிவேப்பிலைகூட சட்டியில் மிஞ்சாது.