30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை அச்சுறுத்திய ‘டிப்தீரியா’ என்னும் கொடிய நோய் தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் 8 முதல் 16 வயதுக்குட்பட்ட பத்து அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலியோவைப்போல, டிப்தீரியா நோயும் தமிழகத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வந்த நிலையில், மீண்டும் தீவிரமாக பாதித்துவருவது தமிழகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை அரசு மருத்துவமனை
தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 20 பேர் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஓரிரு உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இதற்கு உரிய சிகிச்சைகளும், தடுப்பு மருந்துகளும் எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் உயிரிழப்புகூட நேரிட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நோய் பரவும் முறை, அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் தலைவரும் குழந்தைகள் நல மருத்துவருமான ரெக்ஸ் சற்குணத்திடம் பேசினோம்.
“டிப்தீரியா (Diphtheria) என்னும் தொண்டை அடைப்பான் நோய் ‘காரிணி பாக்டீரியம் டிப்தீரியே’ (Coryne Bacterium Diphtheriae) என்ற வகை பாக்டீரியாக்களால் பரவுகிறது. இந்தக் கிருமிகளில் நான்கு வகைகள் உள்ளன. அவற்றில் ‘கிரேவிஸ்’ (Gravis) என்ற பாக்டீரியாதான் மிகவும் ஆபத்தானவை. இந்தக் கிருமிகள் தொண்டையைப் பாதித்து, சுவாசத்தையும் உணவை விழுங்குவதையும் தடுப்பதால் இது ‘தொண்டை அடைப்பான்’ என்று அழைக்கப்படுகிறது.
தொண்டை வலி
எப்படிப் பரவும்?
ஏற்கெனவே இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி இருமும்போதும் காறியுமிழும்போதும் மூக்கைச் சிந்தும்போதும் பாக்டீரியா காற்றில் கலந்து, அடுத்தவர்களுக்குப் பரவுகிறது. நோயாளி பயன்படுத்திய பொருள்களை மற்றவர்கள் புழங்கும்போதும் பரவும். நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்களுக்கு இந்த பாக்டீரியா தொற்று எளிதில் பரவலாம். பெரும்பாலும் 16 வயதுக்குட்பட்டவர்களையும் வயதானவர்களையும் பாதிக்கும்.
அறிகுறிகள் என்ன?
சளி, காய்ச்சல், தொடர் இருமல், தொண்டை வலி, கழுத்துப்பகுதி வீக்கம், நெறி கட்டுதல் ஆகியவை இந்த நோயின் முக்கியமான அறிகுறிகள். சிலருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். சளியில் ரத்தம் வெளியேறும்.
சளி
விளைவுகள் எப்படியிருக்கும்?
நோய் பாதித்தவரின் மூக்கு, தொண்டை, குரல்வளைப் பகுதிகளில் இந்தக் கிருமிகள் உயிர் வாழும். பாக்டீரியா தொற்று ஏற்பட்ட சில நாள்களில் தொண்டையில் சவ்வு வளரத் தொடங்கும். சவ்வு வளர வளர சுவாசத்தையும் உணவு விழுங்குவதையும் தடுக்கும் வகையில் தொண்டையை அடைக்கும். அதோடு இதில் உள்ள கிருமிகள் ஒருவித நச்சுப்பொருளை உற்பத்திசெய்து ரத்தத்தில் கலந்து இதயம், நுரையீரல், மூளை, சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளின் செயல்பாட்டைப் பாதித்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும். தொண்டைச் சவ்விலிருந்து திரவத்தை எடுத்து நுண்ணோக்கியில் பார்த்து பாக்டீரியா பாதிப்பை உறுதிசெய்ய முடியும். நோய் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, நோயாளியைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவேண்டியது அவசியம். நோய் முற்றிய நிலையில் உயிரிழப்பு நிகழலாம்.
சிகிச்சை உண்டா?
ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறியப்பட்டால் பெனிசிலின் (Penicillin), எரித்ரோமைசின் (Erythromycin) உள்ளிட்ட ஆன்டிபயாடிக் மருந்துகள், ‘ஆன்டி டிப்தீரியா சீரம்’ (Anti Diphtheria Serum) ஆகிய மருந்துகளின் மூலம் குணப்படுத்தமுடியும்.
நுண்ணோக்கி
வராமல் தடுப்பது எப்படி?
டிப்தீரியா வராமல் தடுக்க, உரிய தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளவேண்டும். குழந்தைக்கு ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதங்களில் ஹெபடைட்டிஸ் பி, டிப்தீரியா, கக்குவான் இருமல், ரண ஜன்னி, மூளைக்காய்ச்சல் (Haemophilus influenzae ‘b’) பாக்டீரியா ஆகிய ஐந்து நோய்களைத் தடுக்கும் ‘பென்டாவேலன்ட்’ (Pentavalent) தடுப்பூசி போடவேண்டும். குழந்தை பிறந்த 16, 24 மாதங்களில் டிப்தீரியா, ரண ஜன்னி, கக்குவான் இருமலுக்கான டி.டி.பி (DTwP) முத்தடுப்பு தடுப்பூசியைப் போடவேண்டும். அதன்பிறகு 5 மற்றும் 10 வயதில் ரண ஜன்னி, டிப்தீரியா (Tetanus Ditheria – TD) தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். குழந்தை பிறந்ததில் இருந்து தடுப்பூசி அட்டவணையில் உள்ள அனைத்து தடுப்பூசிகளையும் கட்டாயம் போட்டுக்கொள்ளவேண்டும். அதேபோல கர்ப்பிணிகளும் கர்ப்பக் காலத்தில் போடவேண்டிய தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும்” என்கிற ரெஸ்க் சற்குணம், நோய் பரவியதற்கான முக்கியக் காரணமாக ஒன்றைக் குறிப்பிடுகிறார், “பல ஆண்டுகளாக நோய் பாதிப்பு இல்லை என்ற காரணத்தினால் டிப்தீரியா மருந்துகளை பயன்படுத்தாமல் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மருந்து காலாவதியாகி இருந்திருக்கலாம். அதனால் அரசு போதிய நிதி ஒதுக்கி புதிய ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொள்முதல் செய்து இருப்பு வைக்க வேண்டும். அப்போதுதான் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்” என்றார் ரெக்ஸ் சற்குணம்.
டிப்தீரியா நோய் பாதிப்பைத் தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்து அறிந்துகொள்ள பொதுச்சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமியிடம் பேசினோம்.
“காலாவதியான டிப்தீரியா மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. சாதாரண பொருள்களுக்கே காலாவதி தேதியைப் பின்பற்றும்போது, உயிர் காக்கும் மருத்துவத் துறையில் எப்படிப் பின்பற்றாமல் இருக்க முடியும்?
தடுப்பூசி
தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்ப்பதாலும், நோய் பாதிப்புள்ள பகுதிகளுக்குச் செல்வதாலும்தான் தற்போது நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி பற்றிய தவறான புரிதலால், குறிப்பிட்ட வயதைக் கடந்த குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் போடுவதைப் பல பெற்றோர்கள் தவிர்த்துவிடுகின்றனர். இதன் காரணமாகவே நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து தொண்டை அடைப்பான் போன்ற நோய்கள் தாக்குகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை, டிப்தீரியா நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. தமிழகத்தில் சென்னை, ஈரோடு மாவட்டங்களில் பாதிப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இந்த ஆண்டு பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், இந்நோய் அறிகுறியுடன் சிகிச்சைப்பெற்றுள்ளனர். சத்தியமங்கலம், தாளவாடியில் பத்து பள்ளி மாணவர்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோய் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி
மாநிலம் முழுவதும் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். இதற்காக 21 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பொதுமக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை. அரசு அறிவுறுத்தியபடி உரிய காலத்தில் அனைத்து தடுப்பூசிகளையும் குழந்தைகளுக்கு போட்டுக் கொண்டாலே போதுமானது” என்றார்.