நாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த பூச்சி என்பதையும், அதன் நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது. இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும், புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும், வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு என்றும், கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம். தேள் கடிக்கு, எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால், தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் எலுமிச்சைப் பழ சாற்றையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும். சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.
குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.
பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும். நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும். கண்ணாடி விரியன்: பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும். நல்ல பாம்பு: வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்ய வேண்டும்.
தேள்: கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும். வண்டு: கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.
சிலந்தி: ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும். வெறிநாய்: மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும். எலி: வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும்.
நாய்க்கடிக்கும் இது உகந்தது. பூனை: தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக. பூரான்: பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.