மூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை முதல் நிலை, நடு நிலை, உயர் நிலை என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.
பிராணாயாமத்தின் மூன்று நிலைகள்
மூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை முதல் நிலை, நடு நிலை, உயர் நிலை என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.
முதல் நிலை:
இது சாதாரணப் பிராணாயாமம்.
‘தாழ்ந்த வகை’ எனப்படும் இந்த முதல் விதத்தில், 12 முறை உள்ளே இழுத்து (பூரகம் செய்து), 48 முறை உள்ளே வைத்திருந்து (கும்பகம் செய்து), 24 முறை மூச்சை வெளியே (ரேசகம்) விடுவது. (ஒரு முறை என்பது, கண் மூடி கண் திறக்கும் கால அளவு. இதை ஒரு மாத்திரை என்றும் கணக்கிடலாம்.)
ஒரு மாதம் வரை திணறல், சிரமம் இல்லாதபடி செய்ய பழகியதும், நடுநிலைக்குப் போகலாம்.
நடு நிலை:
இதில், மூச்சை 16 முறை உள்ளிழுத்து 64 முறை நிறுத்தி, சீராக 32 முறை வெளியே விடலாம். உடம்பில் வியர்வை வழியும். அதைத் துண்டால் துடைத்துக்கொள்ளாமல் வெறும் கைகளாலேயே துடைப்பது நலம்.
இந்தவிதமான பிராணாயாமத்தை மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து பழகிட வேண்டும். இதன் பிறகே உயர்நிலை பிராணாயாமத்தை அடையவேண்டும்.
உயர் நிலை:
இதில் 24 முறை மூச்சை உள்ளே இழுக்கவும். உடனே, 96 முறை உள்ளே நிறுத்திக் கும்பகம் செய்யவும். கும்பகம் செய்தவுடன் 48 முறை வெளிவிடவும். இப்படி ஒழுங்காக உயர்த்தி, திணறல் இன்றியும், மூச்சை விரைவின்றி சீராகவும் இழுக்கவும் விடவும் பழகவேண்டும்.
காலை 4 மணிக்கு அதாவது சூரிய உதயத்துக்கு முன் எழுந்து விரும்பும் தெய்வத்தை வணங்கிவிட்டு, பிராணாயாமத்தை ஆசன நிலையில் பயிற்சி செய்யவேண்டும்.
காலை 11 மணி, மாலை 5 மணி, இரவு 11 மணி என வைத்துக்கொண்டு நான்கு முறை பயிற்சியில் ஈடுபடவேண்டும். ஒரு தடவையில் 80 என்று 320 பிராணாயாமங்கள் ஒரு நாளில் பயிற்சி செய்வதுதான் தீவிர பயிற்சி.
பலன்கள்: பயிற்சியில் நாம் பிரணவ மந்திரத்தை ஜெபிக்குபோது உடலில் வெப்பம் உண்டாகிறது. இது அழுக்குகளைப் போக்கும். புது நிலையில் நாடிகள் தூண்டப்படுகின்றன. சிலருக்கு, உடலின் பல பாகங்களில் வலிகூட ஏற்படலாம். இருந்தாலும் பயிற்சியை முறைப்படி விடாமல் செய்து வரவேண்டும். உடல் வெப்பத்துக்கு ஏற்ப, பால், வெண்ணெய் ஆகியவை பயன்படுத்தவேண்டும். எண்ணெய்க் குளியல் அவசியம் தேவை.