25.8 C
Chennai
Sunday, Nov 24, 2024
thoppu karanam
யோக பயிற்சிகள்ஆரோக்கியம்

முன்னோர் நமக்கு விட்டுச்சென்ற தோப்புக்கரணம்!…

கோவிலுக்குப்போகும் பக்தர்கள் எல்லாம் திருக்கோவிலில், முதலில் உள்ள விநாயகர் சன்னதிமுன் தோப்புக்கரணம் போட்டுத்தலையில் குட்டிக்கொள்வர், அதன்பின்னே, மற்ற தெய்வச்சந்நதிகளுக்குச் செல்வர், பள்ளிகளில், வீட்டுப்பாடம் எழுதிவராத மாணவர்களை, ஆசிரியர்கள், தோப்புக்கரணம் செய்யச்சொல்வர்.

பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர் சிலரும், கோவிலில் இறைவன் முன் செய்கின்றனர், அவர்களின் பிள்ளைகளும் பள்ளியில் செய்கின்றனர், ஏன்? பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதவில்லை என்றால் ஆசிரியர் தோப்புக்கரணம் போடச்சொல்கிறார்.

பெற்றோர் ஏன் கோவிலில் தோப்புக்கரணம் போடுகின்றனர்?, ஒருவேளை, அவர்கள் எல்லாம் வாழ்க்கைப்பாடத்தை ஒழுங்காகச் செய்யாததனால், கோவிலில் தோப்புக்கரணம் போட, சாமி சொல்லியிருப்பாரோ!?

thoppu karanam

அப்படியில்லையாம், கோவில்களில் தோப்புக்கரணம் போடச்சொன்னது, நம் முன்னோர்களாம்!.

ஆம்! அவர்கள் வழிவழியாக, இதுபோன்ற நிறைய விசயங்களை, நமக்கு வாழ்க்கை நியதிகளாக வகுத்துச்சென்றிருக்கின்றனர்.

கோவில்களில் போடப்படும் தோப்புக்கரணம் என்பது நம் முன்னோரின் உடல் அறிவியல். ஆமாம், இன்னும் நம்முடைய சிற்றறிவுக்கு எட்டாத எத்தனையோ விசயங்களை, கோவில்களில் நாம் செய்யும் நடைமுறைகளாக மாற்றி வைத்திருக்கின்றனர், நம் மூதாதையர்.

தோப்புக்கரணம், என்ற ஒற்றைப்பயிற்சியே, அனைத்துவகை உடற்பயிற்சிகளுக்கும், முன்னோடியாக விளங்குகிறது.மேலும், உடற்பயிற்சி செய்யாவிடினும், அல்லது தெரியாவிட்டாலும், நீங்கள் தினமும், தோப்புக்கரணம் போட்டுவந்தால் போதும்.

பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடங்கள் ஒழுங்காகப் புரிந்துகொள்ளாத மாணவர்களை எப்படி தோப்புக்கரணம் போடச்சொல்கிறார்கள் என்று தெரியுமா?

இடது கையை மடக்கி, இடது கை பெருவிரலால் வலது காது மடலின் நுனியைப் பிடித்துகொண்டு, வலது கையை மடக்கி, வலது கை பெருவிரலால், இடது காது மடலின் நுனியைப் பிடித்துக்கொண்டு, இரு கால்களையும் மடக்கி, முதுகை வளைக்காமல் நேராக, உட்காரும் நிலையில், இந்த தோப்புக்கரணம் போட வேண்டும், எத்தனை முறை?

அது ஆசிரியரின் விருப்பத்தைப் பொறுத்தது, ஆனாலும், அவர் சொல்லும்வரை நிறுத்தக்கூடாது. பொதுவாக எல்லோரும், படிக்காத மாணவர்களுக்கு இது ஒரு தண்டனையே, என நினைப்பார்கள், அது தவறு, மாறாக, அந்த மாணவர்களே, பின்னர் வகுப்பில் முதல் மாணவர்களாக வரவேண்டும், அதற்காகவே, ஆசிரியர்கள் நல்ல எண்ணத்தில், அதை செய்யச்சொன்னார்கள்.

நன்மைகள் :

இந்தச் செய்முறைகளால், மாணவர்கள் உடலில் உண்டாகும் மாற்றங்கள் என்னென்னத் தெரியுமா? மந்தமான மனநிலையுள்ள மாணவர்களின் மூளை செயல்திறன், அவர்கள் காது நுனிகளில் தொடுதல் மூலமான பயிற்சிகளினால், மூளை நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல் சக்தி, ஞாபக சக்தி, அதிகரிக்கிறது.

நினைவு அதிகரிக்கும் :

தொடர்ச்சியாக செய்யச்செய்ய, மூளை, சுறுசுறுப்படைகிறது, விழிப்படைந்த நினைவு செல்களின் ஆற்றலால், மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கி, அவர்கள் பாடங்களில் சிறப்பான விகிதத்தில் தேர்ச்சி ஆகின்றனர்.

மேலும், செயல்திறன் மிக்க மூளையின் ஆற்றல் மூலம், மாணவர்களின் தேவையற்ற எண்ணங்கள் நீங்கி, அவர்களின் இலட்சியக்குறிக்கோளில் இலக்கை அடைய, தினசரி அவர்கள் செய்யும் தோப்புக்கரணம் உதவிசெய்கிறது. இதற்காகத்தான் ஆசிரியர்கள், மந்தமான மாணவர்களை, அறிவாற்றல்மிக்க மாணவர்களாக ஆக்கவே, தோப்புக்கரணம் செய்யச் சொன்னார்கள் என்று அறிய முடிகிறதல்லவா?

மேலும், ஆசிரியர்கள், ஆர்வமில்லாத மாணவர்களை, சமயத்தில் காதுகளைப் பிடித்துத் திருகுவார்கள். அதுவும், இதே பலன்களுக்காகத்தான் செய்தார்கள். இப்போது சொல்லுங்கள், தோப்புக்கரணம் ஒரு திறவுகோல்தானே, மனிதனின் மந்தநிலையை நீக்கி, அவனுக்கு ஊக்கமும் உற்சாகமும் தர, முன்னோர் விட்டுச்சென்ற வரம்.

புதிய ஆற்றல் :

தோப்புக்கரணம் பெரியவர்களுக்கு என்ன நன்மைகள் செய்யும் என்றால், தினமும் அதிகபட்சம் ஐந்து நிமிட நேரம் தோப்புக்கரணம் செய்துவந்தால், மூளைக்கு இரத்த ஓட்டம் சீராகச் சென்று, உடலின் ஆற்றல்நிலை தூண்டப்பட்டு, ஞாபகசக்தி அதிகரிக்கும், உடலில் புத்துணர்ச்சியும், செயல்களில் ஊக்கமும் உண்டாகும். மனதில் ஏற்படும் மன அழுத்தம், மனச்சோர்வு விலகும், மேலும், உடல் கை கால் தசைகள் எல்லாம் இறுகி, உடல் வலுவாக விளங்கி, ஆரோக்யமாக வாழலாம்.

What is Super brain yoga?

நினைவாற்றல் சக்தி எல்லோருக்கும் அவசியம், நினைவாற்றல் குறைந்த மாணவர்கள் படிப்பில் கோட்டை விடுகின்றனர், நடுத்தர வயதினரும், நினைவாற்றல் குறைபாடு காரணமாகவே, தினசரி வாழ்வில் பல இன்னல்களை, சந்திக்க நேரிடுகிறது. இதைப்போக்க என்ன செய்யவேண்டும்?

ஒன்றும் செய்ய வேண்டாம், இனி மறக்க மாட்டேன் பிள்ளையாரப்பா, என்று தினமும் தோப்புக்கரணம் போட்டுவர, சீக்கிரம் பிரச்னை தீரும், இல்லை, நான் கோவில்களில் எல்லாம் போய் தோப்புக்கரணம் போடமாட்டேன் என்று சொன்னால், சரி வீட்டில் மனைவியின் முன் ” இனி நீ சொன்னதையெல்லாம், ஆபிஸ் முடிந்து வரும் வழியில் வாங்கிவர மறக்கமாட்டேன் ” என்று தோப்புக்கரணம் போடுங்கள்.

முன்னோர் நமக்கு விட்டுச்சென்ற தோப்புக்கரணம்:

நம் மூதாதையர் கண்டுபிடித்த அரிய உடற்பயிற்சிக்கலை, இந்த தோப்புக்கரணம், ஆயினும் இன்று நிலை என்ன, நாம் பள்ளிகளில் அவற்றை மறந்துவிட்டோம், எந்த ஆசிரியரும் இதை செய்யச்சொல்வதில்லை, அவருக்குத் தெரிந்தால்தானே, அவர் சொல்லிக் கொடுப்பார். கோவில்களில் இப்போது நாம் தோப்புக்கரணம் இடுவோரைக் காண்பது மிக அரிதாகிவிட்டது, எல்லோரும் இப்போது வேகமான உலகின் விளம்பரத் தூதர்களாக மாறி, கோவிலில் விநாயகர் சன்னதி முன், கால்களை சற்றே வளைத்துக் கொண்டு, கைகளை மடக்கி, தலையின் முன்புறம் குட்டிக்கொண்டு நகர்ந்து விடுகின்றனர், பாஸ்ட் பார்வார்ட் தோப்புக்கரணம்!

நம் முன்னோர் சொன்னபோது, அலட்சியப்படுத்திய நாம், இன்று வெள்ளைக்காரன் “சூப்பர் பிரெயின் யோகா” என்று நம்மிடமே கொண்டுவந்து, இந்த யோகா, உங்கள் மூளையின் இரு பக்கங்களையும் செயல்பட வைக்கும், உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும், பெண்களின் பிரசவம் எளிதாகும், அல்சைமர், ஆட்டிசம் போன்ற நோய்களை எல்லாம் சரிசெய்யலாம், என்று விளம்பரம் செய்து, பொருளீட்டுகிறான்.

யோகாவை வளர்ப்போம் :

யார் வீட்டு சொத்தை, யாரிடம் வந்து விற்கிறான், பாருங்கள்! இதைவிடக்கொடுமை, நாமும் வரிசையில் நின்று, அவர்களிடம் நேரம் வாங்கிக்கொண்டு, பயிற்சியை செய்துவந்து பெருமை பேசுகிறோம்.

“சூப்பர் பிரெயின் யோகா”வில் எங்க பிள்ளையை சேர்த்தபிறகுதான், அவன் சூப்பரா படிச்சு, நல்ல மார்க் வாங்கிட்டு, இப்போ மெடிக்கல் படிக்கிறான், என்று. நம்முடைய வருங்காலத் தலைமுறைகள் நோய்நொடி இல்லாமல் நல்லா வாழணும்னு, நம்ம பெரியவங்க, நல்ல மனசோட செஞ்சதை, இந்த நவீனத்திருடர்கள், நம் பாட்டன் சொத்தை, நமக்கே கூச்சமில்லாமல் விற்கிறார்கள்.

நாமும் அந்நிய மோகத்தில், அதை உபசரித்து வரவேற்கிறோம், இன்றைய தலைமுறைகளின் வாழ்வும் சிந்தனையும், மிகமிக வேறுபட்ட பாதைகளில், நம்முடைய பாரம்பரிய பெருமையை மறந்து, செயற்கை உபதேசங்களின் பின் சென்று கொண்டிருக்கிறது.

பகுத்தறிந்து, ஒரு விஷயத்தை ஆராய்ந்து, அறியும் ஆற்றல் நிலை, இப்போது எங்கும் காணமுடியவில்லை. பாரம்பரியக் கலைகள் அறிந்து, வாழ்வில் அவற்றைக் கடைபிடித்து, நம்மவர்க்கும் பகிர்ந்து நலமுடன் வாழ்வோம்! எதிர்கால தலைமுறையைக் காப்போம்!!

Related posts

வியர்வை நாற்றம் போக்க வழிமுறைகள்

nathan

ஆரோக்கியமான நுரையீரல் வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

nathan

குடிக்கும் தண்ணீரைப் பற்றிய 6 மூடநம்பிக்கைகள்!!!

nathan

அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்.. மாரடைப்பு குறித்த விழிப்புணர்வு

nathan

நினைவாற்றலை மேம்படுத்த வேண்டும் என்றால்!….

sangika

அத்தி பழம் உண்பதால் கிடைக்கும் பயன்கள் ஏராளம்.

nathan

தொப்பையை கரைத்து இளமையை மீட்க உதவும் யோகா பயிற்சி

nathan

இது உண்பதற்கு சுவையாக இருந்தாலும் அதிகமாக உட்கொள்ளும்போது உடலுக்கு தீங்கையே விளைவிக்கும்!..

sangika

குறட்டையினால் ஏற்படும் விளைவுகள்!…

sangika