24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
gold
அலங்காரம்ஃபேஷன்

பெண்கள் விரும்பும் தங்க ஆபரணங்கள் இவைதானாம்!

இதுவரை தங்கம் தோன்றிய விதம், பயன்படுத்தும் முறைகள், தங்கத்தின் மூலம் கிடைக்கிற பலன்கள், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அதன் பங்கு என அதன் பன்முகங்களையும் பார்த்தோம். அடுத்து நம் நாட்டில் தங்கம் அதிகளவில் வியாபாரம் ஆகிற கடைகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மத்திமக் கடைகளுக்கும் உரிய, அவர்களுக்கே உரித்தான கஷ்ட நஷ்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

தங்க நகை விற்பனை செய்கிற கடைகளை பொதுவாக 4 விதங்களில் பார்க்கலாம்.

gold

அதிக இருப்பு கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள்…

பாரம்பரியமாக, தலைமுறைகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள்…

புதிதாக இந்தத் துறையில் நுழைந்து வியாபாரம் செய்கிற நிறுவனங்கள்…

கோல்டு கன்ட்ரோல் சட்டத்தை எடுத்த பிறகு அடகுக் கடைகள் எல்லாம் புற்றீசல் போல நகைக் கடைகளாக மாறிய அமைப்புகள்… கார்ப்பரேட் நிறுவனங்கள், தாங்கள் இத்தொழிலில் போடும் முதலீடு பல மடங்கு பெருகவும், இந்தத் தொழிலில் நிலைத்து நிற்கவும் பல முறைகளையும் கையாள்வார்கள். வளர்ச்சிக்கென விளம்பரங்கள், மக்களுக்கு உற்சாகமூட்டும் அறிவிப்புகள், அதிக அளவிலான இருப்பு மற்றும் சாய்ஸ் என பலவற்றையும் அவை அள்ளித் தருவது உண்மைதான்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் செல்கிற எல்லா மக்களுமே அங்கே நகைகள் வாங்குவதில் திருப்தி அடைகிறார்களா? பெரும்பாலான மக்கள் அங்கே இருக்கும் இருப்பையும் சாய்ஸையும் பார்த்து மலைத்து வாங்கி விடுவது உண்மைதான். தீர ஆராய்ந்து பார்த்து தனக்கு எது தேவையோ அது கிடைக்காமல், மறுபடி தாங்கள் வழக்கமாக வாங்கும் கடைகளுக்கே சென்று வாங்குபவர்களும் உண்டு. ஓரளவு மக்களுக்குத் திருப்தி அளிக்கக் கூடிய இருப்பையும், பெர்சனல் டச் என சொல்லக்கூடிய வாடிக்கையாளர்களுடனான நேரடித் தொடர்பில் இருக்கும் முதலாளிகளை உடைய கடைகள் இருக்கின்றன.

ஆனாலும், அவை பல முறை கஷ்டப்பட்டு வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தியும், உடனடி ஸ்டாக்கும் உடனடி சாய்ஸும் கொடுக்க முடியாததால் சில தோல்விகளை சந்திப்பதும் உண்டு. புதிதாக இந்தத் துறைக்கு வருபவர்கள் ட்ரையல் அண்ட் எரர் அடிப்படையில், அதாவது, செய்து பார்ப்பது… அதில் எது வெற்றியடைகிறதோ, அதையே தொடர்வது என்ற கொள்கையின் படி இளைஞர்களும், புதிதாக இறங்குபவர்களும், தங்களுக்குத் தோன்றிய விதம்
நகைகளை வியாபாரத்துக்காக வைத்து வெற்றி, தோல்விகளை சமமாகப் பார்ப்பவர்களும் உண்டு.

அடகும் கடையும் சேர்ந்த சிறு அமைப்புகள், அடகு வைப்பவர் அங்கேயே வாங்கலாம்… தேவைப்படும் போது அங்கேயே அடகு வைக்கலாம் என எளிய மக்கள் பலனையும் வியப்பையும் சரிசமமாகப் பெறுகிற கடைகளும் உண்டு. பொதுவாக பெரிய நகை வியாபார நிறுவனங்களில் எல்லா எடைகளிலும் எல்லா அளவுகளிலும் ஆபரணங்கள் குவிக்கப்பட்டு இருக்கும். அபூர்வமான கலெக்‌ஷன் அல்லது மிக நேர்த்தியாக செய்யப்பட்ட நகைகள் என்பவை அவர்கள் எப்போதாவது அறிவிக்கும் போது மட்டுமே கிடைக்கும்.

மத்திமக் கடைகளில் ஒரு வாடிக்கையாளரைக்கூட விடக்கூடாது என்பதால் பார்த்துப் பார்த்து நல்ல நகை கலெக்‌ஷன்களை வைத்திருப்பவர்களும் உண்டு. வெறும் நவீன நகைகள் மட்டுமே வியாபாரம் ஆகும் என ஒரு கணக்கு போட்டு அப்படிப்பட்ட நகைகளை மட்டுமே வைத்திருக்கிற ஷோரூம்களும் உண்டு. சிறு நிறுவனமோ, பெரிய நிறுவனமோ அவர்களுக்கு நேரடியான செலவு, மறைமுகச் செலவு என இரண்டு உண்டு. நேரடியான செலவில் ஊழியர்களின் சம்பளம், மின்சாரக் கட்டணம், பராமரிப்புச் செலவுகள், ஸ்டேஷனரி செலவுகள், தொலைபேசிக் கட்டணம், விளம்பரக் கட்டணம் போன்றவை லாபத்துக்குள் அடங்க வேண்டும்.

வரி கட்டும் போது, சில வாடிக்கையாளர்கள் வரியை நீங்களே கட்டுங்கள் என்று சொன்னால் கடைக்காரர்களே ஏற்றுக் கொள்வார்கள். தங்கத்தின் விலை ஏறும் போது, அந்த ஏறும் லாபம் முழுவதும் கடைக்காரர்களுக்கே போகும் என்பது மக்களின் எண்ணம். பல வருடங்களுக்கு முன்பு வரை வருடத்துக்கு ஒரு முறையோ, 6 மாதங்களுக்கு ஒருமுறையோ அதிகரித்த தங்க விலை, சமீப காலமாக ஒரே நாளில் 6 முதல் 10 முறைகள் ஏறி, இறங்குகிற நிலையில் இருக்கிறது. காலையில் விற்றுவிட்டு கையில் கிடைக்கும் பணம், மாலையில் தங்கமாக மாற்றுவதற்குள் பெரிய லாப, நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

கடைசியில் இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் என்ன மிஞ்சுகிறது என்பதை அவர்கள் மட்டுமே அறிவார்கள். இது தவிர Book profit என ஒன்று உண்டு. ஒரு வருடத்துக்கு உண்டான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வது ஜூலை 31 என இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அந்த வருடக் கடைசியில் ஒரு கிராமுக்கு அரசு நிர்ணயித்தது போலவே ஸ்டாக் மதிப்பு போடுவார்கள். இது மூலமாக அவர்களுக்கு கணக்கில் பெரிய லாபம் இருப்பது போல மாயத்தோற்றம் ஏற்படும். அது உண்மையல்ல.

கடைசியில் வாங்கும்போதும் விற்கும் போதும் சந்திக்கிற லாப, நஷ்டமே உண்மையானது. ஆனால், அவர்கள் Book profitக்கு ஏற்பவே வரி கட்ட நேரிடும். இதெல்லாம் மறைமுகச் செலவுகளில் அடக்கம். இவற்றை எல்லாம் தாண்டி அவர்கள் மக்களுக்கு சிறந்த சேவை என்கிற நோக்கத்தில் நஷ்டத்தில் விற்போர் எவரும் இல்லை. அது சாத்தியமும் இல்லை. தரமான பொருட்களைத் தயாரித்து, மக்களுக்குத் தேவையான அளவு மட்டுமேயானவற்றைக் காண்பித்து சரியான எடையில் கொடுப்பது…

அதில் ஏதேனும் குறைபாடுகளோ, பழுதோ இருக்கும்பட்சத்தில் அவற்றை குறிப்பிட்ட காலக்கெடு வரை சரி செய்து கொடுக்கக்கூடிய மனப்பாங்கு… வாடிக்கையாளர்களுக்கு எக்காலத்திலும் அந்தப் பொருளால் சிறிய சங்கடம்கூட நேராமல் பார்த்துக் கொள்வது… அதன் மூலம் நல்ல பெயரை சம்பாதிப்பது… இவையே நல்ல சேவைக்கான அடையாளங்கள்.

மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பார்கள். அதாவது, உருவமோ, அளவோ சிறியதாக இருந்தாலும் அதனுடைய புகழும் வலிமையும் மிகப் பெரியது என்பதே இதன் அர்த்தம். இதற்கும் தங்கத்துக்கும் பொருத்தம் உண்டு. எப்படி?

சிறிய கடையோ, சிறிய தங்க நகை நிறுவனமோ வலிமை உள்ளதாகவும் உள்கட்டமைப்புகள் பொருந்தியதாகவும், மக்களுக்கு உடனுக்குடன் ஆர்டர் எடுத்து தயாரித்துக் கொடுக்கும் வசதிகள் கொண்டதாகவும் பழுது பார்க்கும் ஆள் பலமும் எல்லா வகையிலும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிற நிறுவனங்கள் எத்தனையோ உண்டு. கடல் போன்ற பெரிய நிறுவனங்களைப் பார்க்கும் போது அந்தக் காலத்திலிருந்து தொடர்ந்து வியாபாரம் செய்கிற சிறிய நிறுவனங்களைக் குறைத்து மதிப்பிடுவது கூடாது.

அதிக அளவிலான விளம்பரம், விஸ்தாரமான இடம், அதிக இருப்பு போன்றவற்றை மட்டுமே இன்றைய மக்கள் பார்க்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் நகைக் கடைகளை தேர்வும் செய்கிறார்கள். எல்லோரையும் அப்படி சொல்லிவிட முடியாது. இந்த மூன்றும் உண்மையிலேயே தேவை என்றாலும்கூட அதில் தனிப்பட்ட அக்கறை எந்தளவு இருக்கிறது என்பதையும் மக்கள் கவனிக்க வேண்டும். கடைக்காரரிடம் விலையைக் குறைத்துக் கேட்பது மக்களின் உரிமை. கொடுப்பதும் மறுப்பதும் கடைக்காரரின் உரிமை.

இருந்தாலும் சுயமாக நிறுவனம் நடத்துபவர், தானே முடிவெடுக்கும் உரிமையைப் பெற்றிருப்பதால் வாடிக்கையாளரின் மனம் கோணாமல், தனது லாபத்தின் பங்கு குறைந்தாலும் நஷ்டத்தை எட்டி விடாதபடி கணிசமான தொகையை தள்ளுபடியாகக் கொடுத்து தனது தொடர்ச்சியான வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துபவர்களும் உண்டு. தான் வாங்கும் பொருளின் மதிப்பு தெரியாமல் அதை அடிமட்ட விலைக்குக் கேட்கிற மக்களின் மனப்பாங்கு தவறானது.

ஒரு பொருளின் விலையானது அது தயாராகி வந்ததில் இருந்து, ஸ்டேட் வாட், மத்திய வருமான வரி, சேவை வரி போன்றவை எல்லாம் அடங்கியது. அதையெல்லாம் தவிர்த்து கிட்டத்தட்ட நஷ்டத்தில் விற்பது என்பது எந்த வியாபாரிக்கும் சாத்தியமில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். வியாபார உத்தியில் விளம்பரங்கள் வரும்போது லாபமே இல்லாமல் விற்பது எப்படி சாத்தியம் என மக்கள் யோசிக்க வேண்டும்.

முதல் முறை மக்களைக் கவர்வதற்காகவே அதனுடைய அடக்க விலைக்குக் கீழ் கொடுப்பதாகச் சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களை மக்கள் இனம் காண வேண்டும். நமது அன்றாட வாழ்க்கைக்கும் ஆரோக்கியத்துக்கும் அவசியமான காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட்களையே அத்தனை அக்கறையோடு பார்த்து வாங்கும் போது, பல வருடங்கள் இருக்கக்கூடிய, தலைமுறைகள் தாண்டி தொடரக்கூடிய தங்க நகைகளை வாங்கும்போது பலமுறை யோசிக்க வேண்டாமா? இவை நீடித்து உழைக்குமா? தரமானவைதானா? இப்படி யோசித்தே வாங்க வேண்டும்.

பொதுவாக ஒரு வாடிக்கையாளர், 2 சவரனில் ஏதேனும் ஒரு நகை வாங்க வேண்டும் என மனதுக்குள் கணக்கு போட்டு ஒரு பெரிய கார்ப்பரேட் நகைக் கடைக்குச் செல்வார். அப்போது ஏராளமான சாய்ஸும், இருப்பும் இருந்தாலும் மனதுக்குப் பிடித்த டிசைனில் கிடைக்கவில்லை என்றால் அவர் அதை விரும்புவதில்லை. அனுபவம் மிக்க நகை வியாபாரியிடம் அவர்கள் செல்லும் போது இரண்டரை சவரனில் உள்ள செயினின் நீளத்தை மட்டும் கொஞ்சம் குறைத்து 2 பவுனுக்கு உடனடியாக கொடுத்து வாடிக்கையாளரைத் தக்க வைத்துக் கொள்வார்கள்.

எப்படிப்பட்ட நகையைத் தேர்வு செய்ய வேண்டும், எவ்வளவு பட்ஜெட், எவ்வளவு தூரம் அது அதிகரிக்கலாம், எங்கு வாங்கலாம் (அதற்கு 3 சாய்ஸ் வைத்திருப்பார்கள். அதற்கு மேல் யோசித்தால் அதிகக் குழப்பம்தான் மிஞ்சும்.) என இன்றைக்கு மக்கள் முதலிலேயே நகை வாங்குவது பற்றித் திட்டமிடத் தொடங்கிவிட்டார்கள். குடும்ப மருத்துவர், குடும்ப வக்கீல் போல, குடும்பத்துக்கான பிரத்யேக நகை வியாபாரிகள் இருக்கிறார்கள். அந்தக் குடும்பத்தினர் பெரும்பாலும் அந்த நகை விற்பனையாளர்களிடம்தான் வாங்க விருப்பப்படுவார்கள்.

கார்ப்பரேட் நகைக் கடை, மத்திம நகைக் கடை, பரம்பரைக் கடைகள், சிறு சிறு கடைகள் என்று ஏதேதோ சொல்கிறார்கள்… எதில்தான் வாங்குவது? இது எதுவும் மக்களைக் குழப்புவதற்காக அல்ல. மக்களைத் தெளிவுபடுத்த மட்டுமே. பொதுவாக இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக உலகளாவிய வியாபாரமாக கருதப்படுவது நகைத் தொழில். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இத்தொழில், எக்காரணம் கொண்டும், எதனாலும் நசிந்து விடக்கூடாது. ஏனென்றால், இந்தத் தொழில் யாருக்கும் எந்தத் தீங்கையும் செய்வதில்லை.

Related posts

ஹாட் குயினாக போஸ் கொடுக்க மினி ஸ்கர்ட்டு…..

sangika

எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலைக்கு இதை செய்யாதீர்கள்…

sangika

ஒப்பனை தூரிகை வழிகாட்டி

nathan

காலணிகள் வாங்கும் போது கட்டாயம் இவற்றை கவனியுங்கள்

sangika

புடவையில் தனித்தன்மையே இன்றைய பெண்களின் தேர்வு

nathan

அழகு குறிப்புகள்:முதன்முறையா மேக்கப்!

nathan

மோதிரங்கள் அணிவதில் சீரியஸான விஷயம் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?…

sangika

மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் உங்களுக்கு சிக்கல் உள்ளதா?

sangika

ஃபேஷன் டிசைனிங் துறையில் எதிர்காலம் இருக்கிறதா?

nathan