அழகு குறிப்புகள்

காது கேளாமைக்குக் காரணம் என்ன?

ear3

`செவிக்கு உணவு இல்லாதபோதே வயிற்றுக்கு ஈய வேண்டும்’ என்கிறார் வள்ளுவர். கேள்விச் செல்வம்தான் ஒரு மனிதனின் ஆகப் பெரிய செல்வம் என்பது நம் முன்னோர்நமக்குக் காட்டிய வழி. நம் உடலில் பல உறுப்புகள் உண்டு.

அவற்றில் காதுகள் மிக முக்கியமானவை. காதுகளில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவது எப்படி… காதுகளின் ஆரோக்கியம் காப்பது எப்படி? விரிவாக விளக்குகிறார் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் சொ.வெங்கட கார்த்திகேயன்.

ear3

“வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று காதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். காது மடல், துவாரக்குழாய் சேர்ந்த இடம், வெளிக்காது. நடுக்காது என்பது காது திரையின் உள்ளேயிருக்கும் வெற்றிடத்தைக் குறிக்கும்.

அதில் மூன்று சிறிய எலும்புகள் இருக்கும். அவை ஒன்றோடொன்று தொடர்பில் இருக்கும். உள்காதில் நத்தை வடிவில் `காக்லியா’ (Cochlea) என்ற உறுப்பு இருக்கும்.

அதில் சிறு சிறு நரம்புகள் இருக்கும். அந்தச் சிறிய நரம்புகள் இணைந்து, பெரிய நரம்பாகி, மூளையைச் சென்றடையும்.

ஒலியைக் காது மடல் உள்வாங்கி, துவாரத்தின் வழியாக உள்ளே அனுப்பி காதின் திரையிலுள்ள எலும்புகளில் அதிர்வை ஏற்படுத்தும்.

அந்த அதிர்வு உள்காதுக்குள் சென்று, அங்குள்ள திரவத்தில் அதிர்வலைகளை உருவாக்கும். அந்த அதிர்வுகள் அங்குள்ள நரம்புகளில் பிரதிபலிக்கும்.

இதையடுத்து அங்கு சிறிதாக ஒரு மின்னோட்டம் ஏற்பட்டு, ஒலியாக மாற்றமடைந்து மூளையைச் சென்றடையும்.

குழந்தை பிறந்தவுடன், அதற்கு நன்றாகக் காது கேட்க வேண்டும். அதாவது, குழந்தையின் காதின் வழியாக ஒலி உள்ளே சென்று, மூளையிலுள்ள செவிப் பகுதியைத் தூண்ட வேண்டும். அப்படிச் செய்தால்தான், காது கேட்கும் திறன் ஏற்படும்.

காது வழியாக உள்ளே செல்லும் ஒலி, மூளையிலுள்ள செவிப்பகுதியைத் தூண்டிய பிறகே குழந்தைக்குப் பேச்சுத்திறன் வரும். ஏனென்றால், மூளையில் ஒலியை உள்வாங்கும் இடமும் பேச்சை வெளிப்படுத்தும் இடமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும்.

காதின் உள்ளே ஒலி செல்லவில்லையென்றால், குழந்தையால் பேச முடியாது. ஆக, ஒருவருக்குப் பேச்சும் மொழியும் வர முதல் காரணம் செவித்திறனே!

காது கேளாமை

காது கேளாமையில் பல வகைகள் உள்ளன. குறிப்பாக, கண்டக்டிவ் ஹியரிங் லாஸ்’ (Conductive Hearing Loss). வெளிக்காதில் உள்ள துவாரத்தில் அடைப்பு அல்லது நோய்த்தொற்று இருந்தாலோ, காது ஜவ்வில் ஓட்டை விழுந்திருந்தாலோ, காது திரையிலுள்ள சிறிய எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ, மெழுகு அடைத்துக்கொண்டிருந்தாலோ, சரும உறை கட்டியால் (Cholesteatoma) பாதிக்கப்பட்டாலோ அதைகண்டக்டிவ் ஹியரிங் ஸாஸ்’ என்கிறார்கள்.

அதாவது, ஒலியானது ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செல்லும்போது ஏற்படும் தடை என்று இதைச் சொல்லலாம்.

அடுத்தது, நரம்பு சம்பந்தப்பட்ட காது கேளாமை. இது, உள்காதில் வரக்கூடிய பிரச்னை. சிறு சிறு நரம்புகள் இணைந்து, பெரிய நரம்பாகிக் காதுக்குள் செல்லும்போது அந்த நரம்புகளில் ஏற்படும் பிரச்னையை `நரம்பு தொடர்பான காதுகேளாமை’ (Sensorineural Hearing Loss) என்கிறோம்.

இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், கண்டக்டிவ் ஹியரிங் லாஸை நாம் குணப்படுத்த முடியும்.

காது ஜவ்வில் ஓட்டை இருக்கிறது என்றால், அதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். சிறு சிறு எலும்புகள், சரும உறை கட்டியால் பாதிக்கப்பட்டிருந்தால், அவற்றை அகற்றிவிட்டு, செயற்கை எலும்புகள் பொருத்தி குணப்படுத்தலாம்.

காதில் மெழுகு இருந்தால் அதை அகற்றி, சரிசெய்யலாம்.

நரம்பு சம்பந்தப்பட்ட காது கேளாமை ஏற்பட்டால், பெரும்பாலான நேரங்களில் நிரந்தரமான காது கேளாமை உண்டாக வாய்ப்பிருக்கிறது. இது குழந்தைகள், பெரியவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

இது திடீரென்றோ, கொஞ்சம் கொஞ்சமாகவோ எப்படி வேண்டுமானாலும் ஏற்படும். சடன் ஹியரிங் லாஸ்’ (Sudden Hearing Loss) எனப்படும் திடீர் காது கேளாமையை ஒருவிதமானஇன்னர் இயர் ஸ்ட்ரோக்’ (Inner Ear Stroke) என்றும் குறிப்பிடலாம்.

திடீர் காது கேளாமைப் பிரச்னைக்கு உடனடியாக மருத்துவரை அணுகி, சிகிச்சை பெற்றால் செவித்திறனை திரும்பப் பெற வாய்ப்பிருக்கிறது.

காது கேளாமைக்குக் காரணம் என்ன?

மரபணுக் குறைபாடு, சுற்றுச்சூழல் மாசு இரண்டுமே காது கேளாமைக்குக் காரணங்கள் என்று சொல்லலாம். மரபணுக் கோளாறால் சில குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே காது கேளாமை பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அவற்றை மரபணுப் பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். சிலருக்கு மரபணுப் பிரச்னைகள் இருந்தாலும், அவை வெளிப்படாமல் இருக்கும்.

ஆனால், வேறொரு நோய்க்கு மருந்து உட்கொள்ளும்போதோ அல்லது சுற்றுச்சூழல் ஒலி மாசு (Noise Pollution) காரணமாகவோ, அதிகச் சத்தத்தால் ஏற்படும் காது நரம்பு பாதிப்பாலோ, மரபணுக் குறைபாட்டாலோ சம்பந்தப்பட்டவருக்கு நிரந்தரமான காது கேளாமை ஏற்படலாம்.

தொற்றுநோய்கள்

சளி மற்றும் சைனஸ் பிரச்னைகளால் குழந்தைகளுக்கு காதில் வைரஸ் தொற்று உருவாகலாம். மூக்கு மற்றும் சைனஸ் பகுதியில் ஏற்படும் தொற்று, காதையும் மூக்கையும் இணைக்கும் யுஸ்டேஷன்’ (Eustachin) குழாயின் வழியாகச் சென்று, நடுக்காதில் தொற்றுநோய்களை உருவாக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு காதுவலி, சீழ் வடிதல் போன்றவை ஏற்படும். இது பாக்டீரியா தொற்றுகளால் ஏற்படலாம்.

பெரியவர்களுக்கும் இது ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வெளிக்காதில் பூஞ்சைக் காளான் தொற்று காரணமாகஃபங்கல் இன்பெக்‌ஷன்’ (Fungal Infection) ஏற்படலாம்.

அசுத்தமான நீர் காதின் உள்ளே போவதும், பட்ஸ்வைத்து காதைச் சுத்தம் செய்வதுமே இதற்கான காரணங்கள்.

சர்க்கரை நோயாளிகளுக்குக் காதில் தொற்றுகள் ஏற்படும். சர்க்கரைநோய் பாதிக்காதவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் இடையே தொற்றுநோயில் வேறுபாடுகள் உண்டு.

ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்குத் தொற்று ஏற்பட்டால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதுக்கும் மூளைக்கும் இடையேயுள்ள எலும்பில் தொற்று (Skull Base Osteomyelitis) ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

எனவே, இவர்கள் மருத்துவரை உடனே அணுகி, சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

சீழ் வடிதல் ஏன்?

சீழ் வடிதல் என்பது வெளிக்காது மற்றும் நடுக்காது பாதிக்கப்படுவதால் வரலாம். நடுக்காது சீழ் வடிதலில் இரண்டு வகைகள் உள்ளன. சேஃப்’ (Safe),அன்சேஃப்’ (Unsafe).

சேஃப் என்பதில் காதைச் சுத்தம் செய்வதாலோ, காது திரையில் ஓட்டை விழுவதாலோ, நடுக்காதில் தொற்று ஏற்படுவதாலோ, அடிபடுவதாலோ (பளாரென காதில் அறைவதால்கூட) காது திரையில் ஓட்டை ஏற்படலாம்.

சரும உறை கட்டியால், காதின் சுவர் எலும்புகள் மற்றும் மூன்று சிறிய எலும்புகள் பாதிப்படையும்போது சீழ் வரலாம். இதனால் காதுக்கும் மூளைக்கும் நடுவே உள்ள எலும்பு பாதிக்கப்பட்டு, மூளையில் பாதிப்பை ஏற்படுத்தினால் அதை `அன்சேஃப்’ என்கிறோம்.

இந்த நிலையில், நாற்றத்துடன் குறைந்த அளவில் சீழ் வெளியேறும். சில நேரங்களில் ரத்தம் கலந்தும் சீழ் வடிய வாய்ப்பிருக்கிறது. எனவே, மருத்துவரை அணுகி, உடனடியாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

காது பிரச்னைக்கான அறிகுறிகள், பரிசோதனைகள்

காதில் அடைப்பு ஏற்படும்போதுதான், ஒருவருக்குக் காதில் பிரச்னை இருப்பது தெரியவரும். காது அடைப்பு, காதுவலி, காதில் சீழ் வடிதல், காதில் ரீங்காரச் சத்தம் போன்றவை காதில் ஏற்படும் பிரச்னையின் அறிகுறிகள்.

செவித்திறன் குறைந்தவர்கள் சத்தமாகப் பேசுவார்கள். சத்தம் அதிகமாக இருக்கும் பொது இடங்களில், காது கேட்பதில் அவர்களுக்கு சிரமம் இருக்கும். என்ன பேசினீர்கள்?’ என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்பார்கள்.

இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகலாம். முதியோர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கியிருப்பார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று,ஆடியோமெட்ரி’ பரிசோதனை செய்ய வேண்டும்.

அதன் மூலம் எந்த வகையான பிரச்னை என்று கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சையளிக்க வேண்டும்.

சிலருக்குக் காதில் கொய்ய்ங்ங்ங்…’ என்ற ரீங்காரச் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்கும். இதைடைனிட்டஸ்’ (Tinnitus)என்று குறிப்பிடுவோம். இதில் அதிக பாதிப்படைபவர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகி தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள். இவர்கள் உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.

அதேபோல, தலைச்சுற்றலும்கூட காதுடன் சம்பந்தப்பட்டது என்பது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. தலைச்சுற்றல் தனியாகவோ அல்லது காது கேளாமை, காது அடைத்துக்கொள்வது, வாந்தி, ரீங்காரச் சத்தம் உள்ளிட்ட மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்தோ ஏற்படலாம். இதற்கென இருக்கும் சிறப்புப் பரிசோதனைகளைச் செய்து பிரச்னைகளை சரிசெய்து கொள்ளலாம்.

காக்லியர் இம்ப்ளான்ட்

காக்லியர் இம்ப்ளான்ட்’(Cochlear Implant) எனப்படும் அறுவை சிகிச்சை, நரம்பு தொடர்பான காது கேளாமைக்கு நிரந்தரத் தீர்வைத் தரும். இந்தக் கருவியை செவித்திறன் இழந்த ஒரு வயதுக்கும் அதிகமான குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பொருத்திக் கொள்ளலாம். ஒரு காதில் மட்டும் நரம்பு தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கும் இதைப் பொருத்தலாம். இதனால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு செவித்திறன், பேச்சுத்திறன் கிடைக்கும்.காக்லியர் இம்ப்ளான்ட்’ மூலம் காது கேட்காமல் தடுமாறும் முதியோருக்கு மறுவாழ்வு கிடைக்கும். இந்த அறுவை சிகிச்சை முறை 21-ம் நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு.

குழந்தைகளுக்கான காது பராமரிப்பு

  • குழந்தைகளின் காதிலுள்ள மெழுகை `அழுக்கு’ என்று தவறாக நினைத்துக்கொண்டு அகற்றக் கூடாது.
  • குழந்தைகளைக் குளிப்பாட்டியதும், காதைத் துணியால் சுத்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • காதிலுள்ள மெழுகு என்பது இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை. அது, காதில் சேரும் அழுக்கை வெளியேற்ற உதவக்கூடியது. எனவே, அதை அகற்றக் கூடாது.
  • சில குழந்தைகளின் காதில் நீர் கோத்துக்கொள்ளும். இதனால் காது கேட்காமல் போக வாய்ப்பிருக்கிறது. நன்றாகப் படிக்கும் குழந்தையால் பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகும். இதற்கு, மூக்கின் பின்புறமுள்ள `அடினாய்டு’ (Adenoid) சதை வளர்ச்சியே முக்கியக் காரணம். இதன் அறிகுறியாக, குழந்தைகள் தூங்கும்போது குறட்டைவிடுவார்கள் அல்லது வாயைத் திறந்தபடி தூங்குவார்கள். இதை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுக்க வேண்டும்.

பிறந்த குழந்தையை சத்தங்கள் பாதிக்குமா?

குழந்தைகளைச் சிறு சிறு சத்தங்கள் பாதிக்காது. அவர்களுக்கு சத்தம் கேட்பதுதான் நல்லது. ஆனால், பலத்த சத்தங்கள் குழந்தைகளை பாதிக்கும். சத்தமாகச் சண்டை போடுவது, அதிகச் சத்தத்தில் மியூசிக் சிஸ்டம் பயன்படுத்துவது, டி.வி பார்ப்பது குழந்தைகளின் காதுகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களின் காதுகளையும் பாதிக்கும். எனவே, மெல்லிய ஒலியில் பயன்படுத்துவதே நல்லது. அது குழந்தைகளின் காதுகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களின் காதுகளுக்கும் கெடுதல் தராது.

காதில் எண்ணெய்விடலாமா?

காதில் எண்ணெய்விடுவதைச் சிலர் வழக்கமாகக்கொண்டிருகிறார்கள். லேசான சூட்டிலோ அல்லது காய்ச்சி, ஆறவைத்தோ காதில் எண்ணெய்விடுவார்கள். இது தவறான வழிமுறை. இயல்பாகவே, காதுக்குள் மெழுகு போன்ற எண்ணெய் சுரக்கும். அது தானாக காதைச் சுத்தம் செய்துவிடும் என்பதால், காதில் எந்த எண்ணெயையும்விடாமல் இருப்பது நல்லது.

பட்ஸ் பயன்படுத்தலாமா?

காதை `பட்ஸ்’ வைத்துக் குடைவதால் எந்தப் பயனும் இல்லை. அதனால், காதுக்குப் பல பிரச்னைகள்தான் ஏற்படும். காதின் வெளிப்பகுதியிலிருக்கும் மெழுகு தானாக வெளியே வந்துவிடும். பட்ஸ் மூலம் குடைந்தால் மெழுகு உள்ளே சென்று, வெளியே வர முடியாதபடி அடைத்துக்கொள்ளும். இதனால், காதில் தொற்று ஏற்படும். அதனுள் தண்ணீரும் சேரும்போது அது வலியை உண்டாக்கும். எனவே, பட்ஸ் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

குளித்தவுடன் காதைச் சுத்தம் செய்யலாமா?

குளித்தவுடன் கண்டிப்பாக காதைச் சுத்தம் செய்யக் கூடாது. காதில் சீழ் வடியும் பிரச்னை உள்ளவர்கள், காது திரையில் ஓட்டை உள்ளவர்கள் காதில் நீர் புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள், பஞ்சில் தேங்காய் எண்ணெய் அல்லது `வாஸலின்’ தடவி, காதின் துவாரத்தில் வைத்துக்கொண்டு குளித்தால் காதுக்குள் தண்ணீர் புகாது. அதனால், காதில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும். காதைச் சுத்தம் செய்யவேண்டிய தேவையும் இருக்காது.

நீச்சல் வீரர்கள் காதுகளைப் பாதுகாக்கும் வழி!

நீச்சல் வீரர்கள் காதுகளைப் பாதுகாப்பது ஒருபுறம் இருந்தாலும், நீச்சல்குளத்தைப் பராமரிப்பவர்கள் அதிலுள்ள நீரைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நீச்சல் வீரர்கள் அவர்களுடைய காதுகளுக்கேற்றவாறு `கஸ்டம் மோல்டடு இயர் பிளக்ஸ்’
(Custom Molded Ear Plugs) இருக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தினால் காது தொடர்பான பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். காதிலிருந்து சீழ் வடிந்தால் நீச்சலைத் தவிர்ப்பது நல்லது.

உப்புநீரில் குளித்தால் காது பிரச்னை வருமா?

கடல் மற்றும் ஆறுகளில் குளிப்பதால் காதுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மேலும், காதுக்குள் உப்பு நீர் புகுவதால் பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியாது. ஆனால், நீர் அசுத்தமில்லாமல் இருக்க வேண்டும்.

காது அடைப்பைச் சரி செய்வது எப்படி?

காதில் எதனால் அடைப்பு ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவரை அணுகினால், அவரே காரணத்தைக் கண்டறிந்துவிடுவார். காதில் அழுக்கோ, மெழுகு அடைப்போ இருந்தால், மருத்துவர் அதைச் சரிசெய்துவிடுவார். சுய சிகிச்சை வேண்டாம். விமானத்தில் பயணம் செய்பவர்களுக்குக் காது அடைத்துக்கொள்ளும். சில நேரங்களில் காதில் வலியும் உண்டாகும். காதையும் மூக்கையும் இணைக்கும் யுஸ்டேஷன் குழாயில் பாதிப்பிருந்தால் வலி ஏற்படலாம்.

ஒருவருக்கு அதிகமாகச் சளி பிடித்திருந்தால் விமானப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கட்டாயம், பயணம் செய்யவேண்டியிருந்தால் மருத்துவரை ஆலோசித்து, விமானத்திலிருந்து இறங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக நோஸ் டிராப்ஸ் போட்டுக்கொள்ள வேண்டும். கண்டிப்பாக தூங்கக் கூடாது. வாயை லேசாக அங்குமிங்கும் அசைத்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, காது அடைக்காது.

பட்டாசு சத்தம் காதை பாதிக்குமா?

பண்டிகைகளின்போது, பெரிய அளவில் சத்தம் எழுப்பும் வெடிகளால் காதிலுள்ள சிறு நரம்புகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. அது, செவித்திறனை நிரந்தரமாகவும் பாதிக்கலாம்.

ஹெட்போன், புளூடூத் பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள்

நாம் ஒருவருக்கொருவர் நேரில் பேசிக்கொண்டது போய், செயற்கைக் கருவிகளின் துணையுடன்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக ஹெட்போன், புளூடூத் போன்றவற்றைப் பயன்படுத்துவதால், காதுகள் பாதிப்படையும். சில நேரங்களில் காது கேட்காமல்கூட போகலாம்; வலி உண்டாகும். தொடர்ந்து பல மணி நேரம் பயன்படுத்தினால், தலைபாரம், மனஅழுத்தம் ஏற்படலாம். எனவே, குறைந்த நேரம் மட்டுமே இவற்றைப் பயன்படுத்துவது நல்லது. அதேபோல, ஒலியைக் குறைவாக வைத்துக்கொண்டு பயன்படுத்த வேண்டும்.

ஹெட்போன் பயன்படுத்தும்போது மற்றவர்கள் பேசுவதும் நமக்குக் கேட்க வேண்டும். அப்படியில்லையென்றால், அந்த ஒலி காதுக்கு கேடு விளைவிக்கும். அதேபோல, ஹெட்போன் பயன்படுத்தும்போது நீங்கள் பேசுவது சுற்றியிருக்கும் மற்றவர்களுக்கு இயல்பாக இருக்க வேண்டும். அதாவது, சத்தத்தைக் குறைவாக வைத்துக் கேட்க வேண்டும். அப்படியில்லாமல் கத்திப் பேசுகிறீர்கள் என்றால் அதுவும் ஆபத்தானதே.

ஒலி மாசு – காதை பாதிக்கும்!

  • கூச்சல் எங்கெல்லாம் அதிகமாக இருக்குமோ, அங்கு செல்வதைத் தவிர்க்கலாம்.
  • போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில், ஒலி மாசு அதிகமாக இருக்கும். எனவே, கூடுமானவரை அதில் சிக்கிக்கொள்ளாமல் நேரத்தைத் திட்டமிட்டு பீக் ஹவர்ஸில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

Related posts

கடலை மா முகம் பேசியல் செய்ததற்கு இணையாக ஜொலிக்கும்.

nathan

அடேங்கப்பா! அஜித்தின் மனைவி ஷாலினி தங்கையுடன் மாடர்ன் உடையில்…

nathan

முகத்தின் அழகை இயற்கையான முறையில் மெருகூட்டுவது எப்படி.!!

nathan

ஆரோக்கியமான நகங்களை பெற, நகங்களை மென்மையானதாக்க

nathan

Beauty tips .. அழகுக்கு அழகு சேர்க்க!!!! இந்த ஒரு மாத்திரை போதும்….

nathan

சளி, இருமல் உங்கள பாடாய் படுத்துதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பெண்களே! புகுந்த வீட்டில் அனைவரையும் உங்கள் கைகளுக்குள் வைத்திருக்க வேண்டுமா? இதோ சில வழிகள்!

sangika

இதை மட்டும் ட்ரை செய்து பாருங்க.! இயற்கையான முறையில் குதிகால் வெடிப்பை எப்படி நீக்குவது? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

nathan

மாதவிடாய் நிறுத்தத்தின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்!

nathan