உடல் பருமன் அதிகம் இருந்தால், 90 சதவீதம் சர்க்கரை கோளாறு, 70 சதவீதம் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், 50 சதவீதம் மாதவிடாய் தொடர்பான நீர்க்கட்டி,
குழந்தையின்மை பிரச்னைகள் வரும். பித்தப்பை பிரச்னை, துாக்கமின்மை, குறட்டை, சுவாசப் பிரச்னைகள் என்று, பல உடல் பிரச்னைகள் வருகின்றன. இதை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன், 13 வயது குழந்தையை, என்னிடம் அழைத்து வந்தனர். அவளின் உடல் எடை, 128 கிலோ. நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும், அது தான் உண்மை.
சக மாணவியர் கேலி, கிண்டல் செய்வது, உடல் பருமனைக் குறிக்கும் செல்லப் பெயர்களைச் சொல்லிக் கூப்பிட்டதால், பள்ளிக்கு போக முடியாது என்று சொல்லி விட்டாள்.
கடைசியில் என்னிடம் அழைத்து வந்தனர். முதலில், உடல் எடையைக் குறைக்க, சில பொதுவான மருத்துவ வழி முறைகளைச் செய்யச் சொன்னோம்.
ஆறு மாதங்கள் முயற்சி செய்தும், எந்தப் பலனும் இல்லை.
வேறு வழி இல்லாமல், அறுவை சிகிச்சை செய்து. இரைப்பையின் அளவைக் குறைத்தோம். அறுவை சிகிச்சைக்குப் பின், உடல் எடை, 70 கிலோ ஆகிவிட்டது.
உடல் பருமனுக்கு, 25 சதவீதம் மரபியல் காரணங்கள் உள்ளது. மீதி, 75 சதவீதம், குழந்தையிலிருந்தே தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம், உடற்பயிற்சியின்மை போன்ற, வெளிக் காரணிகள் தான்.
அதிக உடல் பருமன் இருந்தால், வாழ்க்கை முறை மாற்றம் மட்டும், எடையைக் குறைக்க உதவாது.
உடல் பருமன், உயிர் கொல்லியாக இருப்பதால், தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.