“பெண்கள் பண்டிகைகள், விழாக்கள், தங்கள் வாழ்க்கையின் முக்கிய நாட்கள் போன்ற எல்லாவற்றுக்கும் புதிய ஆடைகள் வாங்கி, அதை உடுத்திதான் கொண்டாட விரும்புகிறார்கள். திருமணம் என்றால் சொல்லவேண்டியதில்லை. அப்போது விதவிதமான ஆடைகளில் வித்தியாசமாக எல்லோரையும் கவர விரும்புகிறார்கள்.
அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் முதலில் தனது உடல் எந்த மாதிரியான அமைப்பை கொண்டது என்பதை கணிக்கவேண்டும். பொதுவாக பெண் களின் உடல் அமைப்பை ஆப்பிள் மாடல், பேரிக்காய் மாடல், செவ்வக மாடல், ஹவர் கிளாஸ் மாடல் என்று பிரிக்கிறோம். இடுப்புக்கு மேல் பகுதி பெரிதாகவும்- இடுப்புக்கு கீழ் பகுதி சிறுத்தும் காணப்படும் உடல்வாகை கொண்ட பெண்கள், ஆப்பிள் மாடல். இடுப்புக்கு மேல் பகுதி சிறுத்தும்- கீழ் பகுதி பருத்தும் காணப்படுகிறவர்கள் பேரிக்காய் உடல்வாகு பெண்கள். இந்தியாவில் இந்த இருவகை உடல்வாகு கொண்ட பெண்களே அதிகம் இருக்கிறார்கள். செவ்வக வடிவ பெண்கள், கிட்டத்தட்ட மேல் இருந்து கீழ் வரை ஒரே மாதிரியான உடல்வாகு கொண்டவர்கள். ஹவர்கிளாஸ் எனப்படும் உடுக்கை போன்ற உடல் அமைப்பை கொண்ட பெண்கள்தான், துல்லியமான கட்டுடலைக் கொண்டவர்கள்.
இந்த நான்கில் தனது உடல் அமைப்பு எத்தகையது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்துகொள்ளவேண்டும். அதை அடிப்படையாக வைத்துதான் அவர்கள் தங்களுக்கான உடைகளை தேர்ந்தெடுக்கவேண்டும். அடுத்து தங்கள் சரும நிறத்தை அவர்கள் கருத்தில்கொள்ள வேண்டும். நிறத்துக்கு ஏற்ற ‘பேப்ரிக்’கை தேர்ந்தெடுப்பது அவசியம். காட்டன், பட்டு போன்று ஏராளமான பேப்ரிக் உள்ளது. அவை ஒவ்வொன்றிலும் ஏராளமான உட்பிரிவுகளும் உள்ளன. ஆடை தேர்ந்தெடுக்கும்போது தங்கள் உயரத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும். பொருத்தமான உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்தால், அவர்களது உடல் அமைப்பில் அவர்கள் குறையாக கருதும் விஷயங்களை நிறைவாக்கி, அழகாக தோன்றலாம்.
“பேஷன் என்பது ‘பழைய ஒயின் புதிய பாட்டில்’ என்று சொல்வார்களே அது போன்றதுதான். பெயர் மாறும், அதன் தோற்றத்திலும் சிறிய மாற்றங்கள் இருக்கும். அடிப்படையை ஆராய்ந்தால் அது ஆதிகாலத்தில் இருந்தே சற்று மாறி மாறி வந்ததாகத்தான் இருக்கும். அந்த காலத்தில் நடிகைகள் பானுமதியும், சரோஜாதேவியும் சினிமாவுக்காக அணிந்த லெஹங்கா இப்போது கூடுதல் அழகுடன் வலம் வந்துகொண்டிருக்கிறது. அதன் சோளிக்கு இப்போது கிராப்டாப் என்று புதுப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. எல்லா வயதினரும், எல்லா சூழலுக்கும் அணிந்துகொள்ளும் விதத்தில் இது வடிவமைக்கப்படுகிறது.
மணப் பெண்கள் லெஹங்காவை அதிகம் விரும்புகிறார்கள். அவர்களுக்காக இதில் அதிக வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. கூடுதல் கைவேலைப்பாடுகள் செய்யப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டு, இணைப்புகள் சேர்க்கப்படும்போது, அதிக எடை இருப்பது போல் தோன்றினாலும், மூன்று கிலோவுக்கு மேல் ஆகாது. அதனால் இது கனமாக இருக்கும் என்று கருதவேண்டியதில்லை.
தற்போது பெண்கள் பெரும்பாலும் பேஸ்டல் கலர்ஸ் எனப்படும் இள நிறங்களைத்தான் தேர்வு செய்கிறார்கள். அது எல்லோரையும் கவர்ந்து, அமைதியான தோற்றத்தை தருகிறது.வேட்டி கவுன் இப்போது அதிக வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான அழகுக்காகவும், சவுகரியத்திற்காகவும் பெண்கள் இதனை தேர்ந்தெடுக் கிறார்கள். இது நீளமாக ஒரே கவுனாக இருக்கும். இடுப்புக்கு கீழ் பகுதியில் ஆண்கள் வேட்டி கட்டியது போன்ற மடிப்புகளுடன் காணப்படும். இது இந்தோ வெஸ்டர்ன் தோற்றத்தை தருகிறது.
துப்பட்டா போட்டுக்கொள்வது என்பது பெண்களை பொறுத்த வரையில் சற்று கடினமான அனுபவமாக இருக்கிறது. பயணத்தின் போதும், வேலை செய்துகொண்டிருக்கும்போதும் அவர்கள் துப்பட்டாவில் தனிக்கவனம் செலுத்தி அங்கும் இங்குமாக சரிசெய்துகொண்டிருக்க வேண்டியதிருக்கும். அந்த குறையை தீர்க்க இப்போது கேப் துப்பட்டாக்கள் வந்திருக்கின்றன. இதனை மேலாடையுடன் சேர்த்து அப்படியே தைத்துவிடுகிறார்கள். சேர்த்து அணிந்துகொள்ளும்போது தைத்திருப்பதுபோல் தெரியாது. நகர்ந்துபோகாமல் சவுகரியமான அழகுடன் இது காட்சிதரும்.
எத்தனை நவீன உடைகள் வந்தாலும், பாரம் பரியமிக்க புடவைகளுக்கு இருக்கும் மதிப்பு பெண்கள் மத்தியில் குறையவே இல்லை. அதிலும் புதுமைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
விலை உயர்ந்த புடவைகள்தான் கூடுதல் அழகுதரும் என்ற கருத்து இப்போது வலுவிழந்துவிட்டது. சராசரியான விலையிலே புடவை வாங்கி, அதில் தேவையான இணைப்புகளை ஏற்படுத்தி கூடுதல் அழகாக்கிக்கொள்ளலாம். புடவைகளில் பிராணிகளின் உருவங்களை பிரிண்ட் செய்துகொள்வது இப்போது புதிய பேஷனாக இருக்கிறது. பகல்பூர் சில்க் அதற்கு ஏற்றது. அதில் யானை, மான், வாத்து போன்றவைகளை பிரிண்ட் செய்து அழகுபடுத்தலாம். யானை உருவம் பொறித்த புடவைகள் நடுத்தர வயது பெண்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும்.