யோகாசனம் கற்றுக்கொள்பவர்களிடம் மனத்தெளிவு இருக்கும். சிந்திக்கும் ஆற்றல் மேம்படும். மனதை கட்டுப்படுத்தும் பக்குவம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரேனும் பிரச்சினை செய்தால் எதிர்த்து வாதாடாமல் பக்குவமாக அவர்களை அணுகும் சுபாவத்தை யோகாசனம் கற்றுக்கொடுக்கும். பிரச்சினையை எப்படி சுமுகமாக தீர்ப்பது என்ற சிந்தனையை மேலோங்கச் செய்யும். குடும்பத்தில் உள்ள அனைவரும் யோகாசனம் கற்றுக்கொண்டால் அவர்களுக்குள் எந்த சச்சரவும் எழாது.
‘‘நாம் சத்தான உணவுகளை சாப்பிட்டாலும் ஜீரணம் சரியாக நடந்தால்தான் அந்த சத்துக்கள் நமது உடலில் சேரும். செரிமானம் சீராக நடைபெறுவதற்கு மூச்சு பயிற்சி உதவும். நாடிசோதனம் எனும் மூச்சு பயிற்சியை செய்து வந்தால் நுரையீரலில் சேரும் மாசுகளும் நீங்கும். ரத்தமும் சுத்திகரிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். நடு விரலை நெற்றியில் வைத்துக் கொண்டு கட்டை விரலால் மூக்கின் ஒரு பகுதியை அழுத்திப் பிடித்துக் கொண்டு மூச்சை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். அதேபோல் மற்றொரு மூக்கின் பகுதியையும் விரலால் அழுத்தி பிடித்துக்கொண்டு மூச்சை இழுத்து சுவாசிக்க வேண்டும். எவ்வளவு வேகமாக மூச்சை உள்ளே இழுக்கிறோமோ அதிலிருந்து இரண்டு மடங்கு மெதுவாக மூச்சை வெளியேற்ற வேண்டும். தினமும் ஆறு ஏழுமுறை முறை இவ்வாறு செய்து வந்தால் ஜீரணம் சரியாக நடக்கும்.
தேவையற்ற கொழுப்புகள் வெளியேறாமல் உடலில் அப்படியே தங்கிவிடுவதால் உடல் குண்டாகும். உடல் குண்டானால் ஜீரண பிரச்சினையும் தோன்றும். மூச்சு பயிற்சி மேற்கொள்ளும்போது ஜீரணம் தடையின்றி நடந்து தேவையற்ற கழிவுகள் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டு விடும். பிறந்த குழந்தை சரியாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டுக்கொண்டிருக்கும். அதுதான் சரியான மூச்சுபயிற்சி முறை. நாம் வளர்ந்து ஆளானதும் சுவாசிக்கும் முறையில் தவறு செய்து விடுகிறோம். சுவாசம் சரியான முறையில் நடந்தாலே உடல் உபாதைகள் ஏற்படாது’’. இன்றைய தலைமுறையினர் கட்டாயம் யோகாசனம் கற்றுக்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சிகளை போல் யோகாசனத்திற்கு நேரமோ, செலவோ செய்ய வேண்டியதில்லை. ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதாக இருந்தால் அங்கு செல்வதற்கு தயாராகுவதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவேண்டியிருக்கும். திரும்பி வரு வதற்கும் அதேபோல் நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால் யோகாசனத்தை இருந்த இடத்தில் இருந்தே செய்துவிடலாம். அதன் மூலம் மன நலமும், உடல் நலமும், பொருளாதார நிலையும் மேம்படும். உறவுச்சிக்கல்களும் நீங்கும்.