கருமுட்டை மற்றும் விந்தணுவை பதப்படுத்தி வைத்துக் கொண்டு, எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறோமோ அப்போது சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் தொழில்நுட்பமே அது. இது குறித்து விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் …
சென்னை, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் கருமுட்டை மற்றும் விந்தணுவை பதப்படுத்தி வைக்கும் வங்கிகள் இருக்கின்றன. இந்தியாவில் திருமணத்தை தள்ளிப்போடும் கலாசாரம் இன்னும் பரவலாகவில்லை என்பதால் இப்போதைக்கு புற்று நோய்க்கு ஆளானவர்கள் மட்டுமே இம்முறையை பின்பற்றுகின்றனர்.
‘‘social freezing தற்போது உலக அளவில் பரவலாகிக் கொண்டிருக்கிறது. புற்றுநோய்க்கு ஆளானவர்களுக்கு ரேடியோ தெரபி செய்யப்படுவதற்கு முன்பு, கருமுட்டை மற்றும் விந்தணுவை பதப்படுத்தி வைக்கும்படி மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். இத்தொழில் நுட்பம் அவர்களுக்கான கொடை என்றே சொல்லலாம். தனது பணி சார்ந்து மும்முரமாக இயங்கும் பெண்கள் திருமணம் மற்றும் குழந்தை பெறுவதை தள்ளிப் போடுகின்றனர். 35 வயது வரைக்கும் பெண்ணின் கருமுட்டை வீரியத்துடன் இருக்கும்.
அதைத் தாண்டுகையில் அதன் வீரியம் குறைந்து கரு உருவாவதற்கான தன்மையை இழக்க நேரிடலாம். ஆகவே 35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள் தங்களது கருமுட்டையை பதப்படுத்தி வைக்கலாம். கருவாகவும் பதப்படுத்தி வைக்க முடியும். எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் அதனைப் பதப்படுத்திப் பாதுகாக்க முடியும். அமெரிக்காவில் சமீபத்தில் 23 ஆண்டுகள் பதப்பட்ட கருவைக் கொண்டு சோதனைக் குழாய் மூலம் குழந்தையை பிரசவித்திருக்கிறார்கள்” என்கிறார்.
இந்த தொழில்நுட்பத்தின் பின்னடைவுகள் என்று எதைச் சொல்லலாம்?
‘‘கருமுட்டையாகப் பதப்படுத்துவதை விட கருவாகப் பதப்படுத்துவதே சிறந்தது. பத்து கருமுட்டைகளை பதப்படுத்தி வைக்கிறோம் என்றால் நாளடைவில் அவற்றில் சிலவற்றின் தரம் பாதிப்புக்குள்ளாகும். கருவாக பதப்படுத்தும்போது அதில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை” என்றார்.
இந்தியாவில் இத்தொழில்நுட்பம் எந்தளவுக்குப் பரவலாக உள்ளது?
“சென்னை, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் கருமுட்டை மற்றும் விந்தணுவை பதப்படுத்தி வைக்கும் வங்கிகள் இருக்கின்றன. இந்தியாவில் திருமணத்தை தள்ளிப்போடும் கலாசாரம் இன்னும் பரவலாகவில்லை என்பதால் இப்போதைக்கு புற்று நோய்க்கு ஆளானவர்கள் மட்டுமே இம்முறையைப் பின்பற்றுகின்றனர். கருமுட்டை மற்றும் விந்தணுவை பதப்படுத்தி வைக்கலாம் என்கிற விழிப்புணர்வு நாளாக நாளாக பெருகிக் கொண்டு வருகிறது. பதப்படுத்தும் வங்கிகள் சென்னையைக் காட்டிலும் மும்பை மற்றும் டெல்லியில் அதிகம் என்றாலும் பொதுவாக குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கின்றன” என்கிறார்.
ஏழை மக்கள் கூட இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியுமா?
“அரசு மருத்துவமனைகளில் கருமுட்டையைப் பதப்படுத்தும் வங்கிகள் இல்லை. தனியார் நிறுவனங்கள் மூலம் மட்டுமே இது பதப்படுத்தப்படுகிறது. ஏழை மக்களால் கருமுட்டையை பதப்படுத்தி வைப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான். விந்தணுவை வேண்டுமானால் பதப்படுத்தி வைக்க முடியும். ஏனென்றால் விந்தணுவை பதப்படுத்த 2500-3000 ரூபாய் வரையில்தான் செலவாகும். அதே போல் விந்தணு பதப்படுத்தும் வங்கிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.
கரு முட்டையைப் பதப்படுத்த ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டரை லட்சம் ரூபாய் வரையிலும் செலவாகும். ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அதற்கு 15 -20 ஆயிரம் ரூபாய் வரையிலும் செலவாகும். மேலும் சோதனைக் குழாய் மூலம்தான் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான செலவோடு பார்க்கையில் ஏழை மக்களால் இது சாத்தியமில்லைதான்” என்கிறார். நவீன அறிவியல் தனது சாத்தியங்களின் எல்லைகளை விரித்துக் கொண்டே செல்கிறது. தேவைக்குள்ளானவர்கள் தேவையானவற்றை அதனிடமிருந்து பெற்று நல வாழ்வை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.