உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவு பயத்தினையே தருகின்றது. இதிலிருந்து மீண்டு வருங்காலத்தில் இவ்வாறு ஏற்படாதவாறு காத்துக் கொள்வதும் மிக மிக முக்கியம் ஆகின்றது.
ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் இருதயத்திற்கு கிடைப்பது தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகின்றது. இதற்கு முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுவது இருதயத்திற்கு சக்தி தரும் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புதான். இந்த அடைப்பில் கொழுப்பு, கால்ஷியம் மற்றும் சில பொருட்கள் கலந்து இருக்கலாம்.
பொதுவாக மாரடைப்பு என்றாலே இடது தோள் வலி, நெஞ்சை அழுத்தி பிடிக்கும் உணர்வு, திடீரென பலமின்மை, சில சமயம் நினைவின்மை, மூச்சு வாங்குதல், வியர்த்து கொட்டுதல், வெளிர்ந்த சருமம், வயிற்றுப் பிரட்டல், வாந்தி, வலி, கால், கைகளில் வீக்கம் என பல அறிகுறிகளை காட்டி விடும். இன்று மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக நன்கு குணம் காண முடிகின்றது.
இருப்பினும் அந்த பயம் பாதித்தவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் இருந்து கொண்டே இருக்கின்றது. முறையான மருந்தும், குறிப்பிட்ட காலந்தவறாத மருத்துவ செக்-அப்களும் இருந்தால் இயல்பான வாழ்க்கை என்பது நிச்சயம் சாத்தியமே.
* ஆனால் வருமுன் காப்பது மிக மிக நல்லது அல்லவா. ஆகவே உங்கள் கொலஸ்டிரால் அளவினை நன்கு கண்காணித்துக் கொள்ளுங்கள். நல்ல கொலஸ்டிரால் குறையவும் கூடாது. கெட்ட கொலஸ்டிரால் கூடவும் கூடாது.
* உங்கள் ரத்த அழுத்தத்தினை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள். கெட்டகொழுப்பு உயர் ரத்த அழுத்தத்தினையும் ஏற்படுத்தும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.
* கண்டிப்பாய் புகை பிடிப்பதனை நிறுத்துங்கள். இது உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும். ரத்த குழாய் அடைப்புகளை ஏற்படுத்தும்.
* ஊறுகாய், அப்பளம், உப்பு சேர்த்த சாதம் இவை வேண்டாமே. பொதுவில் உப்பின் அளவினைக் குறையுங்கள்.
* நிதானமாய் உடற்பயிற்சியினை ஆரம்பித்து நன்கு முடியும் வரை செய்யுங்கள்.
* மன அழுத்தம் இதயத்தினை வெகுவாய் பாதிக்கும்.