கருத்தரித்தலுக்கு தடையாக இருக்கும் கருப்பை நீர்க்கட்டிகள்
பெண்களின் கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகள் பற்றி அப்பல்லோ மருத்துவமனையின் பெண்மை பிணியியல் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்ததாவது:
பொதுவாக, பூப்பெய்திய பெண்களில் நான்கில் ஒருவருக்கு கருப்பை கட்டி பிரச்சினைகள் இருப்பது அறியப்பட்டுள்ளது. அவை புற்று நோய் அல்லாத சாதாரண கட்டிகளாக கருப்பை, அதன் உட்புற சுவர்கள் மற்றும் வெளிப்புற சுவர்களிலும் உருவாகின்றன. அதனால், மாதவிடாய் காலங்களில் அடிவயிறு வலி, வீக்கம் ஆகியவை ஏற்படுவதோடு கருத்தரித்தலுக்கும் தடையாக அமைகின்றன. மேலும், அவை உருவாகியுள்ள இடம் மற்றும் அளவு ஆகியவற்றை பொறுத்து பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படலாம்.
கருப்பை நீர்க்கட்டிகளை தக்க மருத்துவ பரிசோதனை மற்றும் ‘அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்’ மூலமாக கண்டறியலாம். அளவில் பெரியதாகவும், ரத்தப்போக்கை உண்டாக்குவதாகவும் உள்ள நீர்க்கட்டிகளுக்கு மட்டும் அறுவை சிகிச்சை தேவைப்படும். மருத்துவ சிகிச்சைகள் மூலம் அவற்றால் ஏற்படும் வலியை குறைக்க இயலுமே தவிர அவை மறையாது.
அதற்கான சிகிச்சை முறைகளில் அதிநவீன ’லேப்ராஸ்கோபிக்’ மற்றும் கணினி மூலம் செய்யப்படும் ‘ரோபோடிக் சர்ஜரி’ ஆகியவை இன்று முக்கியமாக இருக்கின்றன. அவற்றின் மூலம் சுலபமாகவும், துல்லியமாகவும் அறுவை சிகிச்சையை செய்து கொண்டு விரைவில் வீடு திரும்பி, வழக்கமான பணிகளில் ஈடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட முறைகள் மூலம் மாதவிடாய் பிரச்சினை உள்ளவர்கள் அவற்றை தக்க முறையில் கவனித்து சரி செய்து கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்.