சோயா சார்ந்த உணவுகள் மிகவும் பிரபலமானவை. சோயா பரவலாக மக்களால் பயன்படுத்தப்படுவதோடு, விலைக் குறைவில் கிடைக்கக்கூடியது மற்றும் குறைவான கலோரியுடன், அதிகளவு புரோட்டீன் கொண்டது. சோயா பீன்ஸ்களை பல வடிவில் சாப்பிடலாம். அதில் டோஃபு, சோயா பால், மிசோ, சோயா பவுடர், மீல் மேக்கர் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
சோயா வகையான உணவுகள் இறைச்சி உணவுகளுக்கு மிகச்சிறந்த மாற்று உணவும் கூட. யாருக்கு இறைச்சி சாப்பிட பிடிக்கவில்லையோ, அவர்கள் சோயா சார்ந்த உணவுகளை உட்கொண்டால், இறைச்சியில் இருந்து பெறக்கூடிய சத்துக்கள் அனைத்தையும், இவற்றில் இருந்து பெற முடியும். ஆனால் இந்த சோயா உணவுகள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்குமா அல்லது குறைக்குமா? என்ன அதிர்ச்சியாக உள்ளதா?
ஆம், சோயாவிற்கும் புற்றுநோய்க்கும் சம்பந்தம் இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தான் பலர் சோயா சார்ந்த உணவுகளை உட்கொள்ள அச்சம் கொள்கிறார்கள். உண்மையிலேயே சோயா பொருட்கள் புற்றுநோயை உண்டாக்குமா? இதுக் குறித்து விரிவாக இப்போது இக்கட்டுரையில் காண்போம். அதைப் படித்து தெரிந்து உங்களுக்கு சோயா பொருட்கள் மீது இருந்த குழப்பமான எண்ணத்தை தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.
ஐசோப்ளேவோன்கள் அதிகம்
சோயா உணவுகளில் ஐசோப்ளேவோன்கள் ஏராளமான அளவில் உள்ளது. இந்த ஐசோப்ளேவோன்களானது தாவரங்களில் காணப்படும் பலவீனமான ஈஸ்ட்ரோஜென் பொருளாகும். இந்த ஈஸ்ட்ரோஜென் மார்பக புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் பெருக்கம், வளர்ச்சி மற்றும் பரவலை ஊக்குவிக்கும். எனவே தான் ஐசோப்ளேவோன்கள் அதிகம் நிறைந்த சோயா உணவுகளை அதிகமாக சாப்பிட்டால், அது மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிறிய ஆய்வு
மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டர் மற்றும் வெயில் கார்னெல் மருத்துவக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட சிறிய ஆய்வில், நடுத்தர அளவில் சோயா பொருட்களை சாப்பிடும் பெண்களின் உடலில் மரபணுக்கள் மாறி, அது புற்றுநோயின் வளர்ச்சியை உண்டாக்குவதாக கண்டுபிடித்துள்ளனர்.
140 பெண்களைக் கொண்ட ஆய்வு
முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 140 பெண்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு பெண்களுக்கும் சமீபத்தில் தான் மார்ப திசு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 2-3 வாரங்களில் மாசெக்டோமி அல்லது லம்பெக்டோமி சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்த 2-3 வாரங்களில் இவர்களைக் கொண்டு ஒரு சிறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 70 பெண்களுக்கு சோயா புரோட்டீனையும், மற்ற 70 பெண்களுக்கு சோயா புரோட்டீன் போல தோற்றமளிக்கும் போலி மருந்தும் கொடுக்கப்பட்டது.
சோயா புரோட்டீன் குழுவினர்
சோயா புரோட்டீனை உட்கொண்ட பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் 52 கிராம் சோயா புரோட்டீன் வழங்கப்பட்டது. அதாவது தினமும் 4 கப் சோயா பால் கொடுக்கப்பட்டு வந்தது. ஆய்வாளர்கள் இந்த அளவு கொடுப்பதற்கு காரணம், ஒரு நாளைக்கு இவ்வளவு கிராம் உட்கொள்வதே சிறப்பானது என்பதால் தான்.
சிகிச்சைக்குப் பின்…
2-3 வாரங்களுக்குப் பின், அந்த பெண்களுக்கு அறுவை சிகிச்சையின் மூலம், மார்பக புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள், சோயா புரோட்டீனை உட்கொள்வதற்கு முன் இருந்த மார்பக திசு ஆய்வையும், சோயா புரோட்டீன் எடுத்த 2-3 வாரங்களுக்குப் பின் அகற்றப்பட்ட மார்பக புற்றுநோய் கட்டிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
ஆய்வு முடிவு
இந்த ஆய்வின் முடிவில் சோயா புரோட்டீன் எடுத்த பெண்களின் உடலில் உள்ள மரபணுக்கள் செல்களின் வளர்ச்சியைத் தூண்டியிருப்பது தெரிய வந்தது. ஆனால் இந்த மரபணு மாற்றம் தான் புற்றுநோயை வளரச் செய்கிறதா என்பதற்கான சான்று போதுமானதாக இல்லாததால், கண்டுபிடிக்க முடியவில்லை. அதே சமயம் சோயா பொருட்கள் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறதா, இல்லையா என்பதும் தெரியவில்லை. மொத்தத்தில், இந்த ஆய்வில் ஒரு சரியான தீர்வு தெரியவில்லை.
சோயாவை தவிர்க்க வேண்டுமா?
என்ன தான் சோயா குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டாலும், ஆராய்ச்சியாளர்கள் சோயா பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் சோயாவை மிதமான அளவில் உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர். அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், எந்த ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருளும் தீங்கையே உண்டாக்கும். எனவே கவனமாக இருங்கள்.
ஜாக்குலின் ப்ரோம்பெர்க் கூற்று…
உங்களுக்கு ஆரம்ப கால மார்பக புற்றுநோய் இருந்தால், சோயா சார்ந்த உணவுகளை அதிகளவில் உட்கொள்ள வேண்டாம் என ஜாக்குலின் ப்ரோம்பெர்க் கூறுகிறார். ஏற்கனவே மார்பக புற்றுநோய் இருந்தால், சோயா பொருட்களை சாப்பிடலாம். ஆனால் ருசிக்காக மட்டுமே சாப்பிட வேண்டும்.
இறுதியில் சோயா உணவுகளை மிதமான அளவில் சாப்பிடுவது நல்லது. ஒரு நாளைக்கு 1/2 கப் சோயா பொருட்களை எடுக்கலாம். அதே சமயம் சரிவிகித டயட்டையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இருப்பினும் உங்களுக்கு மார்பக புற்றுநோய் இருந்து, சோயா உணவுகளை உட்கொள்வதாக இருந்தால், உங்கள் மருத்துவரிடம் கேட்டு, பின் அவரது அனுமதியுடன் பரிந்துரைக்கும் அளவில் சாப்பிடுங்கள்.
இப்போது சோயாவின் இதர பக்கவிளைவுகள் என்னவென்று காண்போம்.
பெண்களின் கருவளம் பாதிக்கப்படும்
பெண்கள் சோயா பொருட்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது அவர்களது கருவளத்தை பெரிதும் பாதித்து, பின் கருத்தரிப்பதில் பிரச்சனையை சந்திக்க வைக்கும். அதிலும் மரபணு மாற்றப்பட்ட சோயா புரதங்களைப் பயன்படுத்தும் பெண்களுக்கு, பிற்போக்கு மாதவிடாய் வளர்ச்சியை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதன் விளைவாக பெண்களுக்கு கருவுறாமைக்கான முதன்மையான காரணிகளில் ஒன்றான இடமகல் கருப்பை அகப்படலம் ஏற்படும்.
அதிகமான உதிரப்போக்கு
மற்றொரு ஆய்வில், மரபணு மாற்றப்பட்ட சோயா புரதங்களை அதிகம் சாப்பிடும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அசாதாரண அளவில் அல்லது அளவுக்கு அதிகமாக உதிரப்போக்கு ஏற்படும். இந்த நிலை மருத்துவ ரீதியாக ‘மெனோராஜியா’ என அழைக்கப்படுகிறது.
சிறுநீர்ப்பை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்
ஆய்வு ஒன்றில், சோயா புரோட்டீனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது சிறுநீர்ப்பை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் உங்களது பரம்பரையில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தால், அபாயமானது இன்னும் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலையில், சோயா பொருட்களில் இருந்து விலகி இருப்பதே சிறந்தது.
கணையத்திற்கு தீங்கை உண்டாக்கும்
சோயா புரோட்டீன் ட்ரிப்சினைத் தடுக்கும். ட்ரிப்சின் என்பது சிறு குடலில் புரோட்டீனை உடைத்தெறிய உதவும் ஒரு செரிமான நொதிப் பொருளாகும். கணையம் இந்த நொதியை ட்ரிப்சினோஜென் வடிவில் உற்பத்தி செய்கிறது. ஆய்வு ஒன்றில், சோயா புரோட்டீன் இந்த ட்ரிப்சின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி, கணையத்தின் செயல்பாட்டில் பெரும் ஆபத்தை உண்டாக்குவது தெரிய வந்தது.