26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
16 1510822122 5
கர்ப்பிணி பெண்களுக்கு

உங்களுக்கு தெரியுமா இதுவரை வெளிவராத டெலிவரி அக்கிரமங்கள் கர்ப்பிணிப் பெண்ணின் பகீர் வாக்குமூலம்!!!

இது பலரும் வெளியில் சொல்லத் தயங்குகிற விஷயம்… ஒரு பெண்ணுக்கு எங்கேயும் பாதுகாப்பில்லை என்பதற்கும். பெண்ணானவள் எப்போதும் பாலியல் பொம்மை தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணம். ஒரு பெண் தாய் என்ற பொறுப்பை அடைவதற்குள் மன ரீதியாக, உடல்ரீதியாக எத்தகைய மாற்றங்களை எல்லாம் சந்திக்கிறாள் என்பதை ஓரளவுக்காவது நமக்கு தெரிந்திருக்கும். உயிரை கையில் பிடித்துக் கொண்டு இன்னொரு உயிரை பிறக்கச் செய்யும் டெலிவரி ரூமில் என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா?

பெயரையும் அடையாளத்தையும் வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையோடு இரண்டு குழந்தைக்கு தாயான பெண்ணொருவர் நமக்கு அனுப்பியிருக்கும் மெயில் மனதை கனக்க வைக்கிறது. தொடர்ந்து அவர் அனுப்பிய மெயிலிலிருந்து…

பேருந்து : சாதரண மிடில் கிளாஸ் குடும்பம் தான்.கூட்டமாக இருக்கும் பஸ்ஸாக இருந்தாலும் பராவாயில்லை இரண்டு ரூபாயை மிச்சம் பிடிக்கலாமே என்று ஒரு மணி நேரம் காத்திருந்து வெள்ளை போர்டு பஸ்ஸில் ஏறி வரும் பெண் நான். பேருந்து…. கூட்டம் என்று சொன்னாலே இன்னொரு விஷயமும் கண்டிப்பாக இருக்குமே… ஆம், ஆண்களின் பாலியல் தொல்லை நெருப்புக் குழம்பில் நிற்பது போல உள்ளே தகித்துக் கொண்டிருக்கும். எங்களை கடந்து செல்வது போல பின்னால் தட்டுவதும், இடுப்பைக் கிள்ளுவதும் நடக்கும் போதெல்லாம். அங்கேயே அவனை பளார் என்று அறை விட்டு விடக்கூட தோன்றும். யாரிடம் சொல்ல? எப்படிச் சொல்ல? இதையெல்லாம் வெளியே சொன்னா நமக்குத் தான் அசிங்கம் என்று வளர்க்கபட்டதால் ‘கப்சிப்’

கூனிக் குறுகி நிற்கும் தருணம் : அப்படியே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெளியில் சொன்னாலும் நீ எப்டி போனியோ… நீ நடந்துகிட்ட விதம் தான் அவன அப்டி பண்ண தூண்டியிருக்கு என்று குற்றமும் நானே குற்றம் சாட்டப்பட்டவரும் நானே என்ற ரீதியில் தலை குனிந்து நிற்க வேண்டும். ஒரு கட்டத்தில் நாம் தவறு செய்தோமா? என்று கேட்டு குத்தி கொல்கிற அளவுக்கு காயப்படுத்திக் கொள்வோம்.

வாழ்க்கையே கேள்விக்குறி : இது தான் சரியான வழிமுறையா? எனக்கு இங்கே பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள் என்பதை யாரிடம் சொல்ல வேண்டும். நிச்சயமாக குடும்ப உறுப்பினர்கள், கணவன் என்று கை காட்டாதீர்கள்.பாதிக்கப்பட்ட எங்கள் மீது கரிசனம் கூட வேண்டாம். ஆனால் அவை கோபமாக உருவெடுத்து வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிடும் நிலைக்கு தள்ளிவிடும். அலுவலகங்களில், பொது இடத்தில் பாலியல் தொல்லை நடந்தால் புகார் அளிக்க அல்லது பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்ய என்று சில இடங்களும்… சில மனிதர்களும் இருக்கிறார்கள். ஆனால் வீட்டிற்குள் நடப்பவற்றை யாரிடம் சொல்வது ? எங்கே முறையிடுவது? குறிப்பாக மருத்துவமனைகளில்..

அனுபவம் : நாங்கள் வணங்கும் தெய்வங்களாகவே மருத்துவர்களை நினைத்து இனி இந்த உயிரேயே நீதானப்பா காப்பாற்ற வேண்டும். என்று சாஸ்டாங்கமாக விழுந்தால் அவர்கள் எங்களை எப்படிப் பார்கிறார்கள் தெரியுமா? தங்களின் பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொள்ளும் ஒரு ஆளாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது யாரோ சொல்லி, கேட்டு, படித்து, செவி வழி செய்தியாக என் காதில் நுழைந்த தகவல் அல்ல…. நேரடியாக நானே அனுபவித்த ஒன்று.

யாராவது நினைத்திருக்கிறீர்களா? : குழந்தைப்பேறு என்பது எவ்வளவு உன்னதமான ஓர் உணர்வு. தாய்மை அடையப்போகிறோம் என்ற மகிழ்வில் எங்களுக்கு ஒரு வாரிசு கிடைக்கப்போகிறது என்று குடும்பத்தினர் எல்லாம் அகமகிழ்ந்து கொண்டிருக்க… பிரசவ அறையின் உள்ளே நான் பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாவேன் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா? பிரசவ வேதனையில் குற்றுயிரும் குலையுயிருமாய் துடித்துக் கொண்டிருக்க… ‘கையை எடு’ என்று கத்தக் கூட திராணியற்று கிடக்கும் நான்… என் கையாலாகாத தனத்தைக் நினைத்து அழுவதைத் தவிர வேறு என்ன செய்திட முடியும்?

கர்ப்பம் : ஒரு வாரமாக தலைச்சுற்றல் அஜீரணம் போல இருந்துக் கொண்டேயிருக்கிறது. அதீத களைப்பு ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. இரண்டு நாட்கள் அலுவலகத்திற்கும் லீவ் சொல்லியாகிவிட்டது. நாளைக்கும் அலுவலகத்தில் லீவ் சொன்னால் அவ்வளவு தான் என்று நினைத்துக் கொண்டு கணவருடன் மருத்துவமனைக்குச் சென்றேன். சில மணி நேரங்கள் காத்திருப்புக்குப் பின் மருத்துவரை சந்தித்தோம். அனீமிக்காக இருப்பீர்கள் என்று சொல்லி சில மாத்திரைகளையும் டானிக்கையும் எழுதிக் கொடுத்தார். பிரசர் செக் செய்துவிட்டு ஸ்க்ரீன் போட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பெட்டில் படுத்துக் கொள்ள சொன்னார். நான் ஏறி படுத்துக் கொண்டேன். வயிற்றை அழுத்திப்பார்த்தார்.ப்ரீயட்ஸ் வந்த தேதி கேட்டு எதையோ கணக்கிட்டார். பிறகு பிரசர் செக் செய்துவிட்டு அங்கேயே பிரக்னன்சி கிட் கொடுத்து சிறுநீர் பரிசோதனை செய்யச் சொன்னார்.

தாய்மையின் ஓர் அங்கம் : பூரித்துப் போனோம். ஆம்…நான் தாயாகப்போகிறேன், நாங்கள் எங்கள் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்தை நோக்கி அடியெடுத்து வைக்கப்போகிறோம். எங்கள் உருவத்தை வாரியெடுத்து எங்களைப் போலவே ஒரு குட்டி உருவம் இன்னும் சில மாதங்களில் எங்கள் கைகளில் தவளப்போகிறது. கர்பிணிகள் சந்திக்கும் சில தொந்தரவுகளை எல்லாம் நான் மிகவும் சந்தோசத்துடன் எதிர்கொண்டேன். அதை தொந்தரவு என்று சொல்வதை விட தாய்மையின் ஓர் அங்கம் என்று சொல்வது தான் எனக்கு பொருத்தமாக தோன்றுகிறது.

ஸ்கேன் : ஆறாம் மாதம் செக்கப் சென்றிருந்தோம். வயிறு கொஞ்சம் மேடிட்டிருந்தது.முகமே வீங்கி பூரிப்பாக இருந்ததைக் கண்டு உனக்கு பொண்ணு தான் பொறப்பா என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். பொண்ணோ பையனோ அது என் குழந்தை என்று நினைத்துக் கொண்டேன். ஸ்கேன் எடுக்க வேண்டும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்லி ஒரு லிட்டர் வாட்டர் கேனை கையில் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கச் சொல்லி காத்திருக்க சொல்லிவிட்டார்கள்.

குழந்தையின் உருவம் : மருத்துவமனைகளில் போடப்பட்டிருக்கும் சேரில் நிலையாக உட்கார முடியாமல் சிறிது தூரம் நடந்து சென்று வருவது… அங்கிருக்கும் பால்கனியில் வேடிக்கை பார்த்து திசைதிருப்பிக் கொள்வதுமாய் இருந்தேன்.முழுதாக ஒரு மணி நேரம் கரைந்த நிலையில் எங்களை உள்ளே அழைத்தார்கள். முதலில் நான் சென்றேன். வாசலில் இருந்த பெண்மணி என் ஹேண்ட் பேகை வாங்கி கொண்டார். வாசலிலேயே செருப்பை கழற்றச் சொல்லிவிட்டு எதிரில் போடப்பட்டிருந்த கட்டிலில் படுத்துக் கொள்ளச் சொன்னார்.

இருட்டறை : ஏறி படுத்துக் கொண்டேன். எனக்கு பக்கவாட்டில் ஒரு மருத்துவர்.தலைக்கு மேல் ஒரு கணினி. கையிலிருந்த கையடக்க மெஷினில் ஒரு ஜெல்லைத் தடவி என் வயிற்றுப் பகுதியில் தடவிக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் நேராக படுக்க முடியாமல் மூச்சு வாங்க… பீ கம்ஃபர்டபிள் ரிலாக்ஸா இருங்க… உங்கள ஒண்ணும் பண்ணப்போறதில்ல உள்ள பாப்பா எப்டி இருக்குனு பாக்கப்போறோம் சரியா? நல்லா தண்ணீ குடிச்சீங்களா? என்று கேள்விக் கேட்டுக் கொண்டே அந்த மருத்துவர் ஸ்கேன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார். ஐந்து நிமிடம் இப்படியே ஓடியது.

பதட்டம் : ஹான்…. சட்டென மருத்துவரின் உற்சாக குரல். பேஷண்ட் கூட வந்தவங்க யாரு? வர சொல்லுங்க… என்னாச்சு டாக்டர்? எதாவது பிரச்சனையா என்று எழ முயற்சித்தேன். அதெல்லாம் ஒண்ணுமில்ல இப்டி எல்லாம் நடுவுல எந்திரிக்க கூடாது. படுங்க.. நான் சொல்ற வரைக்கும் எந்தரிக்க கூடாது என்று சொல்லி படுக்க வைத்தார். என் கணவர் உள்ளே வந்தார். போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யச் சொல்லி அலறினார்கள். அவரும் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு எனக்கு பக்கவாட்டில் உட்கார்ந்திருந்த மருத்துவருக்கு பின்னால் வந்து நின்று கொண்டார்.

சாராம்சம் : அவரும் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு… சொல்லுங்க டாக்டர் எனி இஸ்ஸூஸ் என்றார்? நான் மருத்துவர் என்ன வில்லங்கமான ஒன்றை சொல்லிடப்போகிறார் என்று அவர் வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன். முழுவதும் இருட்டு… கணினியின் வெளிச்சத்தில் அந்த மருத்துவர் அணிந்திருந்த கண்ணாடியின் தங்க நிற ஃப்ரேம் மட்டும் பளபளப்பாக தெரிய அவரின் கண்களையும் வாயையும் பார்த்துக் கொண்டிருந்தேன். வாய் சொல்வதற்கு முன்னால் கண்கள் மூலமாக அவர் சொல்ல வருகிற விஷயத்தின் சாராம்சத்தையாவது தெரிந்து விடாதா என்ற ஏக்கம் தான்.

பதில் சொல்லும் நிலையில் இல்லை : கணினியின் பக்கமாக திரும்பி பேபி ரொம்ப ஹெல்தியா இருக்கு.. ஒரு ப்ராப்ளமும் இல்ல… இன்னும் வாமிட் சென்ஷேசன் இருக்கு போல… என்று சொல்லிக் கொண்டே ஹார்ட் பீட் கேக்குறீங்களா என்று கேட்டார். நாங்கள் இருவரும் பதில் சொல்லும் நிலையில் இல்லை.கணவர் தலையாட்டினார்.

உள்ளே உணர்கிறேன் : இந்தப் பக்கம் வாங்க என்று சொல்லி கணவரை எனக்கு அருகில் கணினியை நேராக பார்க்கும் வண்ணம் வரச்சொன்னார். என் கட்டிலுக்கு அருகில் கால் பகுதியில் இடமிருந்தால் அங்கே உட்கார்ந்து கொண்டார். அவருக்கு நேராக இருந்த கணினியை எங்கள் பக்கம் திருப்பினார். நான் தலையை ஒரு பக்கமாக சாய்த்து மேலே எட்டிப் பார்க்க வேண்டியதாய் இருந்தது. இதோ தெரியுது பாருங்க அது தான் பாப்பா கை விரல்… இது தலை இப்போ பாப்பா அந்தப்பக்கம் திரும்பியிருக்கு என்று அவர் ஒவ்வொரு பகுதியாக விவரிக்க உள்ளே நான் உணர்ந்து கொண்டேயிருந்தேன்.

இதென்ன அழும் சமாச்சாரமா? : குழந்தையின் ஒவ்வொரு அசைவை பார்க்கும் போது… எனக்குள்ளே வா ஓர் உயிர் இப்படி அசைந்து கொண்டிருக்கிறது என்று ஆச்சரியமாய் இருக்கும். மருத்துவர் எதையோ நோண்ட ஷ்ஷ்…. என்று சப்தம் இரண்டே நொடிகளில் டப்… டப்… டப்…என்று சீரான இடைவேளியுடன் ஒரு சத்தம். குழந்தை ஹார்ட் பீட் என்று மருத்துவர் சொல்ல. ஒரு கணம் விக்கித்து தான் போனோம். எனக்கு அங்கேயே தாரை தாரையாக கண்ணீர் ஊற்றியது, ஏன் அழுதேன்… அதென்ன அழும் சாமாச்சாராமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. உணர்ச்சிப் பெருக்கில் எனக்கு கண்ணீர் பெருகியது.

பாப்பா வயித்துக்குள்ள என்ன பண்ணும் : எனக்கு கீழே உட்கார்ந்திருந்த கணவர் என்னை பார்க்கிறார். கணினித் திரையை மாறி மாறி பார்க்கிறார். மருத்துவர் சொல்வது எல்லாம் அவர் காதில் விழுந்ததா எல்லாம் தெரியவில்லை. கண்களை அகல விரித்து மாறி மாறி பார்ப்பதிலிருந்தே அவரும் உணர்சிவசத்துடன் இருப்பது யூகிக்க முடிந்தது. அதன் பிறகு அவர் என்னுடன் பேசியது நடந்து கொண்டது எல்லாமே மரியாதையுடன் தான் இருந்தது. அடிக்கடி என் வயிற்றைத் தடவிப் பார்த்து. உள்ள நம்ம பாப்பா இருக்குல்ல…இப்போ என்ன பண்ணிட்டு இருக்கும்.. என்று எதாவது கேட்டுக் கொண்டேயிருப்பார்.

பிரசவ வலி : நாங்கள் எல்லாரும் ஆவலுடன் காத்திருந்த அந்த நாளும் வந்தது. பிப்ரவரி பதினொன்று எனக்கு பிரசவ தேதி குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் எனக்கு ஏழாம் தேதியே வலியெடுக்க ஆரம்பித்தது. காலையில் அவர் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்க. எனக்கு லேசாக இடுப்பு வலிக்கிறது. உட்கார முடியவில்லை என்றேன். சரி வா.. போற வழில உன்ன ஹாஸ்பிட்டல்ல விட்டுட்டு போறேன். அப்பறம் ஆஃபிஸ் போய்ட்டு ஒரு இரண்டு மணி நேரம் பெர்மிஷன் போட்டுட்டு வந்து உன்னைய வீட்ல வந்து விட்டிடறேன் என்றார். இருவரும் மருத்துவமனைக்கு கிளம்பினோம்.

கணவரின் அரவணைப்பு : காரில் சரியாக உட்கார முடியவில்லை. வயிறு அப்படியே கீழே இறங்கியது போல் தோன்றியது. எங்கே குழந்தை நழுவி கீழே விழுந்திடுமோ என்று பதட்டமாகவும் இருந்தது. சாதரணமாக கார் அசைவிற்கே என்னால் தாங்க முடியவில்லை. காரை உருட்டிச் செல்லும் வேகத்தில் செல்பவரிடம் மெதுவா போங்க மெதுவா போங்க என்று அனத்திக் கொண்டிருந்தேன், அவருக்கு காரை ஓட்டுவதா அல்லது என்னை தோல் சாய்த்து சமாதானம் சொல்வதா என்றே தெரியவில்லை. சரிம்மா… மெதுவா போறேன். ரெண்டு நிமிஷத்துல ஹாஸ்பிட்டல் போய்டலாம். நீ கொஞ்சம் தைரியமா இரு என்று சொல்லிக் கொண்டே வந்தார்.

மருத்துவமனை : மருத்துவமனை நெருங்கிவிட்டோம். நேராக மருத்துவமனை வாசலில் காரை நிறுத்தி என் பக்க கதவை திறக்க ஓடி வந்தார். கதவை திறந்து விட்டு என்னை வெளியில் வரச் சொன்னார். காலை எப்படி வெளியில் எடுத்து வைப்பது என்றே எனக்கு குழப்பமாய் இருந்தது. அதை விட எனக்கு காலை நகர்த்தவே மிகவும் சிரமமாய் இருந்தது. இடுப்புக்கு கீழே எதையோ போட்டு அழுத்துவது போல ஓர் உணர்வு, அந்த உணர்வு இப்போது நினைத்தாலும் நடுங்கும். இந்த நொடியில் நான் சாகப்போகிறேன். இது தான் கடைசி நிமிடம் என்று நினைக்கும் அளவிற்கு இருந்தது. மெதுவா வா… எதுவுமில்ல பாத்து மொதோ இந்த கால கொஞ்சம் நகர்த்து அப்டியே வெளிய வை… நா இருக்கேன்ல பிடிச்சுப்பேன். நீ ஒண்ணும் விழ மாட்ட என்று சொல்லிக் கொண்டேயிருந்தார் என் கணவர்.

கணவரின் வார்த்தைகள் : இல்லை என்னால் முடியவில்லை எழக்கூட முடியவில்லை என்று சொன்னதும். மருத்துவமனையிலிருந்து வீல் சேர் கொண்டு வரப்பட்டது. என் காலை ஒருவரி பிடித்துக் கொள்ள. என் தோள்பட்டையை தூக்கி அப்படியே அந்த வீல் சேரில் உட்கார வைத்தார். பார்த்தால் கார் சீட் முழுவதும் ஈரம். தள்ளுங்க சார் தண்ணி குடம் உடஞ்சிரிச்சு என்று சொல்லிக் கொண்டே என்னை உள்ளே தள்ளிக்கொண்டு ஓடினார் ஒரு வார்டு பாய். அவர் என்ன செய்ய ? என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்த அந்த நொடி இன்னமும் என் கண்களில் நிற்கிறது. நான் இருக்கேன்ல புடிச்சுப்பேன் விழுந்திர மாட்ட என்று என் கணவர் சொன்ன வார்த்தைகள் மட்டும் காதில் கேட்டுக் கொண்டேயிருந்தது.

டெலிவரி : டெலிவரி ஆகுற ஸ்டேஜ்… இன்னும் கொஞ்ச நேரத்துல குழந்த பொறந்திடும் என்று சொல்லி என்னை படுக்க வைத்தார்கள். இரண்டு மணி நேரம் ஆகியும் எனக்கு வலி அதிகரிக்கவில்லை. நான் கட்டிலில் படுத்திருக்க என் கைகளை இறுக்கப்பற்றியபடி என் கணவர் அமர்ந்திருந்தார். பல பரிசோதனைகள், மற்றும் முன்னெடுப்புகளுக்கு பிறகும் மாலை வரை காத்திருந்தும் குழந்தை பிறக்காததால் சிசேரியன் செய்யலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இரவு எட்டு மணிக்கு ஆப்ரேஷன் தியேட்டருக்குள் கொண்டு செல்லப்பட்டேன். பயப்படாதா… உனக்கு ஒண்ணுமில்ல கொஞ்ச நேரம் தான் ப்ளீஸ் மா என்று கையைபிடித்து கெஞ்சி உள்ளே அனுப்பினார். மருத்துவர் நீங்களும் உள்ளே வரலாம் என்று அழைத்தும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

சிசேரியன் : ஆடையை கழற்றச் சொல்லி நிர்வாணமாக படுக்க வைத்திருந்தார்கள். எதையாவது செய்து தொலை இந்த அவஸ்தையிலிருந்து என்னை எப்படியாவது காப்பாற்றினால் போதும் என்று அனத்திக் கொண்டிருந்தேன். நர்ஸ் ஒருவர் வந்து கழுத்து வரை போர்த்திவிட்டு, இப்போ அனஸ்தீஸ்யா கொடுக்கப்போறாங்க கொஞ்சம் கோஆப்ரேட் பண்ணுங்க… அப்போ தான் குழந்தைய சீக்கிரம் வெளிய எடுக்க முடியும் என்று சொல்லிவிட்டு சென்றார். முதலில் எழுந்து உட்காரச் சொல்லி எவ்வளவு தூரம் தலையை கால் முட்டியை முட்டும் அளவிற்கு குனியச் சொன்னார்கள்.

வயிறு கீழே இறங்கியிருந்ததால் ஓரளவுக்கு மேல் என்னால் அதனைச் செய்ய முடியவில்லை. பிறகு ஒருக்களித்து படுக்கச் சொல்லி அதே போல செய்யச் சொன்னார்கள். ஊசி போடப்பட்டது. பின் நேராக படுக்கச் சொன்னார் அந்த அனஸ்தீஸ்யா மருத்துவர். என் வயதொத்த இளைஞர் தான். அருகிலேயே உட்கார்ந்து கொண்டார். அரை மயக்கமாய் இருந்தது… ஒரு பக்கம் வலி ஒரு பக்கம் எதோ நடக்கிறது என்ற உணர்ந்து கொண்டிருக்கும் போதே ஒரு வித மயக்கம் எல்லாமே புதுமையான அனுபவமாய் இருந்தது.

அனஸ்தீஸ்யா : ம்ம்… ஒகே டாக்டர் இன்னமொரு பதினஞ்சு நிமிஷம்… என்று என்னருகில் உட்கார்ந்திருந்த மருத்துவர் சொல்வது நன்றாக கேட்டது. என் கால் பகுதியில் யாரோ ஆப்ரேஷனுக்கு தேவையான உபகரணங்களை தயார் செய்து கொண்டிருப்பார் போல சத்தம் கேட்டது. மெதுவாக என் பெயரைச் சொல்லி காதருகில் அழைத்தார். நான் தலையாட்டினேன். தூக்கம் வருதா.. லேசா தூக்கம் வர்ற மாதிரி இருக்கும் அப்பறம் சரியாகிடும். என்று சொல்லிக் கொண்டே என் நெற்றி… கன்னங்களை வருடினான் அந்த அனஸ்தீஸ்யா கொடுத்த மருத்துவன்.அவன் தொடுதலில் வித்யாசம் தெரிந்தது.

உங்களுக்கு ஒண்ணுமில்ல என்று சொல்லிக்கொண்டே என் உதட்டை தடவினான். காலையில என்ன சாப்டீங்க என்று ஒரு கேள்வி வேறு.

கழுத்துக்கு கீழே : கைய எடுறா பொறுக்கி என்று கத்த மனதில் தோன்றினாலும் அதை என்னால் செயல்படுத்த முடியவில்லை. நீ செய்வதில் எனக்கு விருப்பமில்லை என்று அவனுக்கு உணர்த்தும் பொருட்டு முகத்தை திருப்புவது, என் கணவரை அழைப்பது, வதிகமாக வலிக்கிறது என்று கத்துவது என்று அவனை தவிர்த்துக் கொண்டேயிருந்தேன். இன்னுமா வலிக்குது? வலி இருக்காதே… என்று சொல்லி மெல்ல கழுத்துக்கு கீழே கையை இறக்கினான். இதற்கு மேலும் பொறுத்திருக்க முடியாது என்று சொல்லி படுத்திருந்த பெட்டை இறுக்கமாக பிடித்திருந்த கையை தூக்கி அவன் கையை தட்டி விட்டேன். அப்படியிருந்தும் சில நிமிடங்கள் அவன் சில்மிஷங்கள் தொடரத்தான் செய்தது.

நக்கல் சிரிப்பு : சிசேரியன் செய்யப்பட்டு குழந்தை பிறந்திருந்தது. மகள் பிறந்திருக்கிறாள் என்று சொன்னார்கள். தனியறைக்கு மாற்றப்பட்டேன். மறு நாள் காலை கணவர் உணவு வாங்கி வருவதற்காக வெளியில் சென்ற நேரத்தில் அந்த அனஸ்தீஸ்யா மருத்துவன் உள்ளே நுழைந்தான். குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. என்ன பொண்ணு பிறந்திருக்க போல என்று சொல்லி மீண்டும் என் கன்னங்களை வருடினான். இப்போது கொஞ்சம் முழிப்புடன் இருந்ததால் சட்டென அவன் கையை பிடித்து தள்ளிவிட்டேன். அடேயப்பா கோவத்த பாருடா என்று ஒரு நக்கல் சிரிப்பு வேறு…

நம்பிக்கையின்மை : என் கணவர் கதவைத் திறந்தும் சற்று விலகினான். நான் அனஸ்தீஸிஸ்ட் செக் பண்ண வந்தேன். இன்னும் ஒரு டூ ஹவர்ஸ் இப்டி தான் இருக்கும் அப்பறம் நார்மல் ஆகிடுவாங்க. நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும் எந்தப் பிரச்சனையும் இல்ல…ஷீ வில் பி ஆல்ரைட் என்று அவரிடம் கை குலுக்கிவிட்டு சென்று விட்டான். அவன் சென்றதுமே கணவரிடம் சொன்னேன். ஏங்க அவன் சரியான பொறுக்கி உள்ள எனக்கு அனஸ்தீஸ்யா கொடுக்கும் போது என்னவெல்லாம் பண்ணான் தெரியுமா? பொம்பளப்பொறுக்கி நாயி…. பொணத்த கூட விட்டு வைக்கமாட்டன் போல பொணந்திண்ணி கழுகு என்று முணுமுணுத்துக் கொண்டிருப்பதை பார்த்து… ஏய்… லூசாடி நீ.. அவர் எவ்ளோ டீசண்ட்டா பேசுறாரு பொறுக்கி அது இதுன்னுட்டு.. மயக்கத்துல லூசு மாதிரி உளறிட்டு இருக்காத தேவையில்லாம கற்பனை பண்ணாம ரெஸ்ட் எடு என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

அதிரச் செய்த வார்த்தைகள் : அவர் நான் சொன்னதை கேட்டு அவனை திட்டவில்லை என்றாலும் பரவாயில்லை நான் சொல்வது பொய் நானாக எதையாவது நினைத்து உளறிக் கொண்டிருக்கிறேன் என்று எனை நம்பாமல் சொன்னது தான் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல இருந்தது. என் தலையெழுத்து என்று நினைத்துக் கொண்டேன். என் கணவர் மீதிருந்த மதிப்பும் மரியாதையும் ஒரு கணம் என்னை அதிரச் செய்தது என்னவோ உண்மை தான்.

இரண்டாவது குழந்தை : அப்படியே அதை மறந்தும் போனேன். குழந்தையை க்ரீச்சில் விட்டுவிட்டு இருவரும் அலுவலகம் செல்லும் பரபரப்பான வாழ்க்கையில் ஐக்கியமானோம். அவளுக்கு ஐந்து வயதான போது இரண்டாவது குழந்தை கர்ப்பமானேன். வேண்டாம். இந்தக்குழந்தையே வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தேன். ஏன் வேணாம்? என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் என் ஒரே பதில் என் முதல் பிரசவத்தின் போது நடந்த அனுபவம் தான். அதை என் கணவரே நம்பாத போது வேறு யார் நம்புவார்? அவர்களிடம் எப்படி புரியவைப்பது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. எதுக்கு இந்தப் பிரச்சனை குழந்தை வேண்டாம் என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைத்து திரும்ப திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தேன். குழந்தை வேண்டாம் என்பதற்கு பல காரணங்களையும் நானாகவே தேடிக் கண்டுபிடித்து உருவாக்கிக் கொண்டேன்.

காரணம் : கணவர் உன் இஷ்டம் என்று சொன்னாலும் மாமியாரும் மருத்துவரும் சுத்தமாக ஒப்புக் கொள்ளவில்லை. உயிருக்கே ஆபத்தாய் முடிந்திடும் என்று எல்லாரும் எச்சரிக்க வேறு வழியின்றி கருக்கலைக்காமல் தொடர்ந்தேன். பிரசவ வேதனையை விட அந்த அனஸ்தீஸ்யா மருத்துவரின் செய்கைகள் தான் எனக்கு மிகவும் அருவருப்பாய் இருந்தது.

பாலியல் சீண்டல் : பிரசவ தேதி நெருங்கியது. மகளை பார்த்துக் கொள்ள ஆளில்லை என்பதால் இப்போது நாங்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்டோம். முதல் குழந்தை சிசேரியன் என்பதால் இரண்டாவதும் கண்டிப்பாக சிசேரியன் தான் என்று உறுதியாக தெரியும். பிரசவ வலியில் கத்துகிறேனோ இல்லையோ யாராவது என் உடலை பாலியல் சீண்டலாக தொட்டால் மருத்துவமனையே கத்தி அலற வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அனஸ்தீஸ்யா மருத்துவர் நுழைந்தார் : பிரசவ அறைக்கு கொண்டு செல்லப்பட்டேன். அதே போல நிர்வாணமாய் கிடத்தப்பட்டேன். குழந்தை பிறக்கப்போகிறது என்பதை விட அன்ஸ்தீஸ்யா மருத்துவர் எப்படி நடந்து கொள்வானோ என்கிற பதட்டம் என்னை அச்சுறுத்தலாய் இருந்தது. தடாலடியாக ஒரு மருத்துவர் உள்ளே நுழைந்தார். சிஸ்டர் இங்க வாங்க… எத்தன வாட்டி சொல்லியிருக்கேன் இப்டி பேஷண்ட்ட படுக்க வைக்காதீங்கன்னு என்று சொல்லி அவரே போர்த்தி விட்டார். முன்னால் நடந்த அனுபவமும் இப்போது நடக்கிற அனுபவமும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. ஊசியை எடுத்துக்கொண்டு என்னருகில் வர வலியை மீறிய அழுகை எட்டிப்பார்த்து.

ரிலாக்ஸ்… இது செக்கண்ட் பேபி தான ஏன் இவ்ளோ நெர்வசா இருக்கிங்க என்று சொல்லிக் கொண்டே குனிந்து உட்காரச் சொன்னான். இப்படியே இறந்துவிட வேண்டும். நான் அவளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் தான் இறந்து விட்டேன் என்று நினைத்து கூனிக் குறுக வேண்டும் நினைத்தேன்.

மனிதாபிமானம் : ஊசி போட்டதும் சில நிமிடங்கள் என்னருகில் உட்கார்ந்திருந்தான். மயக்கம் வர அதையும் மீறி முழிப்புடன் இருக்க முயற்சி செய்தேன். எதுவும் பேச வில்லை. சிறிது நேரம் கழித்து என் பெயரைச் சொல்லி இரண்டு முறை அழைத்தான். கன்னத்தை திருப்பி கேக்குதா? காலைல என்ன சாப்டீங்க என்று கேட்டான். பதிலேதும் சொல்ல முடியவில்லை. கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். சிசேரியன் நடந்தது…

மகன் பிறந்திருந்தான். அவனை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை ஒரு பெண்ணை மதிக்கும், இக்கட்டான சூழலிலும் பாலியல் பொம்மையாக பார்க்க கூடாத ஒரு மனிதாபிமானம் மிக்க ஒருவனாக வளர்க்க வேண்டும் என்று உறுதியேற்றுக் கொண்டேன்.16 1510822122 5

Related posts

இரட்டைக் குழந்தையை சுமக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் நீரிழிவு பிரச்சனை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம்.

nathan

குழந்தை நோய் தொற்றில் இருந்து பாதுக்க

nathan

கருத்தரித்த பெண்களுக்கு மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்

nathan

பிரசவத்தின் போது ஏற்படும் உடல் உபாதைகள்

nathan

கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்?..!!

nathan

கர்ப்ப காலத்தில் எப்போது ஸ்கேன் எடுக்க வேண்டும்?

nathan

மார்பகத் தொற்று -தெரிந்துகொள்வோமா?

nathan

குழந்தை எடை குறைவாக பிறப்பதற்கு காரணம் என்ன?

nathan