ஒருவரது அழகை புன்னகை அதிகரித்துக் காட்டும். அப்படி புன்னகைக்கும் போது பற்கள் மஞ்சளாக இருந்தால், அது அவர்களது அழகையே பாழாக்கும். மேலும் ஒருவருக்கு வாய் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். வாய் சுத்தமாகவும், ஆரோக்கியத்துடனும் இல்லாவிட்டால், கடுமையான துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிடும்.
வாயில் பாக்டீரியாக்களானது பற்களின் இடுக்குகளில் தான் அதிகம் பெருக்கமடையும். அதிலும் ஒருவரது பற்களின் மேல் மஞ்சள் நிறத்தில் வழுவழுப்பான படலம் இருப்பின், அவர்களது வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகம் உள்ளது என்று அர்த்தம். அத்தகையவர்கள் உடனே அதை நீக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
என்ன தான் டூத் பேஸ்ட்டுகள் கொண்டு பற்களைத் துலக்கினாலும், பற்களில் உள்ள மஞ்சள் நிற படலம் போகாது. மாறாக இயற்கைப் பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், பற்கள் வெள்ளையாவதோடு, வாயின் ஆரோக்கியமும் மேம்படும். இக்கட்டுரையில் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை எளிதில் அகற்றும் எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய் உடல் ஆரோக்கியத்துடன், வாய் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். தேங்காய் எண்ணெயில் உள்ள சக்திவாய்ந்த உட்பொருட்கள், பற்களில் உள்ள கறைகளைப் போக்குவதோடு, பல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளையும் தடுக்கும்.
பேக்கிங் சோடா பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க உதவும் மற்றொரு அற்புத பொருள் தான் பேக்கிங் சோடா. இது பற்களை சொத்தையாக்கும் அமிலங்களை நீர்க்கச் செய்வதோடு, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கும். மேலும் ஆய்வுகளும் பேக்கிங் சோடா அல்லது பேக்கிங் பவுடர் பற்களில் படிந்துள்ள நீங்கா கறைகளைப் போக்குவதில் சிறந்தது என கூறுகின்றன. ஆனால் இந்த பொருளை அளவாகப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.
தயாரிக்கும் முறை: சில துளிகள் புதினா எண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை: தயாரித்து வைத்துள்ள கலவையை டூத் பிரஷ் பயன்படுத்தி, காலை மற்றும் இரவு நேரங்களில் பற்களைத் துலக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 1 முறை என ஒரு மாதம் செய்தால், பற்களில் படிந்துள்ள நீங்கா மஞ்சள் கறையை எளிதில் போக்கலாம். கீழே பற்களில் உள்ள கறைகளைப் போக்கும் வேறு சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வழி #1 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, பின் ஈரமான டூத் பிரஷ் கொண்டு தொட்டு பற்களைத் துலக்குவதால், மஞ்சள் கறைகள் விரைவில் போகும்.
வழி #2 மற்றொரு சிறப்பான வழி பேக்கிங் சோடாவை ஹைட்ரஜன் பெராக்ஸைடுடன் கலந்து, அக்கலவையால் ஈறுகள் மற்றும் பற்களைத் தேய்த்து, பின் நீரால் வாயைக் கொப்பளிக்க, பளிச் பற்களைப் பெறலாம்.
வழி #3 இன்னும் எளிய வழி வேண்டுமானால், ஈரமான டூத் பிரஷ்ஷை பேக்கிங் சோடாவில் தொட்டு, பற்களைத் துலக்கி, வெதுவெதுப்பான நீரால் வாயைக் கழுவ, பற்களில் உள்ள மஞ்சள் படலம் நீங்கும்.
வழி #4 தேங்காய் எண்ணெயில் சக்தி வாய்ந்த லாரிக் அமிலம் உள்ளது. ஆகவே தொடர்ந்து ஒரு மாதம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி தினமும் ஆயில் புல்லிங் செய்து வர, ஈறு நோய்கள் மற்றும் பற்களில் உள்ள மஞ்சள் படலத்தின் அளவு குறைந்து, வாய் புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் இருக்கும்.