தற்போது பனி அதிகம் பொழிகிறது. இதனால் ஏராளமான சரும பிரச்சனைகளை பலரும் சந்திப்பார்கள். குறிப்பாக வறட்சியான சருமம் கொண்டவர்கள் அதிகளவு கஷ்டப்படுவார்கள். ஏனெனில் பனியானது சருமத்தில் உள்ள ஈரப்பசையை முற்றியும் நீக்கி, சருமத்தில் வெடிப்புக்களை ஏற்படுத்தும். சரும வெடிப்புகள் தீவிரமாகும் போது, அதிலிருந்து சில சமயங்களில் தொற்றுகள் மற்றும் இரத்தக்கசிவு கூட ஏற்படலாம்.
எனவே சரும வறட்சியைத் தடுப்பதற்கு பலரும் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவார்கள். வறட்சியைப் போக்க என்ன தான் மாய்ஸ்சுரைசர் இருந்தாலும், குறிப்பிட்ட நேரம் வரை தான் இருக்கும். மேலும் மாய்ஸ்சுரைசர்களில் உள்ள கெமிக்கல்கள் சிலருக்கு பக்கவிளைவை ஏற்படுத்தலாம். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை சரும வறட்சியைத் தடுத்து, சருமத்தில் இயற்கையாகவே சுரக்கப்படும் எண்ணெய் பசையின் அளவை தூண்டும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால், சருமம் மென்மையாகி சரும செல்களின் ஆரோக்கியமும் மேம்படும்.
கற்றாழை சரும வறட்சியைப் போக்க உதவும் மூலிகைகளில் ஒன்று தான் கற்றாழை. கற்றாழையில் உள்ள மாய்ஸ்சுரைசிங் பண்புகள், சருமத்தில் ஈரப்பசையைத் தக்க வைக்க உதவும். வறட்சியான சருமத்தைக் கொண்டவர்கள் தினமும் கற்றாழை ஜெல்லை முகம், கை, கால்களில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து கழுவி வர, வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.
பப்பாளி பப்பாளியில் உள்ள பண்புகள், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ, வறட்சியைப் போக்குவதோடு, பாதிக்கப்பட்ட சருமத்திற்கு புத்துயிர் அளித்து சரிசெய்யும். அதற்கு நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, வறட்சியான பகுதிகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
அவகேடோ அவகேடோ பழத்தில் உள்ள ஃபேட்டி அமிலங்கள், சருமத்தில் ஈரப்பசையைத் தக்கவைப்பதோடு, சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து, சரும தோற்றத்தை மேம்படுத்தும். அதற்கு பாதி அவகேடோ பழத்தை மசித்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. வறட்சியான சருமத்தினருக்கு இது மிகவும் ஏற்ற பொருள். இது பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்வதோடு, சருமத்தின் ஈரப்பசையைத் தக்க வைக்கவும் செய்யும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சூரியக்கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை தடுப்பதோடு, சருமத்தை மென்மையாகவும் வைத்துக் கொள்ளும். எனவே வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி, அதை முகம் மற்றும் வறட்சியான பகுதிகளில் தினமும் பலமுறை தடவ வேண்டும்.
வேப்பிலை எண்ணெய் வேப்பிலை மிகச்சிறப்பான ஆன்டி-செப்டிக். அதிலும் இதை எண்ணெய் வடிவில் சருமத்திற்கு பயன்படுத்தும் போது, சரும அரிப்பு மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதோடு இது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். ஆகவே சரும வறட்சி அதிகம் இருந்தால் வேப்பிலை எண்ணெயை கை, கால்களில் தினமும் தவறாமல் தடவுங்கள்.
குறிப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளைப் பின்பற்றுவதுடன், சரியான உணவு முறைகளினாலும் சரும வறட்சியைத் தடுக்கலாம். அதிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம் சரும செல்கள் வலிமையடைவதோடு, ஊட்டம் பெற்று, சருமம் வறட்சி அடைவது தடுக்கப்படும்.