சமீப காலமாக மக்கள் தங்கள் அழகை மெருகேற்றுவதற்கு கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து, காலங்காலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அழகைக் கெடுக்கும் வகையில் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நம் வீட்டு சமையலறையிலேயே நிவாரணிகள் உள்ளன.
அதில் ஒன்று தான் எலுமிச்சை. இதில் உள்ள வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம் மற்றும் இதர உட்பொருட்கள் சரும பிரச்சனைகளை விரைவில் போக்கும். முக்கியமாக எலுமிச்சை சருமத்தில் உள்ள கருமைகளைப் போக்க வல்லது. ஆகவே உங்கள் முகம், கை, கால் போன்றவற்றில் கருமை அதிகம் இருந்தால், எளிதில் கிடைக்கும் எலுமிச்சையைக் கொண்டு நீக்குங்கள்.
இக்கட்டுரையில் சருமத்தில் உள்ள நீங்கா கருமையைப் போக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள். குறிப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை மேற்கொள்ளும் முன், அதை கையின் சிறு பகுதியில் தடவி ஊற வைத்து, பின் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாமல் இருந்தால் மேற்கொள்ளுங்கள்.
எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளரிக்காய் * ஒரு பௌலில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட்டை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். * பின் அதை கருமையாக உள்ள பகுதிகளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். * இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை மேற்கொண்டால், சருமத்தில் உள்ள கருமை முற்றிலும் போய்விடும்.
எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் * 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். * பின் அதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, 5-10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். * இந்த கலவையை வாரத்திற்கு 2 முறை சருமத்தில் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.
எலுமிச்சை சாறு மற்றும் மோர் * 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் 2 டீஸ்பூன் மோர் சேர்த்து கலந்து, கருமையாக உள்ள பகுதியில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரால் அந்த பகுதியை அலசுங்கள். * இந்த முறையை குறைந்தது வாரத்திற்கு 2-3 முறை மேற்கொள்ளுங்கள். இதனால் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
எலுமிச்சை சாறு மற்றும் தயிர் * அடுத்ததாக 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து, கருமையாக இருக்கும் சருமப் பகுதியில் தடவி 5 நிமிடம் நன்கு ஊற வையுங்கள். * பின்பு வெதுவெதுப்பான நீரால் அப்பகுதியைக் கழுவுங்கள். பின் ரோஸ் வாட்டர் போன்ற டோனரால் சருமத்தைத் துடையுங்கள். * இந்த முறையை தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையை முற்றிலும் போக்கலாம்.
எலுமிச்சை சாறு, கற்றாழை மற்றும் ஆரஞ்சு தோல் பவுடர் * ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 சிட்டிகை ஆரஞ்சு தோல் பவுடர் போன்றவற்றை எடுத்துக் கொண்டு, நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அந்த கலவையை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 10 நிமிடம் உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். * இந்த முறையை வாரத்தில் ஒரு முறை தவறாமல் மேற்கொண்டால், ஒரே மாதத்தில் கருமை முற்றிலும் போய்விடும்.
எலுமிச்சை சாறு, கடலை மாவு மற்றும் தேன் * 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1/2 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். * பின் பாதிக்கப்பட்ட பகுதியை நீரால் முதலில் ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு தயாரித்து வைத்துள்ள கலவையை தடவுங்கள். * பின்பு 10-15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். * இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை மேற்கொள்ள கருமை விரைவில் மறையும்.
எலுமிச்சை சாறு மற்றும் ஓட்ஸ் * ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கருமையாக உள்ள பகுதியில் தடவி மென்மையாக 5-10 நிமிடம் ஸ்கரப் செய்யுங்கள். * பின்பு வெதுவெதுப்பான நீரால் அப்பகுதியைக் கழுவுங்கள். * இந்த ஸ்கரப்பை வாரத்திற்கு 2 முறை பின்பற்றுங்கள். இதனால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
எலுமிச்சை சாறு மற்றும் பப்பாளி * 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் சிறிது பப்பாளி பழக்கூழ் சேர்த்து கலந்து, சருமத்தில் கருமையாக உள்ள பகுதியில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். * இந்த முறையை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், கருமை வேகமாக போய்விடும்.